என் மலர்

  செய்திகள்

  அக்கறை காட்டலாம்; ‘கறை’ விழ அனுமதிக்கக் கூடாது!- தலையங்கம்
  X

  அக்கறை காட்டலாம்; ‘கறை’ விழ அனுமதிக்கக் கூடாது!- தலையங்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருந்தாதவன் வருந்தியாக வேண்டும். அந்த உணர்வின் வெளிப்பாடுதான் பாராளுமன்றத்தில் அத்தனை கட்சியினரையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது.

  சென்னை:

  திருந்தாதவன் வருந்தியாக வேண்டும். அந்த உணர்வின் வெளிப்பாடுதான் பாராளுமன்றத்தில் அத்தனை கட்சியினரையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது.

  எல்லை மீறி பாகிஸ்தான் கொடுக்கும் தொல்லையும் அதை மிகப்பொறுமையுடன் தாங்கியும் அவ்வப்போது பதிலடி கொடுத்தும் இந்தியா தனது ஆவேசத்தை அடக்கி கொள்வதை உலக நாடுகள் கவனித்துதான் வருகின்றன.

  பாகிஸ்தான் பயங்கரவாதத்தில் மட்டுமல்ல எல்லா வி‌ஷயங்களிலும் இந்தியா மீது தனது வெறுப்பை காட்டி அவமதித்து வருகிறது என்பதற்கு அண்மையில் நடைபெற்ற குல்பூ‌ஷன் ஜாதவுடன் அவரது குடும்பத்தினர் சந்தித்தபோது பாகிஸ்தான் நடந்து கொண்டவிதம் இதுதான் அவர்கள் பண்பாடு என்பதை காட்டுகிறது.

  தூக்கில் தொங்கவிடும் குற்றவாளியிடம் கூட கடைசி ஆசையை கேட்டு விருப்பத்தை நிறைவேற்றி வைப்பார்கள். கொல்ல வேண்டிய கொடூரர்களுக்கு கூட காட்டப்படும் மனதாபிமான கருணை இது.

  ஆனால் பாகிஸ்தான், இரக்கம், கருணை எதுவும் இல்லாத ஒரு அரக்க நாடு என்பதை பல கால கட்டங்களில் வெளிப்படுத்தி வருகின்றன.

  முன்னாள் கடற்படை அதிகாரியான குல்பூ‌ஷன் ஜாதவ் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் மரண தண்டனை விதித்தது. மிகப்பெரிய போராட்டம் நடத்தி தற்காலிகமாக தண்டனையை நிறைவேற்றுவது தடுத்து வைக்கப்பட்டுள்ளது. நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அது எதுவாகவும் இருக்கட்டும்.

  மனிதாபிமான அடிப்படையில் மனைவி, தாயை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடுமையான வற்புறுத்தலுக்கு பிறகு பாகிஸ்தான் ஏற்றது.

  ஆனால் அந்த சந்திப்பில் பாகிஸ்தான் நடந்து கொண்ட விதம் நடைமுறைகளை கடந்து காட்டுமிராண்டித்தனமானது என்பது மட்டுமல்ல. தேவையில்லாமல் நாட்டை சீண்டும் வி‌ஷமத்தனமான வேலை.

  அன்னிய நாட்டு சிறையில் மரண கயிறா? மீளுவாரா? என்பதை பதைப்புடன் இருக்கும் அவரது தாயும், மனைவியும் பலமான பாதுகாப்பு, கெடுபிடிகளுடன் பார்க்க சென்றபோது கண்ணாடி தடுப்புக்கு வெளியே இருந்து இன்டர்காமில் பேசத்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

  அதை கூட ஒப்புக்கொண்ட அந்த பெண்களின் தாலியை கழட்டி, நெற்றி திலகத்தை கழித்து, செருப்பு, வளையல் அணிய விடாமல், அணிந்து சென்ற உடையை மாற்ற செய்து மிகவும் கீழ்த்தரமாக நடந்து இருக்கிறார்கள்.

  பாதுகாப்பு சோதனைக்கும் இந்த கட்டுப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? ஒவ்வொரு இந்திய பெண்ணும் தாலி, திலகம், வளையல் எப்போது அணிகிறாள். எப்போது தவிர்க்கிறாள் என்பது அவர்களின் உயிரினும் மேலான கலாச்சாரம் - பண்பாட்டு நெறி சார்ந்தது.

  ஒவ்வொரு நாட்டுக்கும் தனி கலாச்சாரம், பண்பாடு இருக்கும். அதை மதிக்க வேண்டும். ஆனால் இந்த வி‌ஷயத்தில் திட்டமிட்டு அவமதித்து இருக்கிறார்கள்.

  பெண்களை மதிக்கத் தெரியாதவர்களிடம் மனிதப் பண்பை எதிர்பார்க்க முடியாது. ஆனால் இதேபோல் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வரும் ஒவ்வொருவரையும் இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டால் அவர்கள் மனம் எவ்வளவு புண்படும்?

  பாகிஸ்தான் குழந்தை ஒன்று சிகிச்சை பெற விசா நடைமுறைகளால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து எல்லா விதிமுறைகளையும் மீறி அந்த குழந்தையை இந்தியாவுக்கு வரவழைத்து சிகிச்சை அளித்து திரும்ப அனுப்பி வைக்க உதவினார் மத்திய மந்திரி சுஷ்மா. இதுதான் இரு நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.

  ஆனால் நம்பி சென்ற பெண்களை கேவலப்படுத்தி, அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி உலகின் முன் தலைகுனிந்து நிற்கிறது பாகிஸ்தான்.

  பிள்ளை தவறான பாதையில் செல்லும்போது கடிந்து நல்வழிப்படுத்த முயல்வாள் தாய். அதே நிலையில்தான் இன்று இந்தியாவும் இருக்கிறது. அகண்ட பாரதத்தில் இருந்து கோபித்துக் கொண்டு பிரிந்த சுண்டைக்காய்தான் பாகிஸ்தான். அவர்களுக்கு இந்தியா மீது அக்கறை இல்லாவிட்டாலும் அவர்கள் மீது இந்தியாவுக்கு அக்கறை உண்டு. அதனால்தான் தாங்கி கொள்கிறது.

  ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா? பெற்ற பிள்ளையாக இருந்தாலும் சமூகத்துக்கு ஆபத்தாக மாறும்போது அழிக்கப்படும்.

  அதேபோல்தான் அடிக்கடி நடத்தப்படும் சர்ஜிக்கல் ஆபரேசன் மொத்த பாகிஸ்தானுக்கும் நடத்த வேண்டிய சூழல் வந்துவிடும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

  Next Story
  ×