search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் தங்கி இருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் ‘திடீர்’ மாயம்
    X

    புதுவையில் தங்கி இருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் ‘திடீர்’ மாயம்

    புதுவை ஓட்டலில் தங்கி இருந்த டி.டி.வி. தினகரன் ஆதரவு ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் திடீரென ஓட்டலில் இருந்து வெளியேறினார். அவர் தனது காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்னை சாலையில் சென்றார்.
    புதுச்சேரி:

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் புதுவை சின்னவீராம் பட்டினத்தில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கி உள்ளனர்.

    அவர்கள் கடந்த 22-ந்தேதி, முதல்-அமைச்சர் எடப்பாடி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அன்று மாலையே அவர்கள் புதுவை வந்து இந்த ஓட்டலில் தங்கினார்கள்.

    இன்றுடன் அவர்கள் புதுவை வந்து 10 நாட்கள் ஆகிறது. இடையில் நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு மாற்றப்பட்டனர். மீண்டும் பழைய ஓட்டலுக்கே சென்று தங்கினார்கள்.

    10 நாட்களாக தொடர்ந்து ஓட்டலிலேயே அடைபட்டு கிடப்பதால் ஒருவித சோகத்துடன் உள்ளனர். ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் மட்டும்தான் நடைபயிற்சி போன்றவற்றுக்காக கடற்கரை பகுதிக்கு வருகிறார்கள். மற்றவர்கள் அறையிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

    இவர்கள் அனைவரும் தங்க.தமிழ்செல்வன் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறார்கள்.

    ஓட்டலில் இருந்து தங்க.தமிழ்செல்வன் மட்டும் தான் வெளியே சென்று வருகிறார். 4 நாட்களுக்கு முன்பு அவர் சொந்த ஊர் சென்று விட்டு திரும்பி வந்தார். நேற்று முன்தினம் சென்னை சென்று விட்டு திரும்பி வந்தார்.

    மற்ற எம்.எல்.ஏ.க்கள் யாரையும் வெளியே அனுப்பவில்லை. அவர்களில் சிலர் வீட்டுக்கு போக வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும், ஆனால் வெளியே அனுப்ப மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் திடீரென ஓட்டலில் இருந்து வெளியேறினார். அவர் தனது காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்னை சாலையில் சென்றார். அவரிடம் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது, தினகரனை சந்திக்க செல்வதாக தெரிவித்தார். வேறு எந்த தகவலையும் சொல்லவில்லை.


    அவர் தினகரனைத்தான் சந்திக்க செல்கிறாரா? அல்லது எடப்பாடி அணியில் சேருவதற்காக செல்கிறாரா? என்று தெரியவில்லை.

    இங்கு தங்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் இன்னும் எத்தனை நாட்கள் இங்கு இருப்பார்கள் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது.

    கவர்னர் மீண்டும் அழைப்பார், அவரை சந்திக்க போகிறோம் என்று கூறினார்கள். ஆனால், கவர்னரிடம் இருந்து அழைப்பு வருவதற்கான அறிகுறியே இல்லை.

    மேலும் கவர்னர் மெஜாரிட்டி பிரச்சனையே எழவில்லை என்று கூறி இருப்பதால் இந்த வி‌ஷயத்தில் இப்போது எந்த முடிவும் எடுக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

    எனவே, இங்கேயே எவ்வளவு நாட்கள்தான் தங்கி இருப்பது என்ற அதிருப்தி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் நிலவுகிறது. இன்று ஜனாதிபதியை சந்திக்க டெல்லி செல்ல இருப்பதாக முதலில் கூறினார்கள்.

    ஆனால், தினகரனிடம் இருந்து எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை. எனவே, என்ன செய்வது? என்று தெரியாமல் குழப்பத்தில் தவிக்கிறார்கள்.

    மேலும் ஓட்டலிலேயே முடங்கி கிடப்பதால் ஒரு வித மனச்சோர்வும் ஏற்பட்டுள்ளது. சில எம்.எல்.ஏ.க்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை போல ஒரே இடத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கிறோம் என்றும் வேதனையுடன் கூறி இருக்கிறார்கள்.

    சில எம்.எல்.ஏ.க்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி விடுதியை விட்டு கிளம்புவதற்கு அனுமதி கேட்டு வருகிறார்கள். இவ்வளவு நாளும் ஜாலி மூடில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் இப்போது கவலை ரேகைகள் தென்படுகிறது.

    இதற்கிடையே வார இறுதி நாட்கள் வர இருப்பதால் எம்.எல்.ஏ.க்களை மீண்டும் ஓட்டலை காலி செய்யும்படி ஓட்டல் நிர்வாகம் வற்புறுத்தி வருகிறது. எனவே, இவர்கள் எந்த நேரத்திலும் புதுவையை விட்டு வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×