search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி இரவு 10 மணிக்கு தொடங்குகிறது
    X

    சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி இரவு 10 மணிக்கு தொடங்குகிறது

    தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் இரவு 10 மணிக்கு தொடங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னையின் வர்த்தக மையமான தியாகராய நகரில் ‘சென்னை சில்க்ஸ்’ ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயில் 7 மாடி கட்டிடமும், அதில் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள ஜவுளிகளும் எரிந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தீப்பிடித்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் எதிரே சில அடி தூரத்தில் மேம்பாலம் உள்ளது. பாதுகாப்பு கருதி நேற்று மாலை முதல் மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சர்வீஸ் சாலையிலும் வாகனங்கள் செல்லவும் மக்கள் நடமாட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து வாகனங்களை வேறு பாதையில் திருப்பி விட்டனர். அருகில் உள்ள கடைகளும் மூடப்பட்டுள்ளன. இங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தவிப்புடன் உள்ளனர்.

    தீவிபத்தால் சுற்றிலும் வசிக்கும் மக்களும் வெளியேறி உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர். கட்டிடம் இடிக்கப்படுவதால் சுற்றிலும் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் இன்று இரவு 10 மணிக்கு தொடங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை ஆட்சியர் அன்புச் செல்வன் இன்று மாலை ஆய்வு செய்தார்.

    இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புச் செல்வன், “கட்டடத்தை இடிப்பதற்கான முதற்கட்ட பணிகள் இரவு 10 மணிக்கு தொடங்குகிறது. கட்டடத்தை முழுமையாக இடிக்க 2 அல்லது 3 நாட்கள் ஆகும். 3 நவீன இயந்திரங்கள் மூலம் கட்டடங்களை இடிக்கும் பணிகள் நடைபெறும்” என்றார்.
    Next Story
    ×