என் மலர்
செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை
ராமேசுவரம்:
மீன்களின் இனப் பெருக்க காலத்தை கருதி விசைப்படகில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் நாட்டுப் படகுகளில் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
இன்று காலை தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த அபிஷேக், ஆரோக்கியம், சந்தியாமெல்சன், ராஜ குணசேகரன், அந்தோணி ஆகிய 5 மீனவர்கள் ஒரு நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்றனர்.
தனுஷ்கோடி-மன்னார் வளைகுடா இடையே உள்ள கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்து தகாத வார்த்தைகளால் பேசினர். மேலும் மீனவர்களை தாக்கி, மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.
தொடர்ந்து எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக 5 மீனவர்களை படகுடன் சிறைபிடித்துச் சென்றனர்.
இலங்கை மன்னார் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மீனவர்கள் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.
மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.