search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அமைச்சர் பதவியில் இருந்து எம்.சி.சம்பத்தை நீக்க வேண்டும்: கடலூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போர்க்கொடி
    X

    அமைச்சர் பதவியில் இருந்து எம்.சி.சம்பத்தை நீக்க வேண்டும்: கடலூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போர்க்கொடி

    அமைச்சர் எம்.சி. சம்பத்தை நீக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும், அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் எம்.பி.க்கள் அருண் மொழிதேவன், சந்திரகாசி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சத்தியா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), பாண்டியன் (சிதம்பரம்), முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகியோர் தொடர்ந்து புறக்கணித்து வந்தார்கள்.

    அமைச்சர் சம்பத் எங்களை மதிப்பதில்லை என்றும், தொகுதிக்கு அரசு நலத்திட்டங்கள் வரவிடாமல் தடுக்கிறார் என்றும் புகார் கூறினர். அமைச்சர் சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையொட்டி அமைச்சர் சம்பத்திடம் இருந்து கனிமவளத்துறை, பறிக்கப்பட்டது. அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கூடுதலாக அந்த பொறுப்பு வழங்கப்பட்டது.

    அமைச்சர் சம்பத் தற்போது தொழிற்துறை அமைச்சராக இருந்து வருகிறார். கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் விருத்தாசலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வன் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து பிரிந்து டி.டி.வி.தினகரன் அணியில் சேர்ந்து விட்டார்.

    தொடர்ந்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.பி.க்கள் அருண்மொழிதேவன், சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் சத்யாபன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன் ஆகியோர் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    இதுதொடர்பாக சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    புரட்சி தலைவி அம்மா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

    கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சரியாக மதிப்பதில்லை. தொகுதியில் திட்டங்கள் நிறைவேற்றவிடாமல் தடுக்கிறார்.

    எனவே அவரை அமைச்சர் பதவியில் இருந்தும், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும். கடலூர் மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி தேவையில்லை. விழுப்புரம் மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மூலம் நாங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விரைவில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×