என் மலர்
செய்திகள்

திருவாடானை அருகே அரசு பள்ளியில் இருந்த 21 மடிக்கணினி திருட்டு
தொண்டி:
திருவாடானை தாலுகா மங்கலக்குடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை உள்ளது. இந்த அரசுப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் 20152016-ம் கல்வி ஆண்டில் மேல்நிலைக் கல்வி பயின்ற 51 மாணவ, மாணவிகளுக்கு கொடுப்பதற்காக தமிழக அரசால் கடந்த 21.9.2017-ம் தேதி இந்த பள்ளிக்கு 51 மடிக்கணிணகள் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று இரவு இப்பள்ளியில் புகுந்த மர்ம மனிதர்கள் பள்ளி அறைகளின் அனைத்து பூட்டுகளையும் உடைத்து மாடியில் இருந்த 51விலையில்லா மடிக்கணினிகளில் 21-ஐ திருடிச் சென்று விட்டனர்.
தகவல் அறிந்து ராமநாதபுரத்தில் இருந்து தீவிர குற்ற தடுப்பு பிரிவு ஆய்வாளர் தனபால் தலைமையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை எடுக்கப்பட்டது.
அதே போல் ராமநாதபுரத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்திலிருந்து அறநூற்றி வயல்செல்லும் சாலையை நோக்கி ஓடி சிறிது தூரத்தில் நின்றுவிட்டது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, இந்த மடிக்கணிணி வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் அரசின் மெத்தனப் போக்கால் திருட்டு போய்விட்டது. மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக மடிக்கணிணி வழங்கி இருக்கலாம்.
மேலும் இந்த பள்ளிக்கு இரவு நேர காவலர் இல்லாததாலும் திருட்டு நடந்துள்ளதாக தெரிவித்தனர்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் திருவாடானை காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.