search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடைகளில்  தனித்தனியாக 2 ரசீதுகள் - பொதுமக்கள் புகார்
    X

    ரேஷன் கடைகளில் தனித்தனியாக 2 ரசீதுகள் - பொதுமக்கள் புகார்

    • பழைய முறைப்படி விற்பனை முனைய எந்திரத்தில் அரிசி, இதர பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
    • புதிய நடைமுறையால் ரசீது எழுதுவது, பொருட்கள் வினியோகத்தில் காலதாமதம் ஏற்படுவதாக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    திருப்பூர் :

    தமிழகத்தில் 34,790 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 2 கோடியே 23 லட்சத்து 30 ஆயிரத்து 605 ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில் முன்னுரிமை கார்டுக்கு (பி.எச்.எச்.,) அனைத்து பொருட்களும், முன்னுரிமை அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுக்கு (பி.எச்.எச்., ஏ.ஏ.ஒய்.,), 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது. முன்னுரிமையற்ற கார்டுக்கு (அரிசி அட்டை) அனைத்து பொருட்களும், (சர்க்கரை அட்டை) அரிசி தவிர மற்ற அனைத்து பொருட்களும், பொருட்களில்லா அட்டை என 5 வகைகள் உள்ளன.

    இந்த 5 வகை கார்டுகள் அடிப்படையிலேயே பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. மத்திய, மாநில அரசு ஒதுக்கீடு செய்யும் அரிசி பிரிக்கப்படாமல் ஒரே மாதிரியாக வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அரிசியின் அளவை தனித்தனியாக பிரித்து பில் போட்டு பொதுமக்களுக்கு வழங்கும் முறை கடந்த 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி அரிசி வினியோகிக்கும் போது ஒதுக்கீடு பிரித்து வழங்கும் வகையில் இரண்டு ரசீதுகள் போடப்படுகிறது.

    பி.எச்.எச்., கார்டுகளில் பெரியவர் ஒருவருக்கு மொத்த ஒதுக்கீடு 12 கிலோ அரிசி. இதில் மத்திய அரசின் ஒதுக்கீடான 5 கிலோ, மாநில ஒதுக்கீடு 7 கிலோவுக்கு தனித்தனியாக ரசீது போட வேண்டும். ஒரு பெரியவர், ஒரு குழந்தை உள்ள கார்டுக்கு மத்திய அரசு 10 கிலோ, மாநில அரசு 4 கிலோ, இரு பெரியவர் உள்ள கார்டுக்கு மத்திய அரசு 10 கிலோ, மாநில அரசு 6 கிலோவும்,இரு பெரியவர், ஒரு குழந்தைக்கு 15 கிலோ மத்திய அரசும், 3 கிலோ மாநில அரசும் ஒதுக்கீடாக உள்ளது.

    3 பெரியவர்கள் உள்ள கார்டுக்கு மத்திய அரசின் 15 கிலோவும், மாநில அரசுடையது 5 கிலோ மற்றும் இதர பொருட்களும் உள்ளன. 4 பெரியவர் கார்டுக்கு 20 கிலோ, 5 பெரியவருக்கு 25 கிலோ, 6 பெரியவருக்கு 30 கிலோ , 7பெரியவருக்கு 35 கிலோ அரிசி மத்திய அரசு வழங்குகிறது. இந்த கார்டுகளுக்கு மாநில அரசு வாயிலாக இதர பொருட்கள் மட்டும் வழங்கப்படுகிறது.வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களது கார்டுகளுக்கு மத்திய அரசு சார்பில் 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

    இதுவரை மத்திய அரசின் ஒதுக்கீடு குறித்து மக்களுக்கு தெரியாமல் இருந்தது. இந்த புதிய நடைமுறையால் மத்திய அரசின் ஒதுக்கீடு மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்த புதிய நடைமுறையால் ரசீது எழுதுவது, பொருட்கள் வினியோகத்தில் காலதாமதம் ஏற்படுவதாக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் ஜெகநாதன், துணை செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கூறுகையில், பழைய முறைப்படி விற்பனை முனைய எந்திரத்தில் அரிசி, இதர பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- கடந்த 1ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்ய புதிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி இந்த கார்டுகளுக்கு மத்திய அரசு வழங்கும் அரிசிக்கு தனி ரசீதும், மாநில அரசு வழங்கும் அரிசி மற்றும் இதர பொருட்களுக்கு தனி ரசீது என இரண்டு ரசீதுகள் போட வேண்டியுள்ளது.ரேஷன் கடைகளில் உள்ள எந்திரத்தில் பதிவு செய்து பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சர்வர் பிரச்சினை ஏற்பட்டால் மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.இதனால் பொதுமக்கள், கடை ஊழியர்களிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அரசு பழைய நடைமுறையில் ரசீது வழங்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×