என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

சேலம் மேற்கு தொகுதி
சேலம் மேற்கு தொகுதி கண்ணோட்டம்
அதிமுக கூட்டணியில் இத்தொகுதி பா.ம.க.-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ம.க-வை எதிர்த்து திமுக களம் இறங்கியுள்ளது.
பா.ம.க. சார்பில் இரா. அருள், திமுக சார்பில் சேலத்தாம்பட்டி அ. ராஜேந்திரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் தியாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் நாகம்மான், தேமுதிக சார்பில் அழகாபுரம் மோகன்ராஜன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பா.ம.க. வேட்பாளர் அருள் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 7,01,000
2. அசையும் சொத்து- ரூ. 1,55.76,249.81
3. அசையா சொத்து- ரூ. 2,25,00,000
திமுக வேட்பாளர் ராஜேந்திரன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 70,000
2. அசையும் சொத்து- ரூ. 7,94,751
3. அசையா சொத்து- ரூ. 14,00,000
சேலம் மாவட்டத்தில் எல்லோரும் எதிர்பார்க்கும் தொகுதிகளில் ஒன்று சேலம் மேற்கு தொகுதி. தமிழக முதல் அமைச்சரின் சொந்த கிராமம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையமாக இருந்தாலும், அவர் தங்கியுள்ள சேலம் நெடுஞ்சாலை நகர் வீடு இந்த தொகுதியில்தான் இடம்பெறுகிறது.
இந்த தொகுதியில் 1,48,477 ஆண்கள், 1,49,452 பெண்கள், 56 இதரர் என மொத்தம் 2,97,985 வாக்காளர்கள் உள்ளனர்.
ஏற்கனவே சேலத்தில் இருந்த சேலம்-1, சேலம்-2, பனமரத்துப்பட்டி ஆகிய தொகுதிகள் மறுசீரமைப்புக்கு பின்னர் சேலம் தெற்கு, சேலம் மேற்கு, சேலம் வடக்கு தொகுதிகளாக உருவாயின.
சேலம் மேற்கு தொகுதியில் சேலம், ஓமலூர் தாலுகா பகுதிகள் வருகின்றன. சேலம் மேற்கு தாலுகாவின் ஒரு பகுதியான சர்க்கார் கொல்லப்பட்டி, ஏ.அய்யம்பெருமாம்பட்டி, செட்டிச்சாவடி, கொண்டப்ப நாயக்கன்பட்டி, எம்.பாலப்பட்டி, சேலத்தாம்பட்டி கிராமங்கள், ஓமலூர் தாலுகாவில் முத்துநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, பாகல்பட்டி, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, கோட்ட கவுண்டன்பட்டி, ஆனைக்கவுண்டம்பட்டி, அழகுசமுத்திரம், கோனகாபாடி உள்ளிட்ட பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
சேலம் மாநகராட்சியின் 1 முதல் 5 வரையிலான வார்டுகளும், 17 முதல் 27 வரையிலான வார்டுகளும் இடம்பெற்றுள்ளன.

சேலம் இரும்பாலை, சேலம் ரெயில்வே கோட்ட தலைமை அலுவலகம், ஜங்ஷன் ரெயில் நிலையம், சேகோசர்வ், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன தலைமை அலுவலகம் என முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள தொகுதியாக சேலம் மேற்கு திகழ்கிறது.
சேலம் மேற்கு தொகுதியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள் ஓரளவுக்கு செய்து கொடுத்திருந்தாலும் பல இடங்களில் பொதுமக்களின் தேவைகள் அதிகளவில் உள்ளது. சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் 5 ரோடு சாரதா கல்லூரி சாலை வரையிலும் உயர்மட்ட மேம்பாலம், அதேபோல் குரங்குச்சாவடியில் இருந்து 5 ரோடு, புதிய பஸ் நிலையம், 4 ரோடு வரையிலும் பிரமாண்ட ஈரடுக்கு மேம்பாலம் கட்டி முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேபோல், சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 4 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்று வருகின்றன.
அய்யம்பெருமாம்பட்டி ஊராட்சிக்கு கூட்டுக்குடிநீர் திட்டம், போடிநாயக்கன்பட்டி ரெயில்வே தரைப்பாலம் விஸ்தரிப்பு, 4 ஊராட்சிகளில் அம்மா மினி கிளினிக் மற்றும் சாலை வசதி, ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அ.தி.மு.க. அரசு செய்து கொடுத்துள்ளதாக மேற்கு தொகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தொகுதியில் முக்கிய தொழில் விவசாயமாகும். இது தவிர கயிறு திரிக்கும் தொழில், நெசவுத்தொழில், வெள்ளி தொழில்களும் உள்ளன. சேலத்தில் எங்கு திரும்பினாலும் பாலங்கள் உள்ளன. இது இந்த தொகுதியின் பெருமையை பறைசாற்றுகின்றன.
கோரிக்கைகள்
இந்த தொகுதியை பொறுத்தவரை சேலம் உருக்காலையில் காலியாக உள்ள நிலத்தில் சிறு, குறுந்தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாளைய கோரிக்கையாகும்.
சேலத்தாம்பட்டி ஏரியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியதாலும், அங்கு துணை மின் நிலையம் அமைத்ததாலும் மழை பெய்யும் சமயத்தில் ஏரி நிரம்பி சிவதாபுரம், பனங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் சேலம் தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இப்பகுதியில் உள்ள கயிறு திரிக்கும் தொழிலாளர்கள் தங்களுக்கென கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தி கடன் பெற்று தொழிலை மேம்படுத்த கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் சேலம் ரெயில்நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவேண்டும் என்ப?தும் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
வெள்ளிப்பட்டறை தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் தொழில் பாதுகாப்பு, தனி நலவாரியம் அமைத்தல், வெள்ளி கொலுசுக்கு காப்புரிமை, தொழில் பூங்கா அமைப்பது, அரசின் வளர்ச்சி திட்டங்கள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது வெள்ளி தொழிலாளர்களின் கோரிக்கையாகும்.
தேர்தல் வெற்றி
2011- ஜி.வெங்கடாசலம் அதிமுக
2016- ஜி.வெங்கடாசலம் அதிமுக
2016 தேர்தல்
வெங்கடாஜலம் அதிமுக- 80,755
சி. பன்னீர்செல்வம் திமுக- 73,508
அருள் பாமக- 29,982
மோகன்ராஜ் தேமுதிக- 8,962
ராசா நாம் தமிழர்- 1,374
வெங்கடாசலம் கொமதேக- 857
ஹரிகரன் ஐஜேகே- 554
பொங்காளி சுயேச்சை- 490
ஜீவனாதன் சுயேச்சை- 460
ஜி.வெங்ஜ்கடாசலம் சுயேச்சை- 380
Next Story






