search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை தெற்கு
    X
    மதுரை தெற்கு

    அதிமுக- மதிமுக நேருக்குநேர் மோதும் மதுரை தெற்கு தொகுதி கண்ணோட்டம்

    அதிமுக-வும் - மதிமுக-வும் நேருக்குநேர் போட்டியிடும் மதுரை தெற்கு தொகுதி கண்ணோட்டம்
    மதுரை தெற்கு...
    மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் முக்கியமானதாக மதுரை தெற்கு தொகுதி உள்ளது. இந்த தொகுதி கடந்த 2 முறையாகத்தான் சட்டமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. அதற்கு முன்பு மதுரை கிழக்கு தொகுதியுடன் இணைந்திருந்தது. பிரசித்தி பெற்ற மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அமைந்து இருப்பது இந்த தொகுதியில்தான்.

    மதுரை தெற்கு தொகுதியில் 2,24675 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 1,13,990 பேர் பெண்கள். 1,10,615 பேர் ஆண்கள். 20 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

    மதுரை தெற்கு தொகுதியில் மாநகராட்சி வார்டு எண் 39, 43&59 வரை 18 வார்டுகள் இடம் பெற்று உள்ளன. இவற்றில் முனிச் சாலை, கீழவாசல், காமராஜர்புரம், சிந்தா மணி, வாழைத் தோப்பு, செல்லூர், மதிச்சியம், வில்லாபுரம், தெப்பக்குளம், ஆழ்வார்புரம் ஆகியவை முக்கிய பகுதிகள் ஆகும். இந்த பகுதிகள் அனைத்தும் மதுரை மாநகராட்சியின் கீழ் உள்ளது.

    மதுரை தெற்கு

    மேலும் வியாபாரஸ்தலம் நிறைந்த பகுதியாகவும் தெற்கு தொகுதி உள்ளது. இங்கு சவுராஷ்டிரா இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள்தான் இந்த தொகுதியின் வெற்றி வேட்பாளரை தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
    இதற்கு அடுத்தபடியாக முக்குலத்தோர், யாதவர்கள், ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் பல்வேறு சமூக மக்கள் உள்ளனர். சவுராஷ்டிரா சமூகத்தில் 30 சதவீதம் பேரும், முக்குலத்தோர் 20 சதவீதம் பேரும் உள்ளனர். 2011&ம் ஆண்டு தெற்கு தொகுதி உருவானாலும் 1951&-ம் ஆண்டு முதல் மதுரை கிழக்கு என்ற பெயரில் தேர்தலை சந்தித்துள்ளது.

    அதன் பிறகு தொகுதி மறு சீரமைப்பு காரணமாக மதுரை தெற்கு தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்டு வேட்பாளர் அண்ணாதுரை வெற்றி பெற்று தெற்கு தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

    கடந்த தேர்தலில் (2016) அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ். சரவணன் வெற்றி பெற்றார். இவர் சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்தவர். வருகிற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் அவர்தான் களம் இறங்குகிறார்.

    தி.மு.க. கூட்டணி சார்பில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பூமிநாதன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்கு புதியவர் அல்ல. ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டுள்ளார். இதில் 2006-ம் ஆண்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் நன்மாறனிடம் 56 தபால் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இவர் 3-வது இடத்தை பிடித்தார்.

    ம.தி.மு.க. தொடங்கிய காலத்தில் இருந்து வைகோவுடன் இணைந்தே இருக்கும் பூமிநாதன் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர். தொகுதியில் 2-வது பெரும்பான்மை பெற்றுள்ள முக்குலத்தோர் வாக்குகளை நம்பி பூமிநாதன் களம் காண்கிறார்.

    இவருக்கு போட்டியாக அ.ம.மு.க. சார்பில் ராஜலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரும் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர்கள் தவிர நாம் தமிழர் வேட்பாளராக அப்பாஸ், மக்கள் நீதிமய்யம் கூட்டணியில் ச.ம.க. சார்பில் ஈஸ்வரன் மற்றும் சிலர் களத்தில் உள்ளனர்.

    மதுரை தெற்கு
    மதுரை தெற்கு

    இந்த தொகுதியில் கைத்தறி, நெசவு ஆகியவை முக்கிய தொழில் ஆகும். இதற்கு அடுத்தபடியாக எண்ணற்ற ஜவுளிக் கடைகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக தெற்கு தொகுதி உள்ளது. இங்கு வசிக்கும் மக்களுக்கு பொருளாதார சக்தியாக தொகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களே விளங்குகின்றன.

    இருப்பினும் இந்த தொகுதியில் குறிப்பிடத் தக்க தொழிற்சாலைகள் இல்லை. இது இங்கு வசிக்கும் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு கேள்விக்குறியாக உள்ளது. இது தவிர விரிவாக்க பகுதிகளில் குடிதண்ணீர் பற்றாக்குறை, சாலை வசதியின்மை உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளன. இந்த தொகுதியில் பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்னமும் முழுமையாக நிறைவேற்றித் தரப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
    Next Story
    ×