search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரவாயல் தொகுதி
    X
    மதுரவாயல் தொகுதி

    மதுரவாயல் தொகுதி கண்ணோட்டம்

    ராமாபுரம், போரூர், வானகரம் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட மதுரவாயல் தொகுதி குறித்து ஒரு பார்வை.
    திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மிகவும் முக்கியமான தொகுதி மதுரவாயல் சட்டமன்ற தொகுதி ஆகும். கடந்த 2011-ம் ஆண்டு மறுசீரமைப்பின்போது மதுரவாயல் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடு மற்றும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் போரூர் ஏரி இந்த தொகுதியில்தான் உள்ளது. 

    மதுரவாயல் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 48 ஆயிரத்து 851. இதில் ஆண்கள் 2 லட்சத்து 26 ஆயிரத்து 245 பேர், பெண்கள் 2 லட்சத்து 22 ஆயிரத்து 464 பேர், மூன்றாம் பாலினத்தவர் 142 பேர் உள்ளனர். 

    நெற்குன்றம், ராமாபுரம், போரூர், காரம்பாக்கம், வளசரவாக்கம், முகப்பேர், நொளம்பூர் ஆகிய முக்கிய பகுதிகள் தொகுதிக்குள் அடங்கி உள்ளன. வானகரம், அடையாளம்பட்டு, அயப்பாக்கம் ஆகிய 3 ஊராட்சிகள், அம்பத்தூர் மாநகராட்சி மண்டலத்துக்கு உட்பட்ட 2 வார்டுகள் வளசரவாக்கம் மாநகராட்சி மண்டலத்துக்கு உட்பட்ட 13 வார்டுகள் இதில்  இருக்கின்றன.

    மதுரவாயல் தொகுதி

    இங்கு வன்னியர், தலித், முதலியார் மற்றும் நாயுடு சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். இத்துடன் முஸ்லிம், கிறிஸ்தவர்களும் குறிப்பிட்ட அளவு இருக்கிறார்கள். இவர்களில் வன்னியர் 40 சதவீதம் பேர், தலித் 35 சதவீதம் பேர், நாயுடு மற்றும் முதலியார் தலா 10 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இவர்கள்தான் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளனர். இதுவரை நடந்து முடிந்த 2 தேர்தல்களிலும் அ.தி.மு.க. கூட்டணியே இங்கு வெற்றி பெற்றுள்ளது.

    தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள்

    பேரூராட்சி, நகராட்சிகளாக இருந்து வந்த பகுதிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டும் பல இடங்களில் சாலைகள்  பாதாள சாக்கடை, மெட்ரோ குடிநீர், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக செயல் படுத்தப்படவில்லை, நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு உள்ள மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை திட்டம், 3 ஊராட்சி களையும் மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    மதுரவாயல் தொகுதி ஆரம்ப காலத்தில் பல கிராமங்களை கொண்டதாக இருந்தது. ஆனால் இப்போது அனைத்து பகுதிகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து அவையும் பெரும் நகர பகுதியாக மாறிவிட்டன.

    மேலும் சென்னை பெருநகரின் நுழைவு பகுதியாகவும் மதுரவாயல் தொகுதி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட் அருகில்  உள்ள பல தொழிற்பேட்டைகள் பல்வேறு தொழிற்கூடங்கள் போன்றவற்றில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மதுரவாயல் தொகுதியில்தான் வசிக்கின்றனர். ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் அதிகம் நிறைந்த தொகுதியாகவும் மதுரவாயல் உள்ளது.

    மதுரவாயல் தொகுதி

    பெரும்பாலான இடங்களில் சாக்கடை பிரச்சினைக்கு உரிய தீர்வு இல்லாமல் இருப்பதால் அவதிக்குள்ளாகி வருகிறோம் என்று மக்கள் கூறுகின்றனர்.

    தொகுதியில் முக்கிய இடமான போரூர் பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும். இன்னும் சில இடங்களிலும் மேம்பாலங்களை அமைத்தால் நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

    தொகுதியில் முக்கிய ஏரிகளாக உள்ள போரூர் ஏரி, மதுரவாயல் ஏரிகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்று பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.

    தொகுதியில் சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காலம், காலமாய் கோவில் நிலங்களில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    தொகுதியில் நிலத்தடி நீர் பிரச்சினை இப்போது பூதாகரமாக மாறி வருகிறது. கடந்த காலங்களில் தாராளமாக நிலத்தடி நீர் கிடைத்து வந்த பகுதிகளில் கூட இப்போது தண்ணீர் வற்றி விட்டது. எனவே மழை நீர் சேகரிப்பு திட்டங்களை மீண்டும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.

    தொகுதி முழுவதும் புதிய குடியிருப்பு பகுதிகள் அதிகமாக உருவாகி உள்ளன. அங்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். அதுவும் மழைக் காலத்தில் பெரும் துயரத்தை சந்திக்கும் நிலையில் உள்ளனர். இதற்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் எண்ணமாக உள்ளது.

    மதுரவாயல் தொகுதியில் இதுவரை

    2011-ல் நடந்த முதல் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் பீம்ராவ் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் பெஞ்சமின் வெற்றி பெற்றார்.

    2016 தேர்தல்

    பெஞ்சமின் (அ.தி.மு.க.)-  99739
    ராஜேஷ் (காங்கிரஸ்)- 91337
    பீம்ராவ் (மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு)- 19612
    சீனிவாசன் (பா.ம.க.)- 17328
    வாசு (நாம் தமிழர்)- 6181
    ஆனந்தபிரியா (இந்திய ஜனநாயக கட்சி)- 4582
    முகமது அப்பாஸ் (பகுஜன் சமாஜ்)- 807
    தனசேகர் (இளைஞர்மாணவர்கட்சி)- 549
    கணபதி சுரேஷ் (சுயேட்சை)- 503
    ராஜேஷ் (சுயேட்சை)- 430
    ஸ்ரீரங்க நாராயணன் (கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி)- 274
    ஸ்ரீனிவாசன் (சுயேட்சை)- 269
    ரவி (சுயேட்சை)- 173
    அருண்குமார் (சுயேட்சை)- 158
    நோட்டா- 6655

    செயல்பாட்டுக்கு வரும் பறக்கும் சாலை

    நீண்ட காலமாக கிடப்பில்  போடப்பட்ட மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்கு மறுபடியும் அனுமதி அளித்து நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    எனவே இந்த திட்டம் மறுபடியும் வேகம் எடுக்க உள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் மதுரவாயல் தொகுதிக்கு மேலும் பெருமை சேர்க்கும் ஒன்றாக அமையும். அத்துடன் தொகுதியும் பல்வேறு வகையில் வளர்ச்சி அடையும்.
    Next Story
    ×