என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 100 சதவீதம் பேர் இணைத்துள்ளனர்-கிருஷ்ணகிரி மின்வாரிய அதிகாரி தகவல்
- மாவட்டத்தில் உள்ள 71 பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 3 மாதங்களாக நடந்தது.
- கடந்த பிப்ரவரி 28-ந் தேதியுடன் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்து 100 சதவீதம் ஆதார் எண் இணைத்த மாவட்டமாக நிறைவு பெற்றுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண் இணைக்கும் பணி 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 லட்சத்து 92 ஆயிரத்து 463 வீட்டு மின் இணைப்புகள், வர்த்தக நிறுவனங்களின் மின் இணைப்புகளும், 120 கைத்தறி மின் இணைப்புகளும், 988 விசைத்தறி மின் இணைப்புகளும், 71 ஆயிரத்து 961 விவசாய மின் இணைப்புகளும், 19 ஆயிரத்து 888 குடிசை பகுதி மின் இணைப்புகளும் என மொத்தம் 6 லட்சத்து 85 ஆயிரத்து 420 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 71 பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 3 மாதங்களாக நடந்தது. அதன்படி மின் பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று இணைத்துள்ளனர். ஒரு சில இடங்களில் விவசாய மின் இணைப்புகளுக்கான பெட்டி மட்டுமும், அதை எங்கு பயன்படுத்துகின்றனர் என்பது தெரியாமல் இருந்தது.
அவர்களையும் கண்டறிந்து ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த பிப்ரவரி 28-ந் தேதியுடன் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்து 100 சதவீதம் ஆதார் எண் இணைத்த மாவட்டமாக நிறைவு பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






