என் மலர்
செய்திகள்

அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருடிய வாலிபர் கைது
கொண்டலாம்பட்டி:
சேலம் அம்மாப்பேட்டை மாரிமுத்துதெருவில் மாநகராட்சி அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஸ்ரீவித்யா என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 29-ந் தேதியன்று மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் வழக்கம்போல் பூட்டி விட்டு சென்று விட்டார். மறுநாள் காலை பள்ளிகூடத்திற்கு வந்து அறையை திறந்து பார்த்தபோது அறையில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள கம்ப்யூட்டர் மற்றும் யு.பி.எஸ். ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் அம்மாப்பேட்டை போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சேலம் நஞ்சம்பட்டி மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த கனகராஜ் (வயது 23) என்பவர் பள்ளியில் கம்ப்யூட்டர், யு.பி.எஸ்-யை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.






