என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரல்வாய்மொழி அருகே ஓடையில் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது: தனியார் நிறுவன ஊழியர் பலி
    X

    ஆரல்வாய்மொழி அருகே ஓடையில் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது: தனியார் நிறுவன ஊழியர் பலி

    ஆரல்வாய்மொழி அருகே நள்ளிரவில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓடையில் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
    ஆரல்வாய்மொழி:

    நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் அருகே உள்ள கரையான்குழி பகுதியை சேர்ந்தவர் பரமதாஸ். இவருடைய மகன் சுரேஷ்குமார் (வயது 32). இவர் நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிசெய்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் செண்பகராமன்புதூரை அடுத்த ஆதிச்சன்புதூரில் சுரேஷ்குமாரின் பாட்டி இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து நேற்று நடக்க இருந்த விசேஷத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துவிட்டு நள்ளிரவு தனது மோட்டார் சைக்கிளில் சுரேஷ்குமார் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் கால்வாய் கரையோரம் திருப்பத்தில் வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அப்பகுதியில் இருந்த ஓடையில் பாய்ந்தது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நள்ளிரவில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் விபத்து நடந்ததால் யாருக்கும் தகவல் தெரியவில்லை.

    காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதைபார்த்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், சுரேஷ்குமார் இறந்த விவரம் அவரது உறவினர்களுக்கும் தெரிய வந்தது. அவர்கள் விரைந்து வந்து சுரேஷ்குமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×