search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையம் தொகுதி
    X
    ராஜபாளையம் தொகுதி

    கடந்த முறை திமுக: இந்த முறை?- ராஜபாளையம் தொகுதி கண்ணோட்டம்

    ஐந்து முறை அதிமுக-வும், மூன்று முறை திமுகவும், ஒரு முறை காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ள ராஜபாளையம் தொகுதி ஒரு அலசல்.
    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் முக்கியமானது ராஜபாளையம். இந்த ஊர் பெயரை கேட்டாலே உயர் ரக நாய்கள் இனம்தான் நமக்கு சட்டென நினைவுக்கு வரும். இந்த தொகுதியில் சத்திரப்பட்டி, ஆலங்குளம், தளவாய்புரம், சேத்தூர், மீனாட்சிபுரட், புத்தூர், மேலப்பாட்டம், கரிசல்குளம், அழகாபுரி உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் அடங்கியுள்ளன.

    நூற்பாலைகள் அதிகம் நிறைந்த இத்தொகுதியில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருத்துவ பேண்டேஜ் துணிகள் தயாரிப்பு நிறுவனங்களும், நைட்டி போன்ற உடைகள் தயாராகும் ஆயத்த ஆடை நிறுவனங்களும் அதிகம் உள்ளன. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். மாம்பழ சீசன் காலங்களில் இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படும்.

    ராஜபாளையம் தொகுதி

    இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்று திகழும் ராஜபாளையம் தொகுதியில் தேவர் சமூகத்தினர் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் வாக்காளர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர். ஆனால் இந்த தொகுதியில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் நாடார், நாயக்கர் மற்றும் ராஜூக்கள் சமூகத்தினர்தான் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

    ராஜபாளையம் தொகுதி

    ராஜபாளையம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,34,377. இதில் ஆண்கள் 1,14,381, பெண்கள் 1,19,969, மூன்றாம் பாலினத்தவர் 27. ராஜபாளையம் தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க. 5 முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போது இந்த தொகுதி தி.மு.க. வசம் உள்ளது. மேலும் ராஜபாளையம் யூனியனும் தி.மு.க. வசமே உள்ளது. தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டு ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இங்கு எம்.பி.யாக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த தனுஷ்குமார். ராஜபாளையம் நகரசபை காலியாக உள்ளது.

    முக்கிய கோரிக்கைகள்

    இந்த தொகுதியில் நூற்பாலை முக்கிய தொழிலாக உள்ளது. இதற்கு அடுத்தாற்போல் விவசாயம் உள்ளது. பஞ்சு கொள்முதல் விலையை சீர்படுத்த வேண்டும் என்பதுதான் நெசவாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. மேலும் இங்கு மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருப்பது பாதாள சாக்கடை திட்டம். இந்த திட்டத்தை நிறைவேற்றி சுகாதாரத்தை காக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம், ரெயில்வே மேம்பாலம், தாமிரபரணி கூட்டு குடிநீர்திட்டம் ஆகியற்றுக்கு ஒரே நேரத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ராஜபாளையம் தொகுதி

    இதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாத நிலையில் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாகவே காணப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் நகரில் அடிக்கடி ஏற்படுகிறது. திட்டங்கள் அனைத்தும் ஆமை வேகத்தில் நடப்பதாக குறைகூறும் பொதுமக்கள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்சினையாக இருப்பது புறவழிச்சாலை திட்டம். இந்த தொகுதியில் தென்காசி- மதுரை சாலை மட்டுமே உள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை. இந்த சாலையை மையமாக வைத்துத்தான் அனைத்து வாகனங்களும் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு புறவழிச்சாலை அமைக்க பல ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் இன்று வரை முடிவு எடுக்கப்படவில்லை.

    ராஜபாளையம் தொகுதி

    அதேபோல் மக்களின் இன்னொரு பிரச்சினை குடிநீர். 6-வது மைல் நீர்தேக்கம் முழு கொள்ளளவான 18 அடியை எட்டினாலும் ராஜபாளையம் நகருக்கு 12 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்கான காரணத்தை ராஜபாளையம் நகரட்சி நிர்வாகம் சரிவர சொல்லவில்லை. மேலும் தெருவிளக்கு, சுகாதார சீர்கேடு போன்றவற்றை நகராட்சி நிர்வாகம் சீர்படுத்தவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.

    ராஜபாளையம் தொகுதி

    ராஜபாளையம் தொகுதியில் மேலும் சில திட்டங்கள் தனியார் வசம் ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளது. அவர்கள் செய்யும் பணிகளை அதிகாரிகள் கேட்பதில்லை இதனால் முறையாக பணிகள் நடக்கிறதா? என்பது கேள்விற்குறியாகவே உள்ளது. மொத்தத்தில் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து உரிய தீர்வு காணும் அரசியல் கட்சிகளின் பதில்தான் இங்கு வெற்றியை நிர்ணயிக்கும்.

    2016 தேர்தல்

    தங்கப்பாண்டியன் (தி.மு.க. வெற்றி)- 74787
    ஷியாம் (அ.தி.மு.க.)- 69985
    குருசாமி (மா.கம்யூ.)- 12505
    ராமச்சந்திரராஜா (பா.ஜனதா)- 3435
    ஜெயராஜ் (நாம் தமிழர்)- 2414
    லட்சுமணன் (பா.ம.க.)- 1703
    ஜெயபிரகாஷ் (சுயேட்சை)- 919

    தேர்தல் வெற்றி

    ராஜபாளையம் தொகுதி இதுவரை
    ராஜபாளையம் தொகுதி இதுவரை

    1971- சுப்பு (இந்திய கம்யூ.)
    1977- தனுஷ்கோடி (அ.தி.மு.க.)
    1980- மொக்கையன் (அ.இ.பா.பி.)
    1984- ராமன் (காங்கிரஸ்)
    1989- வி.பி.ராஜன் (தி.மு.க.)
    1991- சாத்தையா (அ.தி.மு.க.)
    1996- வி.பி.ராஜன் (தி.மு.க.)
    2001- ராஜசேகர் (அ.தி.மு.க.)
    2006- சந்திரா (அ.தி.மு.க.)
    2011- கோபால்சாமி (அ.தி.மு.க.)
    2016- தங்கப்பாண்டியன் (தி.மு.க.)
    Next Story
    ×