search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவர்களுடன் ஓரினச்சேர்க்கை: பெரம்பலூர் தனியார் பள்ளி விடுதி காப்பாளருக்கு 10 ஆண்டு ஜெயில்
    X

    பள்ளி மாணவர்களுடன் ஓரினச்சேர்க்கை: பெரம்பலூர் தனியார் பள்ளி விடுதி காப்பாளருக்கு 10 ஆண்டு ஜெயில்

    பள்ளி மாணவர்களை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய தனியார் பள்ளி விடுதி காப்பாளருக்கு பத்து ஆண்டு ஜெயில் விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூர் சர்க்கரை ஆலை காலனி பகுதியில் தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி அருகிலேயே பள்ளிக்கு சொந்தமான மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது.

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தென்னூர் பொன்னாங்கன்னி நத்தம் பகுதியை சேர்ந்த பாதிரியார் சகாய ராஜ் (வயது 49). இப்பள்ளியின் தாளாளராகவும், அந்த விடுதியை கண்காணிக்கும் பொறுப்பிலும் இருந்து வந்தார்.

    விடுதியின் காப்பாளராக (வார்டன்) பொன்னாங்கன்னி நத்தத்தை சேர்ந்தவரும், சகாயராஜின் உறவினருமான அந்தோணிசாமி (25) பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் சிலர் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தப்பட்டு, அந்தோணிசாமியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இதனால் அந்த மாணவர்களுக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்ட மாணவர்கள், பாதிரியார் சகாயராஜிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறி, அந்தோணிசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்காமல் மாணவர்களை மிரட்டி அனுப்பி விட்டார்.

    இந்தநிலையில் மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிய வந்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதையடுத்து மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிசாமி, சகாயராஜ் அகிய 2 பேரையும் கைது செய்தனர் . இந்த வழக்கு விசாரணை பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகாந்த் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதில், 4 மாணவர்களை பாலியல் வன்புணர்ச்சிக்குட்படுத்தியதற்காக தலா 10 ஆண்டு வீதம் 40 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

    மேலும் அபராத தொகை கட்டத்தவறினால் கூடுதலாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட மாணவர்கள் 4 பேருக்கும் மாவட்ட சட்டப் பணிகள் குழு நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். பள்ளி தாளாளர் சகாயராஜ் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
    Next Story
    ×