என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆரணியில் கஞ்சா கடத்தி வந்த 6 வாலிபர்கள் கைது: 1.250 கிலோ கஞ்சா பறிமுதல்
- போலீசார் சினிமா பாணியில் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
- கைது செய்யப்பட்ட ஆறு பேரும் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், தனிப்பிரிவு தலைமை காவலர் ராஜ்குமார் மற்றும் போலீசார் இன்று ஆரணி காவல் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகத்துக்கு இடமான வகையில் மூன்று மோட்டார் சைக்கிளில் ஆறு வாலிபர்கள் வந்தனர்.அவர்களை நிறுத்தி சோதனை செய்ய போலீசார் முயற்சி செய்தனர்.ஆனால், அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்துவது போன்று பாவனை செய்துவிட்டு மின்னல் வேகத்தில் ஆரணி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகம் வழியாக தப்பிச் செல்ல முயன்றனர்.அவர்களை போலீசார் சினிமா பாணியில் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அவர்கள் சுமார் 1.250 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து கடத்திச் செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.எனவே, கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் ஆறு பேரும் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர்களான சபியுல்லா(வயது23), பிரவீன்(வயது22), விக்னேஷ்(வயது22), முனுசாமி(வயது23), கார்த்திக்(வயது22), வெங்கடேசன்(வயது23) என்பது தெரியவந்தது.
மேலும், அவர்களிடமிருந்து ஆறு செல்போன்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய மூன்று மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






