search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்
    X

    ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்

    இந்தியாவில் தற்சமயம் விற்பனையாகும் கார்களில் ரூ.10 லட்சம் விலையில் கிடைக்கும் பாதுகாப்பான கார்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். #Car
    சாலை போக்குவரத்தின் முக்கிய அம்சமாக கார் மாறிவிட்டது. தனி நபர் போக்குவரத்திலும் காரின் பங்களிப்பு அவசியமான ஒன்றாகி இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும் தங்களது குடும்பத்துடன் பயணிக்க கார் ஏதுவானதாக இருக்கிறது. எளிய மாத தவணைத் திட்டம், குறைந்த விலை உள்ளிட்டவை பலரின் கார் வாங்கும் கனவை நனவாக்கி இருக்கிறது.

    தற்சமயம் நெடுஞ்சாலைப் பயணம் சவாலானதாக மாறி வருகிறது. வாகன பெருக்கத்தால், பலரது கவனமும் பாதுகாப்பான கார்களை நோக்கி திரும்பி இருக்கிறது. இப்போது ஆரம்ப நிலை கார்களிலேயே ‘குறைந்தபட்சம் 2 ஏர் பேக்குகள் கட்டாயம்’ இருக்க வேண்டும் என அரசு கொள்கை வகுத்துள்ளது.

    கார் தயாரிப்பு நிறுவனங்களும் பாதுகாப்பான வாகனங்களை தயாரிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. கார்களின் பாதுகாப்பு தன்மை குறித்து சர்வதேச கிராஷ் டெஸ்ட் நிறுவனம் (என்.சி.ஏ.பி.) சோதித்து சான்றளித்து வருகிறது. கிராஷ் டெஸ்ட் என்பது குறிப்பிட்ட காரை தானியங்கி முறையில் வேகமாக இயக்கி தடுப்பு ஒன்றின் மீது மோதச்செய்வார்கள்.



    அந்தக்காரில் மனிதர்கள், குழந்தைகள் போன்ற, சென்சார்கள் பொருத்தப்பட்ட பொம்மை உருவம் இருக்கும். விபத்து சோதனைக்குப்பின் காரின் பாகங்கள் ஆராயப்படும். அதில் பயணம் செய்த மனித பொம்மைகளுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று பரிசோதிக்கப்படும். இதன் அடிப்படையில் அந்த காரின் பாதுகாப்பு தன்மை குறித்து சான்று அளிக்கப்படும்.

    அந்த வகையில் இந்தியாவில் தற்போது விற்பனையாகும் கார்களில் கிராஷ் டெஸ்ட் சோதனையில் அதிகபட்ச சான்றுகள் பெற்ற கார்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை பற்றிய விவரத்தை பார்க்கலாம்.

    ஃபோக்ஸ்வேகன் போலோ:


    ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் போலோ இந்தியாவில் முதலில் தயாரிக்கப்பட்ட போது, ஏர் பேக் இல்லாமல் வந்தது. கிராஷ் டெஸ்ட் சோதனையின் அடிப்படை அம்சங்கள் எதையும் அது பூர்த்தி செய்யவில்லை. பின்னர் இதில் முன்புறத்தில் 2 ஏர் பேக்குடன் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அப்போது, பெரியவர்களின் பாதுகாப்புக்கு 17 மதிப்பெண்ணுக்கு 12.54 மதிப்பெண் எடுத்து 3 நட்சத்திரமும், குழந்தைகள் பாதுகாப்பில் 49 மதிப்பெண்ணுக்கு 29.91 மதிப்பெண் எடுத்து மூன்று நட்சத்திரமும் பெற்றது. பின்னர் இந்த காரில் ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்பட்டது. இதன் விலை ரூ. 5.42 லட்சத்தில் துவங்குகிறது.



    டொயோடா இடியோஸ் லிவா:

    டொயோடா நிறுவனத்தின் லிவா ஹேட்ச்பேக் மாடல் ஆகும். இது கிராஷ் டெஸ்ட் சோதனையில் நான்கு நட்சத்திரக் குறியீட்டைப் பெற்றுள்ளது. பெரியவர்களின் பாதுகாப்புக்கு 16 மதிப்பெண்ணுக்கு 13 மதிப்பெண்களை எடுத்து நான்கு நட்சத்திரங்களை பெற்றுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பில் 49 மதிப்பெண்ணுக்கு 20.02 மதிப்பெண் எடுத்து இது இரண்டு நட்சத்திரத்தை மட்டுமே பெற்றுள்ளது. பின்னர், கிராஷ் டெஸ்ட் சோதனையின் அடிப்படையில் சில பாதுகாப்பு அம்சங்களை இந்நிறுவனம் தனது கார்களில் சேர்த்துள்ளது. அதில் ஏ.பி.எஸ்., இ.பி.டி., ஐசோபிக்ஸ் முக்கியமானவையாகும். முன்பகுதியில் இரண்டு ஏர் பேக்குகள் மற்றும் சீட் பெல்ட் பிரீடென்சனர் வசதியையும் சேர்த்துள்ளது.

    டாடா செஸ்ட்:

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பு செஸ்ட். காம்பாக்ட் செடான் பிரிவில் வந்திருக்கும் இந்த கார் 2016-ல் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அப்போது இதற்கு பூஜ்ஜியம் நட்சத்திரம் தான் கிடைத்தது. பிறகு டாடா நிறுவனம் தேவையான மாற்றங்களைச் செய்து மீண்டும் சோதனைக்கு அனுப்பியது. அப்போது இது பெரியவர்கள் பாதுகாப்பில் 17 மதிப்பெண்ணுக்கு 11.15 மதிப்பெண் எடுத்து நான்கு நட்சத்திரங்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49 மதிப்பெண்ணுக்கு 15.52 மதிப்பெண் எடுத்து 2 நட்சத்திரங்களையும் பெற்றது. இந்த கார் முன்புறத்தில் 2 ஏர் பேக்குடன் வந்துள்ளது. டிரைவருக்கு சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ஏ.பி.எஸ்., இ.பி.டி. வசதிகள் மற்றும் கார்னர் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் வசதியுடன் வந்துள்ளது. இதன் விலை ரூ. 5.48 லட்சத்தில் தொடங்குகிறது.



    டாடா நெக்சான்:

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாடல்களில் எஸ்.யு.வி. மாடல் இது. டாடா நெக்சான் கிராஷ் டெஸ்டில் நான்கு நட்சத்திரங்களை பெற்றுள்ளது. பெரியவர்கள் பாதுகாப்பில் 17 மதிப்பெண்ணுக்கு 13.56 மதிப்பெண்களைப் பெற்று 4 நட்சத்திரங்களைப் பெற்ற இந்த கார், குழந்தைகள் பாதுகாப்பில் 49 மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்களை எடுத்து 3 நட்சத்திரங்களை மட்டுமே பெற்றுள்ளது.

    இந்த காரின் மேற்கூடு (ஷெல்) ஸ்திரமாக இருப்பதாகவும், இந்தக் காரில் பயணம் செய்த மனித பொம்மைகளின் கழுத்து, தலைப்பகுதி மற்றும் கால்கள் சேதமின்றி இருந்ததாகவும், சோதனை நடத்திய என்.சி.ஏ.பி. அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த மாடலில் அனைத்து நெக்சான் கார்களும் 2 ஏர் பேக்குகளைக் கொண்டதாக வந்துள்ளது. இதன் பேஸ் மாடல் கார் விலை ரூ. 5.99 லட்சத்தில் தொடங்குகிறது.

    மாருதி விடாரா பிரெஸ்ஸா:

    மாருதி சுசுகி நிறுவனத்தின் காம்பாக்ட் எஸ்.யு.வி. விடாரா பிரெஸ்ஸா. இந்த கார் கிராஷ் டெஸ்ட் சோதனையில் பெரியவர்கள் பாதுகாப்பில் 17 மதிப்பெண்ணுக்கு 12.51 மதிப்பெண் எடுத்து நான்கு நட்சத்திரங்களை வென்றுள்ளது. விடாரா பிரீஸாவின் அனைத்து மாடலிலும் 2 ஏர் பேக்குகள், ஏ.பி.எஸ்., இ.பி.டி., முன்புற சீட் பெல்ட் பிரீடென்சனர்ஸ் வசதிகளோடும், டிரைவருக்கு சீட் பெல்ட் ரிமைண்டருடனும் வந்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்புக்கு இதில் ஐசோபிக்ஸ் வசதியும் உள்ளது.
    Next Story
    ×