என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    127 கிலோ வெள்ளிகட்டிகள், 6 கார்கள், 5 செல்போன்கள் அதிரடியாக மீட்பு

    • காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சாந்தா ஜெகத் வந்த காரை வழிமறித்து வெள்ளிப் பொருட்களுடன் காரை திருடி சென்றனர்.
    • சேலம் சரக டி.ஐ.ஜி. மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் டவுன் கோட்டை பகுதி சேர்ந்தவர் சாந்தாஜூ ஜெகத். வெள்ளி வியாபாரியான இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந் தேதி தனது நண்பர்கள் சாகர் ஸ்ரீராம், சந்தோஷ் ஆகியோருடன் ஒரு காரில் ராய்ப்பூருக்கு சென்று ரூ.69 லட்சம் மதிப்பிலான 129 கிலோ வெள்ளி கட்டிகளை வாங்கிக் கொண்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    சேலம் மாவட்டம் ஓமலூர் ஆர்.செட்டிப்பட்டி மேம்பாலம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சாந்தா ஜெகத் வந்த காரை வழிமறித்து வெள்ளிப் பொருட்களுடன் காரை திருடி சென்றனர். இதுகுறித்து புகார் பேரில் சேலம் சரக டி.ஐ.ஜி. மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் கேரளா மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த 16 பேர் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு இவர்களிடமிருந்து 7 கிலோ வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மீதி உள்ள வெள்ளிக்கட்டிகளையும் இதில் சம்பந்தப்பட்ட மேலும் 4 பேரையும் போலீசார் வலைபேசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் ஒரு காரை திருடி வந்த கும்பலை சேலம் மாவட்ட போலீசார் மடக்கி பிடித்து சித்தோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர்களில் கோடாலி ஜெயந்த் (45),டைட்டஸ் (33), சந்தோஷ்(39), விபுன் (31) ஆகிய 4 பேரும் 129 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்பு உடையவர்கள் என தெரியவந்தது.

    இதை அறிந்த சேலம் மாவட்ட தனிப்படை போலீசார் 4 பேரையும் கடந்த 20-ந் தேதி நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் காருடன் 122 கிலோ வெள்ளி கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கபப்ட்டது. இதையடுத்து அந்த வெள்ளி கட்டிகளை போலீசா பறிமுதல் செய்தனர்.

    மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட 6 சொகுசு கார்கள், 5 செல்போன்கள், இரும்பு பைப் ஆகியவைகளை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.இந்த கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் கூறுகையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மிகவும் வசதி படைத்தவர்கள். வெள்ளி கட்டிகளுடன் கடத்தப்பட்ட காரை பொள்ளாச்சி பகுதியில் ஒரு பண்ணை வீட்டு பகுதியில் பல்வேறு செடி, கொடிகளை போட்டு மறைத்து வைத்திருந்தனர்.

    காவலில் எடுக்கப்பட்டவர்கள் கூறிய தகவலைத் தொடர்ந்து அந்த மாவட்ட போலீசாரோடு அதிரடி சோதனை மேற்கொண்டு பொருட்கள் மீட்கப்பட்டது என்றார். மேலும் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    Next Story
    ×