என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  துன்பம் இல்லா வாழ்க்கைக்கு வழிகள்
  X
  துன்பம் இல்லா வாழ்க்கைக்கு வழிகள்

  மருத்துவம் அறிவோம்: துன்பம் இல்லா வாழ்க்கைக்கு வழிகள்-233

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மருத்துவம் அறிவோம் என்ற தலைப்பில் துன்பம் இல்லா வாழ்க்கைக்கு வழிகள் குறித்து டாக்டர் கமலி ஸ்ரீபால் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
  நாம் மற்றவர்களை சந்திக்கும் பொழுது ஒரு மனித நேய கேள்வியாக எப்படி இருக்கீங்க? என்று விசாரிப்போம். பலர் மரியாதைக்காக கூட புன்னகைக்க முடியாத வகையில் நல்லா இருக்கேன் என்பர். உள்ளத்தில் கொப்பளிக்கும் வேதனைகள் பின்னலாய் முகத்தில் வந்து செல்லும். இன்னும் சிலர் ‘ஏதோ இருக்கேன்’, ‘காலத்தினை ஓட்டுகின்றேன்’ என பேச்சிலேயே தன் வாழ்வின் நிலையினை கோடிட்டு காட்டுவர். மற்றும் சிலர் தன் உடல்நிலை, பண கஷ்டம், குடும்ப சூழ்நிலை இவற்றினை முன்பின் தெரியாதவனிடம் கூட மூன்று மணி நேரம் பேசுவர். ஆக மொத்தத்தில் மிக அதிக சதவீதம் நபர்கள் ஏதோ ஒரு துன்பத்தில் மூழ்கி இருக்கின்றனர் என்பதே உண்மை.

  ‘ஆசையே துன்பத்திற்கு காரணம்’-புத்தர்.  உண்மைதான். இதனை சொல்லவும், கடைப்பிடிக்கவும் ஞானி புத்தரால் முடிந்தது. அவர் தனது முற்பிறவிகளை நினைவுகூறும் பொழுது ஒரு பசித்த சிங்கத்திற்கு தன்னையே உணவாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நமக்கு இதெல்லாம் சரிபடுமா? நடக்குமா? நினைத்துப் பார்த்தாலே பயம் வந்து விடுகின்றது. இந்த அளவு முடியாவிட்டாலும் துன்பங்கள் இல்லா வாழ்க்கைக்கு சில வழிமுறைகளை கண்டுபிடிக்க முயல்வோமே!!
  துன்பங்களுக்கு ஒரு காரணம் மாற்றங்களை குறிப்பாக நல்லது அல்லாது நிகழும் மாற்றங்களை நம்மால் ஒப்புக் கொள்ள, ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. வாழ்க்கை என்பது அனைவருக்கும் ஒரு சுழற்சிதான். இறப்பு, பிறப்பு, செல்வம், வறுமை, மகிழ்ச்சி, துக்கம் நிறைந்ததுதான். நம் விருப்பப்படி போக முடிவதில்லை. பல நிகழ்வுகளை உங்கள் மனது சரி என்று ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இது வாழ்வின் நியதி. அதற்காக முயற்சிகள் செய்யாது இருக்க  வேண்டாம். விளைவுகளை இறைவன் பதில் அல்லது இயற்கையின் பதில் என்று விட்டுவிட வேண்டும்.

  திடீரென செய்ய முடியாவிட்டாலும் விடாது  முயற்சி செய்ய வேண்டும். சரி மேலும் பார்ப்போம்...! நாம் நம்மை இந்திரன், சந்திரன், உலகிலேயே அதி நேர்மையானவன் என கண்டதையெல்லாம் நம் மனதில் ஏற்றிக் கொண்டால், மற்றவர்கள்நம்மை பார்க்கும் பார்வை மண்டை கனம் கொண்டவன், சுய விளம்பரப் பிரியன், கெட்டவன் என கொள்ளும் பொழுது உண்மையானவனாக மாறவும் முடியாமல், தீய கற்பனை, போதை எண்ணங்களில் இருந்து வெளி வரவும் முடியாமல் திண்டாடும் போது எத்தனை கஷ்டங்கள் உருவாகுகின்றன தெரியுமா?

  நம்மை நாம் நம்ப வேண்டும். நம் உள்ளுணர்வு சொல்வதனை ஐம்புலன்களை சற்று கட்டுப்பாட்டில் வைத்தாலே பல விஷயங்களுக்கான தீர்வு நமக்கே கிடைத்து விடும். இது கண்டிப்பாய் அநேகருக்கு இல்லை. சற்று நேரம் கை, கால் மடக்கி அமைதியாய் அமர முடிவதில்லை. சாப்பாடோ, பேச்சோ திறந்த வாயை மூடுவதே இல்லை. பிராணாயாமம், சீரான மூச்சு பயிற்சி இவையெல்லாம் யோகா மாஸ்டர் மட்டுமே செய்வார். செல்போன், டி.வி. இவற்றுக்கு ஓய்வே இல்லை. பின் எப்படி நம்மால் தீர்வு காண முடியும். வெளி உதவிகளை தேடி ஓடுகின்றோம். ஏமாறவும் செய்கின்றோம். இதனை கண்டிப்பாய் மாற்றி நியாயமான வாழ்க்கை முறையினை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவை இல்லாவிடில் வாழ்க்கையினை எதிர் கொள்வது மிகக்கடினம் என்பதனை உணர வேண்டும்.

  உள் ஒன்று வைத்து புறமொன்று பேசுவது- அநேகரும் இப்படியே உள்ளனர். குடும்ப உறவுகள் முதல் வெளிவட்டார பழக்கம் வரை இப்படியே காணப்படுகின்றது. மருத்துவரிடம் கூட முழுமையான உண்மைகளை சொல்வதில்லை. ஏன் இந்த பழக்கம், புரியவில்லை. ஆனால் மற்றொன்று புரிந்தது. இப்படி வாழ்வோரின் வாழ்க்கை பூலோக நகரம்தான்.

  நாம் எல்லோருமே நட்சத்திர தூசிதான். விண் வெளி துகள்கள்தான். தனி ஒரு மனிதன் தன் ஒழுக்கமான வாழ்க்கை முறை, சாதனைகளால் உயர்வு  பெறலாமே தவிர மொத்தத்தில் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள்தான். இது விஞ்ஞான உண்மை.
  உண்மையினை கலப்படம் இன்றி ஏற்றுக் கொள்ளும் சக்தி வேண்டும்.

  நம் தோல்விகளுக்கு நம் திறமையின்மையே காரணம். அதற்கான பலிகடா ஒன்றினை உருவாக்காதீர்கள்.
  இப்படி ஒரு கட்டுரை திடீரென எழுதப்பட ஏதாவது காரணம் இருக்கின்றதா? ஆமாம். சமீபத்திய சில நிகழ்வுகள் மனதினை அனைவருக்கும் பாதித்திருக்கத்தான் செய்திருக்கும்.

  பள்ளி மாணவர்களின் புரிந்து கொள்ளாத நடவடிக்கைகள் அனைத்து பெற்றோர் மனதிலும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. இது உலகெங்கிலும் நடைபெறும் நிகழ்வாகத்தான் இருக்கின்றது. இவர்களுக்கு இவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய நல்ல உதாரணங்களை நாம் காட்ட வேண்டும். சுந்தர் பிச்சை அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை, படிப்பு, உழைப்பு, உயர்வு என அவரது புத்தகங்களை அடிக்கடி படிக்கச் செய்ய வேண்டும்.சத்தமாய் பேசும் வார்த்தைகளை விட சத்தமே இல்லாத பேசாத வார்த்தைகளான எழுத்துக்களுக்கு என்றுமே பலம் அதிகம்.

  இதே போன்றுதான் அரசியல், விளையாட்டு, சினிமா துறைகளில் முன்னணியில் இருப்பவர்களின் வாழ்க்கையினைப் பற்றி அறியச் செய்ய வேண்டும். வாழ்க்கையின் நேர்மையான முறை மனதில் தானாய் பதியும். முரட்டுத்தனங்கள், அலட்சியங்கள் வெகுவாய் குறையும். ஒவ்வொரு தனி நபரின் முன்னேற்றமும் இந்தியாவின் முன்னேற்றமே.

  இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். வறுமையும் அதிகம். ஆகவேதான் முன்னேற்றம் கடினமாக இருக்கின்றது என்று பேசுபவர்கள் சீனாவினைப் பார்க்க வேண்டும். மக்கள் தொகையினை மீறி வறுமையினை அழித்து உலகில் முன்னணியில் இருக்கும் அவர்களின் பல கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது இருக்கலாம். ஆனால் அவர்களின் கடின உழைப்பினை மிஞ்சுவதும் சவால்தான். இந்த கடின உழைப்பும், முன்னேற்றமும் நம் நாட்டிற்கும், நம் இளைய சமுதாயத்திற்கும் வர வேண்டும் அல்லவா? சில முன்னேற்றங்களைப் பெற மேற்கூறிய சில ஒழுக்க முறைகளும் அவசியம். 

  ஆக அன்றாடம் குழந்தைகளை 20 நிமிடம் ஓடப் பழக்குங்கள். 20 நிமிடமாவது உடற்பயிற்சிக்கு பழக்குங்கள்.
  அவர்கள் அமைதியாய் இருக்க வேண்டும், அளவாய் பேச வேண்டும். நிறைய நல்ல கருத்துக்களை கேட்க வேண்டும். கெட்ட சகவாசம் வேண்டாம்.
  போலியான சுய தம்பட்ட டிராமாக்கள் வேண்டாம். இவையெல்லாம் அவரவர் பிள்ளைகளுக்காக மட்டுமல்ல. நாட்டிற்கு ஆற்றும் கடமையாகும்.
  சென்னையில் சமீபத்தில் நிகழ்ந்த இரட்டை கொலை அனைவரையும் திகில் அடையச் செய்தது. நடந்தது கொடூர முறை, நம்பிய வீட்டிற்கு துரோகம் செய்ய வைத்தது பணத்தின் மீதான ஆசை. இவை நம்பிய மக்களை கொன்றது. பணத்தின் மீதான தவறான பேராசை, செய்தவரின் வாழ்வினையே அழித்து விட்டது. இரு பக்க உறவினர்களுக்கும் தீரா மன வலி. இப்படி ஒரு நிகழ்வு ஏற்படாமல் இனியாவது இருக்க தனி மனித ஒழுக்கம், கட்டுப்பாடு இவை அவசியம் அல்லவா.

  இவை எதுவும் இல்லாமல் தேவையில்லாமல் அடுத்தவரை பாதிக்கும் கடும் செயல்களை செய்து வாழ்வதுதான் வாழ்க்கை என வாழும் சிலரால் ஒட்டு மொத்த சமுதாயம் பாதிக்கப்படுகின்றதே. இனியாவது இவர்கள் மாற வேண்டும். சமுதாயம் அவர்களை மாற்ற வேண்டும்.

  பலருக்கு அடிக்கடி அழிவுப் பூர்வமான எண்ணங்கள் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. இதன் வெளிப்பாடாக கடுமையான சொற்கள், சண்டை, கோபம், கொப்பளிக்கும் பகை ஏற்பட்டு வீட்டிலும் சரி, வெளியிலும் சரி இவர்களால் மற்றவர்களுக்கு துன்பம் ஏற்படுகின்றன.

  இந்த குணங்களே சிலரை அடிதடி என ஆரம்பித்து கொலை செய்யும் அளவு தூண்டி விடுகின்றன. பலர் காலையில் எழுந்தவுடன் மற்றவர்களின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொள்வதும், அவர்களின் வீழ்ச்சிக்காக ஏங்குவதுமாய் இருக்கின்றனர். பில்லி சூனியம் என்ற வழிகளில் செல்கின்றனர். இயலாதோர் மனதினாலேயே மற்றவரை கரித்து, சபித்து கொட்டி விடுகின்றனர்.
  ‘கெடுவான் கேடு நினைப்பான், வாள் எடுத்தவன் வாளால் வீழ்வான்’ என்ற வார்த்தைகள் மனதில் பதிவதில்லை. ஒரு மனிதன் தான் நல்லவராய் இருந்தால் மட்டும் போதாது. சுற்றியுள்ள தீமைகளில் இருந்தும் தன்னை காத்துக்கொள்ள வேண்டும். ஆக சிறுசிறு அழிவுப்பூர்வமான எண்ணங்கள் ஒருவரிடம் இருந்தால் கீழ்கண்ட முறைகளில் பயிற்சி மேற் கொள்ளலாம். பல நிபுணர்கள் ஆய்ந்து கொடுத்த பயிற்சி  முறைகள் இவை. கண்டிப்பாய் இவை கெடுதலான எண்ணங்களை அழிக்கும்.

  * சதாசர்வ காலமும் கெடுதலான எண்ணங்கள் தாக்குகின்றதா? அதிலேயே மூழ்கி விடுகின்றீர்களா? தினமும் அதற்கென்று 5 முதல் 10 நிமிடம் ஒதுக்கி விடுங்கள்.உங்கள் அழிவுதரும்  எண்ணங்களை இந்த நேரத்திற்குள் சுறுக்கி விடுங்கள். மீதமுள்ள நாள் முழுவதும் உங்கள் வேலை குடும்பம், முன்னேற்றம் இவற்றில் செலவிடுங்கள். ஆரம்ப காலத்தில் அடிக்கடி தீய எண்ணங்கள்  குறுக்கிட்டுக் கொண்டே  இருக்கும். அதனை மிரட்டி அடக்கி விடுங்கள். உனக்கென  குறிப்பிட்ட நேரம் கொடுத்தாகிவிட்டது. இப்போ வராதே-போ என விரட்டி விடுங்கள். இந்த முயற்சி கூட செய்ய முடியாதா என்ன?  காலப்போக்கில் தீய எண்ணங்கள் அலுத்து சலித்து ஓடிவிடும். இது ஆய்வானர்கள் கூறுவது. வாழ்க்கையில் அடுத்தவரை நினைத்தே கரித்து கொட்டி தன் வாழ்வினை அழித்துக்கொள்பவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. விட்டு விடாதீர்கள்.

  நாம் ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால் என்ன நல்ல விளைவுகள் ஏற்படும்? அழிவுப்பூர்வமாக சிந்தித்தால் என்ன விளைவுகள் ஏற்படும்? என்பதனை எழுதி எழுதி பாருங்கள். அவை கெட்ட எண்ணங்களை அழித்து விடும்.
  தியானம், பிராணாயாமம் இவை கண்டிப்பாய் ஆக்கப்பூர்வமான மன மாற்றத்தினை ஏற்படுத்தும். ஆழ் மனத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். ஆழ் மனமே உங்கள் வாழ்வின் ஆதாரம்.இது சரியாகி விட்டால் மனம் ஆக்கப்பூர்வமாக மட்டுமே சிந்திக்கும். ஆக்கப்பூர்வமான செயல்கள் நிகழும். முயற்சி செய்யலாமே.
  Next Story
  ×