என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆவின் பாலுக்கு 10 ரூபாய் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும்-விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
- ஆவின் பாலுக்கு 10 ரூபாய் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும்
- தமிழகத்திற்குள் அமுல் நிறுவனத்தைக் கொண்டு வர வேண்டாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், உழவர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் அனுமந்தராஜ், மாவட்ட மகளிர் அணி தலைவி பெருமா, மாவட்ட துணைத் தலைவர் வேலு, மாவட்ட துணை செயலாளர் வரதராஜ், மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் என்பது இல்லை. கர்நாடகா மாநில வனப்பகுதியான பன்னார்கட்டாவில் யானைகள் உள்ளன. அங்குள்ள வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் கனிம வளத்தையும், வன வளத்தையும் கொள்ளை யடிக்கின்றனர்.
அதனால் யானைகள் அங்கிருந்து கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் வந்துவிடுகின்றன. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வந்தும், வனத்துறையினர் சரியாக நடவடிக்கை எடுக்காமல் யானைகளை விரட்ட லஞ்சம் வாங்குகின்றனர்.
5 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் விவசாயிகளின் தோட்டத்திற்குள் யானைகள் வராதவாறு வனத்துறை அதிகாரிகள் பார்த்துக் கொள்கின்றனர். யார் பணம் கொடுக்கவில்லையோ அவர்களின் நிலங்களுக்கு யானைகளை விரட்டிவிடுகின்றனர்.
ஆவின் பாலுக்கு 10 ரூபாய் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டு வருகின்றனர். ஆனால் அதைக் கொடுக்க தமிழக அரசு மறுத்து வருகிறது. அமுல் நிறுவனத்தினர் பாலுக்கு விலை கொடுக்க தயாராகி வருகின்றனர். தமிழகத்திற்குள் அமுல் நிறுவனத்தைக் கொண்டு வர வேண்டாம் என்று அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதுவது சரியான நடவடிக்கை இல்லை. பால் கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். தமிழக அரசு அதைத்தான் செய்ய வேண்டுமே தவிர ஒரு அரசு நிறுவனத்தை வேண்டாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் அசோக் குமார், மாவட்ட துணை செயலாளர் சக்திசங்கர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மணிமேகலை, மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






