என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஆரணி தொகுதி
    X
    ஆரணி தொகுதி

    ஆரணி தொகுதி கண்ணோட்டம்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி 2 வது பெரிய நகரமாகும். கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
    சோழர், பல்லவர்கள் காலத்தில் ஆரண்யம் என்று அழைக்கப்பட்டு வந்த ஆரணி ஜாகீர்தார்களின் தலைமையிடமாக விளங்கியது. இங்கு காஞ்சிபுரத்திற்க்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கும் மற்றும் தஞ்சாவூருக்கு அடுத்தப்படியாக பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர் பெற்றதாகும்.

    ஆரணி பட்டுப்புடவைகளுக்கும் மற்றும் அரிசி வகைகளுக்கும் பெயர் பெற்றிருப்பதனால் ஆரணி நகரை இந்தியாவின் பட்டு நகரம் என்றும், தமிழ்நாட்டின் அரிசி நகரம் என்றும் இரு பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறது. ஆரணி பட்டு சேலையானது, புவிசார் குறியீடு பெற்று தேசிய விருதும் பெற்றுள்ளது. அதேபோல் ஆரணி அரிசிக்கும் தேசிய விருது பெற்றுள்ளது. இங்கு வரலாற்று சிறப்புமிக்க புத்திர காமேட்டீஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், எந்திர வடிவில் சனீஸ்வர பகவான் கோவில், அருள்மிகு பச்சையம்மன் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், ஸ்ரீவேம்புலியம்மன் கோவில், அமிர்தாம்பிகை உடனுறை சந்திரசேகரேஸ்வரர் கோவில் ஆகியவை கோவில்கள் அமையப்பெற்று கோவில்களின் நகரம் எனும் போற்றப்படும் அளவிற்கு உள்ளதாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளது.

    ஆரணி தொகுதி

    ஆரணி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 563 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 753 பேர், பெண்கள் 1 லட்சத்து 41 ஆயிரத்து 788 பேர், மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் உள்ளனர்.

    ஆரணி தொகுதி

    ஆரணி சட்டமன்றத் தொகுதியில் ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள், கண்ணமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள், ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளும், மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகளும் உள்ளன. தொகுதி மறுசீரமைப்பின் போது செய்யார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செய்யாறு தாலுகாவில் உள்ள பல்லான் தாங்கள், மேல் சீச மங்கலம், முனுகப்பட்டு, கொருக்காதூர், மேல் நகரம் பேடு, கடுகனூர், மாளிகைபட்டு, மேல் மட்டை, விண்ணமங்கலம், புதுக்கோட்டை, பில்லாந்தி, நாவல்பாக்கம், திருமணி ஆகிய ஊராட்சிகளில் ஆரணி சட்டமன்ற தொகுதிகள் சேர்க்கப்பட்டது.

    ஆரணி தொகுதி

    இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்கள் என மொத்தம் 89 ஊராட்சிகளும், ஒரு நகராட்சி (ஆரணி) பகுதியும், ஒரு பேரூராட்சி (கண்ணமங்கலம்) பகுதியும் ஆரணி சட்டமன்ற தொகுதி அடங்கியுள்ளன.

    இந்த தொகுதியில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 30 சதவீதமும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 28 சதவீதம், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 17 சதவீதமும், இதர பிரிவினர் 25 சதவீதம் உள்ளனர்.

    இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் ஆரணி சட்டமன்றத் தொகுதியில் சி.ஆர்.சி கட்சி (காமன்வெல்த் கட்சி) ஒரு முறையும், காங்கிரஸ் கட்சி இரண்டு முறையும், அ.தி.மு.க 6 முறையும், தி.மு.க. 5 முறையும், தே.மு.தி.க ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

    ஆரணி தொகுதி

    கடந்த 2016-ம் ஆண்டு ஆரணி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சேவூர் ராமச்சந்திரனும், தி.மு.க. சார்பில் ஆர் சிவானந்தத்தின் மகன் ஆர்.எஸ். பாபுவும் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்ற சேவூர் ராமச்சந்திரன் இந்து சமய அறநிலை துறை அமைச்சரானார். இதன் மூலம் ஆரணி தொகுதியில் வெற்றி பெற்றவர் முதல் முறையாக அமைச்சரானார்.

    கோரிக்கைகள்

    ஆரணி பட்டு சேலை தயாரிப்பு அதிக அளவில் உள்ளன. எனவே பட்டு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆரணி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லை, உரிய சிகிச்சை அளிப்பதற்கு உயர்தர உபகரணங்கள் இல்லை. எனவே போதிய டாக்டர்களை நியமித்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும். அரசு சார்பில் வேளாண்மை கல்லூரியும், கலைக் கல்லூரியும், நர்சிங் கல்லூரியும் தொடங்கப்பட வேண்டும் என்பதும் ஆரணியில் நகராட்சிக்கு சொந்தமான 450 கடைகள் உள்ளன.

    ஆரணி தொகுதி

    வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்ட தால் பாதிப்பேர் கடைகளை காலி செய்துவிட்டனர். மற்றவர்கள் வாடகை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாகும். மேலும் ஆரணி நகரில் குப்பைகள் அதிக அளவில் சேகரிக்கப்படுகின்றன. இதனை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு இல்லை. அதனை அமைக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் முக்கியமான கோரிக்கை ஆகும்.

    ஆரணி தொகுதி

    1951- வி.கே.கண்ணன்- பொதுநலகட்சி
    1957- துரைசாமி ரெட்டியார்- சுயேட்சை
    1962- கோதண்டராம பாகவதர்- காங்கிரஸ்
    1967- நரசிம்மன்- தி.மு.க.
    1971- பி.யு.சண்முகம்- தி.மு.க.
    1977- நரசிம்மன்- அ.தி.மு.க.
    1980- ஏ.சி.சண்முகம்- அ.தி.மு.க.
    1984- சின்னகுழந்தை- அ.தி.மு.க.
    1989 - தயாளன்- தி.மு.க.
    1991- ஜெய்சன் ஜேக்கப்- அ.தி.மு.க.
    1996- சிவானந்தம்- தி.மு.க.
    2001- ராமச்சந்திரன்- அ.தி.மு.க.
    2006- சிவானந்தம்- தி.மு.க.
    2011- பாபுமுருகவேல்- தே.மு.தி.க.
    2016- சேவூர் ராமச்சந்திரன்- அ.தி.மு.க.
    Next Story
    ×