என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

மதுரை மத்திய தொகுதி
திமுக வெற்றியை தக்க வைக்குமா?- மதுரை மத்திய தொகுதி கண்ணோட்டம்
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் முக்கிய தொகுதியான மதுரை மத்திய தொகுதியின் கண்ணோட்டம்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் முக்கியமானது மதுரை மத்திய தொகுதி. இந்தியாவின் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்து இருக்கும் தொகுதி. அடுத்தபடியாக கூடல் அழகர் பெருமாள் கோவில். இம்மையிலும் நன்மை தருவார் கோவில் உள்ளிட்ட எண்ணற்ற ஆலயங்கள் இந்த தொகுதியில் உள்ளன.
மதுரையின் பழமையை உலகுக்கு பறைசாற்றும் பல்வேறு வரலாற்று தலங்கள், மத்திய தொகுதியின் முக்கிய அடையாளங்களில் ஒன்று.

இதுதவிர கோட்ட ரெயில்வே அலுவலகம், தலைமை தபால் அலுவலகம், மத்திய சிறைச்சாலை உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்கள் உள்ளன.
மதுரை மத்திய தொகுதியில் 2,34,511 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 1,18,891 பேர் பெண்கள். 1,15,615 பேர் ஆண்கள். 47 பேர் மூன்றாம் பாலினத்தினர்.

மதுரை மத்திய தொகுதியில் மாநகராட்சியின் 8-18, 77-87 உள்பட 22 வார்டுகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 4 மாசி வீதிகள், தத்தனேரி, ஆரப்பாளையம், கரிமேடு, மகபூப்பாளையம், எல்லீஸ்நகர், சிம்மக்கல் ஆகியவை முக்கிய பகுதிகள் ஆகும். இவை அனைத்தும் மதுரை மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வருகிறது.
மதுரை மத்திய தொகுதியில் இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக யாதவர்கள், முக்குலத்தோர், ஆதிதிராவிடர் மற்றும் பல்வேறு சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் இஸ்லாமியர்கள் 30 சதவீதம் பேரும், யாதவர், முக்குலத்தோர் தலா 15 சதவீதம் பேரும் உள்ளனர். இவர்கள்தான் இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர்.

இந்திய விடுதலைக்கு பிறகு மதுரை மத்திய தொகுதியில் முதல் முறையாக கடந்த 1971--ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்தது. தமிழக முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் காலமானதால் அந்த தொகுதிக்கு ஒரு தடவை இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஆக மொத்தத்தில் இதுவரை அங்கு 12 தடவைகள் சட்டசபை தேர்தல் நடந்து உள்ளது.
இதில் தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அ.தி.மு.க., த.மா.கா., தே.மு.தி.க. சுயட்சை ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளன.

மதுரை மத்திய தொகுதியில் ஜவுளிக்கடைகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவைதான் அங்கு வசிக்கும் மக்களுக்கு பொருளாதார சக்தியாக விளங்குகிறது.
மதுரை சுற்றுலா தலம் என்பதால் கோவில்களை சுற்றிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

எதிர்பார்ப்பு
மதுரை மத்திய தொகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் தொழிற்சாலைகள் இல்லை. எனவே இங்கு வசிக்கும் படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பு கேள்விக் குறியாக உள்ளது. அடுத்தபடியாக மின்வெட்டு, குடிதண்ணீர் பற்றாக்குறை, சாலை வசதியின்மை உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளன. பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்னமும் முழுமையாக நிறைவேற்றித் தரப்படவில்லை.
மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் ஏற்பட்டு உள்ள தொய்வு காரணமாக அங்கு வசிக்கும் எண்ணற்ற வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2016 தேர்தல்
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் (தி.மு.க. வெற்றி) - 64662
ஜெயபால் (அ.தி.மு.க.) - 58900
சிவமுத்துக்குமார் (தே.மு.தி.க.) - 11235
கார்த்திக் பிரபு (பா.ஜனதா) - 6926
வெற்றிகுமரன் (நாம் தமிழர்) - 2998
ஜாபர் சுல்த்தான் இப்ராகிம் (எஸ்.டி.பி.ஐ.) - 1686
செல்வம் (பா.ம.க.)- 1007
சுதாகர் (பார்வர்டு பிளாக்)- 471
தவமணி (பி.எஸ்.பி.)- 203
தேர்தல் வெற்றி


1971- திருப்பதி (தி.மு.க.)
1977- லட்சுமி நாராயணன் (அ.தி.மு.க.)
1980- பழ.நெடுமாறன் (சுயேட்சை)
1984- தெய்வநாயகம் (காங்கிரஸ்)
1989- பவுல்ராஜ் (தி.மு.க.)
1991- தெய்வநாயகம் (காங்கிரஸ்)
1996- தெய்வநாயகம் (காங்கிரஸ்)
2001- எம்.ஏ.ஹக்கீம் (தா.மா.க.)
2006- பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் (தி.மு.க.)
2011 சுந்தரராஜன் (தே.மு.தி.க.)
2016 பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் (தி.மு.க.)
Next Story






