என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    குன்னூர் தொகுதி
    X
    குன்னூர் தொகுதி

    குன்னூர் தொகுதி கண்ணோட்டம்

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் குன்னூர் சட்டமன்ற தொகுதியும் ஒன்று.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் மற்றும் பங்களா இந்த தொகுதியில்தான் உள்ளது. மத்திய அரசின் பாஸ்டியர் ஆய்வகம் மற்றும் வெடிமருந்து தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளது.

    ஆண் வாக்காளர்கள் 91,301 பேரும், பெண் வாக்காளர்கள் 99,999 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் - 7 பேர் என மொத்தம் குன்னூர் தொகுதியில் 1,91,307 வாக்காளர்கள் உள்ளனர். குன்னூர் சட்டமன்றத் தொகுதியில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகம்.

    குன்னூர் தொகுதி

    பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவில், முருகன் கோவில், மைசூர் மன்னர் வாழ்ந்ததாக கூறப்படும் பக்காசூரன் மலை, ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ் ராக், கேத்திரின் நீர் வீழ்ச்சி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களும் நிறைந்து காணப்படும் தொகுதியாக குன்னூர் தொகுதி உள்ளது. இதுதவிர வெலிங்டன் ராணுவ முகாமும் இந்த தொகுதியில் தான் இருக்கிறது.

    குன்னூர் தொகுதியில் படுகா, ஆதிவாசி மக்கள், தோடர், இருளர், குரும்பர், தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். இதுதவிர கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றனர்.

    குன்னூர் தொகுதி

    இந்த தொகுதியில் குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட தாலுகாக்களும், குன்னூர் நகராட்சியும், அதிகரட்டி, உலிக்கல் பேரூராட்சிகளும், எடப்பள்ளி, பர்லியார், மேலூர், அருவங்காடு, ஓட்டுப்பட்டறை, கோடநாடு, கீழ் கோத்தகிரி, சோலூர்மட்டம், உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகள் அதிகளவில் நிறைந்து காணப்படும் தொகுதியாக இது உள்ளது.

    குன்னூரை பொருத்தவரையில் விவசாயமே இங்கு பிரதான தொழிலாகும். குன்னூரில் முக்கியத் தொழிலாக தேயிலை, மலைகாய்கறி விவசாயம் பார்க்கப்படுகிறது. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டப் பணிகளுக்கு செல்கின்றனர்.

    200-க்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. இதுதவிர ஏல மையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தேயிலை ஏலத்தில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து வாங்கி செல்வார்கள்.

    குன்னூர் தொகுதி

    ஏலம் எடுக்கப்படும் தேயிலைகள் இங்குள்ள குடோனில் வைக்கப்பட்டு பின்னர் நாட்டின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஏல மையத்தை மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு சென்று விட்டதால் அதனை நம்பி தொழில் செய்து வந்த மார்க்கெட் வியாபாரிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

    கோரிக்கை

    குன்னூர் நகரின் மத்திய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தை சுற்றி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த உரம் தயாரிக்கும் மையத்தால் அங்கு வசிக்கும் மக்கள் பலருக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எனவே இந்த உர மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே இந்த தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    குன்னூர் தொகுதி

    சுற்றுலா தளமாக பார்க்கப்படும் குன்னூரில் வாகன நிறுத்துமிடம் இல்லாதது பெரிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. அதனைப்போக்கும் வகையில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல் தேயிலைக்கு விலை நிர்ணயம், தேயிலைக்கு மாற்று பயிராக விளங்கும் கொய் மலர்களுக்கு ஏற்றுமதி மையம் ஏற்படுத்தி தரவேண்டும் என இப்பகுதி வாக்காளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    குன்னூர் தொகுதி

    குன்னூர் நகர பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய கோரி பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் பல கட்சிகள் ஆட்சிக்கு வந்து சென்றுள்ளன. இதுவரை இந்த பிரச்சினையை சரி செய்ய வில்லை. எனவே பேருந்து நிலையத்தை விரிவாக்க செய்ய வேண்டும் என்பது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பஸ் நிலையம் அருகே ரெயில்வே லெவல் கிராசிங்கில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இங்கு ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தொகுதியில் எந்தவித பெரிய தொழிற்சாலைகளும் இல்லாததால் இங்குள்ள இளைஞர்கள் வேலை தேடி பல இடங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.

    குன்னூர் நகரத்தின் பொதுமக்களுக்கு பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை நிலவி வந்தது. தற்போது எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் அடிப்படையில் குன்னூர் கிரேஸ் ஹில் பகுதிக்கு இந்த தண்ணீர் இணைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு 3 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல இடங்களில் சாலைகள் போடப்பட்டுள்ளன. 

    குன்னூர் தொகுதி

    1957- மாதே கவுடர்(காங்கிரஸ்)
    1962- மாதே கவுடர்(காங்கிரஸ்)
    1967- பி.கவுடர்( தி.மு.க)
    1971- கருணைநாதன்(தி.மு.க)
    1977- அரங்கசாமி(தி.மு.க)
    1980- அரங்கநாதன் (தி.மு.க)
    1984- சிவகுமார்(அ.தி.மு.க)
    1989- தங்கவேல்(தி.மு.க)
    1991- கருப்பசாமி(அ.தி.மு.க)
    1996- தங்கவேல்(தி.மு.க)
    1997- ரங்கநாதன்(தி.மு.க)
    2001- கந்தசாமி(தமிழ் மாநில காங்கிரஸ்)
    2006- சவுந்திர பாண்டியன்(தி.மு.க)
    2011- ராமசந்திரன்(தி.மு.க)
    2016- சாந்திராமு (அ.தி.மு.க)
    Next Story
    ×