search icon
என் மலர்tooltip icon

  சிறப்புக் கட்டுரைகள்

  கவிஞர் இரவிபாரதி
  X
  கவிஞர் இரவிபாரதி

  "தவக்கோலம் தரித்து" தனிமையிலே இனிமை காணத்துடித்த கண்ணதாசன்- 23

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கற்பனையில் மிதப்பதை விட்டுவிட்டு, நிஜ வாழ்க்கைக்கு ஒவ்வொரு மனிதனும் வந்தாக வேண்டும்.


  தகுதி இருந்தால் தொகுதி நிச்சயம் என்று அரசியல் உலகில் பேசப்படுவதுண்டு. இது அரசியலுக்கு மட்டுமல்ல. பொதுவாகவே இது எல்லோருக்கும் பொருந்துகிற பொன்மொழிதான். விதை விதைக்காமல், உழைக்காமல், விளைச்சலை எதிர் நோக்கினால் எப்படி?

  புகழ் மகுடம் என்பது அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கிடைத்து விடாது. எந்தவித லட்சியமும் இல்லாமல் சித்தம் போக்கு சிவம் போக்கு என்று திரிபவர்களுக்கு எந்தப் பெருமையும் வந்து சேரப் போவதில்லை. அவர்கள் வெந்ததைத்தின்று, விதி வந்தால் சாவோம் என்றிருப்பார்கள். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாதவர்கள். அவர்களை நினைத்து அனுதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. இதைதான்

  “ஓடுவது காட்டுவழி உறங்குவது வெட்டவெளி

  தேடுவது புகழானால் சிறிதளவும் கிடைக்காது

  ஏரில்லா விவசாயி எருமையில்லா பால்காரன்

  தேரில்லாத் திருக்கோயில் தேம்பித்தான் அழவேண்டும்”

  இப்படி நான்கு வரிக் கவிதையில் நச்சென்று உரைக்கிறார் கண்ணதாசன்.

  கற்பனையில் மிதப்பதை விட்டுவிட்டு, நிஜ வாழ்க்கைக்கு ஒவ்வொரு மனிதனும் வந்தாக வேண்டும். எந்த ஊர் செல்லப் போகிறோம் என்பதை தீர்மானித்த பிறகே அந்த ஊரின் வழியை அறிந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். திசை தெரியாமல் பயணம் போனால் அற்புதமும் இருக்காது. ஆனந்தமும் கிடைக்காது என்கிறார் கண்ணதாசன்.

  கற்பனையில் நீராடி கனவில் உடைஉடுத்தி

  அற்புதங்கள் காண்பதிலே ஆனந்தம் என்ன உண்டு?

  எந்த ஊர் செல்லுகிறோம் என்பதை நீ கண்டால்தான்

  அந்த ஊர் போகும்வழி அறிந்து கொள்ள முடியும்.

  இதை விட எளிமையாய் உரைத்திட எவராலும் இயலாது.

  திட்டமிடாமல் பயணம் போனால், கல்லும் முள்ளும் உன் காலைப் பதம் பார்த்து விடும். ஜாக்கிரதையாய் இருந்து நடந்து கொள் என்று எச்சரிக்கிறார் கண்ணதாசன். எதிர்வரும் ஒவ்வொரு நாளைப் பற்றியும் புதிது புதிதாய் சிந்திக்கும் அறிவுடையோர்க்கு நல்ல வேளையும் பிறந்து விடும். நல் வாழ்வும் கிடைத்து விடும்.

  “அப்பன் வினைப் பயனாய்” ஆத்தாள் பெற்றெடுத்து விட்டாள். எப்படியாவது அந்த ஈசன் நம்மைக் காப்பான் என உழைக்காமல் வீட்டிலே இருந்து விட்டால் பசித்தபடிதான் உன் வாழ்க்கை வண்டி போய்க் கொண்டிருக்கும். பசிப்பதற்கு ஏதும் உனக்கு கிடைக்காது. உணர்ந்து உனக்கு ஒரு வழியைத் தேடிக் கொள். அந்த வழியிலே உண்மை இருக்குமானால் அதுவே உனக்கு உற்ற துணையாகி விடும் என்பதை

  செல்லும் பயணத்தில் திட்டமில்லை என்று சொன்னால்

  கல்லோடு முள்ளும் உன் காலை உறுத்தி விடும்

  நாளை அறிந்தவர்க்கும் நல்வழி கண்டவர்க்கும்

  வேளை பிறப்பதுண்டு, விருந்தும் கிடைப்பதுண்டு.

  கூத்தாட்ட ரங்கத்து கோமாளி போலிருந்தால்

  பார்த்தால் சிரிப்பு வரும், பசித்தபசி தீராது

  ஆத்தாளே பெற்று விட்டாள், அப்பன் வினைப்பயனாய்

  காத்தாளும் ஈசனவன் கண்ணுக்குத் தெரிவதில்லை

  நம்மை நாமே நடத்தி நல்வழியை கண்டு கொள்ளாமல்

  உண்மை துணைக்கு வரும்! உதவிக்கு தெய்வம் வரும்

  கோவிலுக்கு சென்று கூத்தாட தேவையில்லை

  கும்பிடும் குல தெய்வம் கூட வந்து காத்து நிற்கும்

  என்ற வைர வரிக்கவிதையால் நம் இதயங்களை ஈர்த்து விடுகிறார் கண்ணதாசன். எதார்த்தமான உண்மையை எளிமையாக, இயல்பாகச் சொல்லியிருக்கிறார்.

  நல்வழியில், உண்மையாக நடப்போரை தெய்வம் ஒரு போதும் கைவிடுவதில்லை. எனது வேண்டுகோளை இறைவன் உடனே நிறைவேற்றவில்லையே... சோதனை மேல் சோதனை வருகிறதே என்று புலம்புவதில் அர்த்தமில்லை. அதற்காக கோவில் கோவிலாகச் சென்று பரிகாரங்கள் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.

  வயதாக... வயதாக... சிந்தனைகளின் தேரோட்டம் மாற்று திசை நோக்கிச் செல்வதை நன்றாய் நமக்கு உணர்த்துகிறார். கிடைத்த வாலிப நாட்கள் அனைத்தும் ஓடி மறைந்து விட்டன. அவை திரும்பி வருவதற்கான வாய்ப்பே இல்லை.

  ஏது திரும்பினும் என்ன நடப்பினும்

  இளமை திரும்பிடுமோ? ஒரு

  தேதி நடந்திட திங்கள் கடந்திட

  திரையும் விழுந்திடுமோ...?

  என்று பேசுகிறார் கண்ணதாசன். வயதின் முதுமையைத்தான் “திரை” என்று குறிப்பிடுகிறார்.

  உடம்பை சூடேற்றி, உணர்ச்சியைத் தூண்டுகிற ரத்தம் இப்போது என் உடம்பிலே இல்லை. ஞானமார்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் ரத்தமே இப்போது என் உடம்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. இனி “தனிமையில் தவம் புரிவதே” உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லதென்கிறார். அவருடைய அனுபவம் கவிஞரை அப்படி பேச வைத்திருக்கிறது.

  இன்னும் உடம்பில் ரத்தம் இருப்பினும்

  எண்ணம் அரும்பவில்லைஅதில்

  மின்னிடும் சிந்தனை ஞானமல்லால் சுக

  வேதனை ஏதுமில்லை.

  மன்னிய பக்குவம் எய்திய நாட்களை

  வாழ்வில் அடைந்து விட்டேன்இனி

  தன்னந் தனிமையில் தவம்புரி வோமெனக்

  கதவைத் சாத்தி விட்டேன்.

  இனிமேல் மேடை போட்டு, ஆடை அவிழ்க்கிற அந்த வாடைக் காற்று வருவதற்கு வாய்ப்பில்லாத வகையில் கதவுகளை இறுகச் சாத்தி விட்டேன் என்கிறார் கண்ணதாசன்.

  மங்கையர்கள் இனி, விழிக்கொரு சித்திரம் தீட்டி எனை வீழ்த்தவும் முடியாது. மலர்ந்து மணம் பரப்பும் அந்த தாமரைக் கன்னத்தைக் காட்டி என்னை வளைக்கவும் முடியாது. கனி இதழ் காட்டி எனக்கு போதை ஏற்றவும் முடியாது. இப்போது தவக்கோலம் பூண்டு விட்டேன் என்கிறார் கண்ணதாசன்.

  கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள ஏழாம் கவிதைத் தொகுப்பில் “தவக்கோலம்” என்ற தலைப்பிலே இந்தக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

  ஆள் நடமாட்டமில்லாத அற்புதமான இடத்தை தேடித்தான் என் மனம் அலை பாய்கிறது. அப்படி ஒரு இடம் கிடைத்து விட்டால் ஆனந்தத்திற்கு என் வாழ்வில் பஞ்சமில்லை. குற்றால அருவியாய்க் கொட்டுகிற என் எழுத்தும் கொஞ்சமில்லை என்று சொல்லுகிற வகையிலே “சாரமிருக்குதம்மா” என்ற கவிதையில் இயற்கை அழகையும், மழை பொழியும் முகிலின் எழிலையும் நடனமிடும் மயிலின் தோற்றத்தையும், குதித்தோடுகிற மான்களையும், அணில்களையும், அங்கே தவழ்ந்து வருகிற இளந்தென்றலின் சுகத்தையும் வரிக்கு வரி வண்ணம் பூசி வரைந்து வழங்கியிருக்கிறார் கண்ணதாசன்.

  அழகுமணி இலை உதிரும் இளையகனி மரங்கள்

  குழையும் மலர்க் கொடிகளோடு கூத்தாடும் மயில்கள்

  மழையுதிரும் முகில்கள் விளையாடு மொரு மன்றம்

  எழிற்கவிஞன் ஆடிவர எண்ணமுறும் சங்கம்

  தத்தைவரக் கண்டவுடன் தாவிவரும் அணில்கள்

  சித்திரம் நடந்ததெனச் சேர்ந்து வரும் மான்கள்

  புத்தமுத மாகஉடல் பூசும் இளங்காற்று

  அத்தனையும் வேண்டுவது ஆசையுள நெஞ்சு

  வானளவு சோலை.. அதில் வண்ணமலர் மாலை

  தேனளவு பார்த்தபடி வண்டுலவும் வேளை

  ஞானமுனி வோர்கள் நிலை நானடைய வேண்டும்

  மோனஇசை பாடி அதில் மோகமுற வேண்டும்.

  இப்படி எல்லாம் கவிதைகள் கண்ணதாசன் எழுதியிருக்கிறாரா? என்று நீங்கள் கேள்வி எழுப்புவதை என்னால் உணர முடிகிறது. கண்ணதாசன் உணர்ந்து, உறவாடி மகிழ்ந்தவர்களுக்கு கூட இந்தக் கவிதை புதிதாகத் தான் தோன்றும். ஏனென்றால் அவ்வளவாய் பேச்சாளர்கள் இதனை எடுத்தாழுவதில்லை.

  அடுத்து வருகிற கவிதையில் இன்னும் ஆச்சரியமான பல செய்திகள் வர போகிறது. அவற்றையும் உங்களின் கனிவான பார்வைக்கு முன் வைக்கிறேன்.

  காணி நிலம் வேண்டுமெனப் பாரதி கணிந்தான்

  ஏணி இலை பாவம் அவன் ஏற வழி இல்லை

  தோணி தனில் மாகடலைச் சுற்றி வரும் எண்ணம் வீணென முடிந்துவிடில் வாழ்ந்த கதை வீணே...

  ஆளரவமற்ற தொரு அற்புத இடத்தை

  நாள் முழுவதும் தேடிமனம் நாடி அலைகின்றேன்

  ஊழ்வினையில் அந்த சுகம் உண்டென நினைத்தே

  வாழுகிறேன் இறைவனொரு வாசல் தர வேண்டும்...

  ஈட்டியது கொஞ்சமல்ல என்னபலம் மீதம்

  காட்டுவதை காட்டியவன் கண்பறித்துக் கொண்டான்

  வாட்டியது போதுமடா வஞ்சமிலாக் கண்ணா...

  காட்டுவழி காட்டு அதில் காதலுறுகின்றேன்.

  தனிமை ஒருதனிமை அதில் தத்துவங்கள் கோடி

  இனிமை இது இனிமை என இன்னிசைகள் பாடி

  பனி மலர்கள் மயில்களுடன் பந்துவிளை யாடி

  கனிவகைகள் உண்ணவொரு காலவரு மோடி...!

  வறுமையுற்ற நிலையிலும், காணி நிலம் வேண்டுமென பாரதி கனவு கண்டான்... ஆனால் அந்த மீசைக் கவிஞனின் சின்ன ஆசை கூட அவன் வாழ்வில் நிறைவேற வில்லை. ஏற வழியில்லாத போது ஏணி வைத்திருந்து என்ன பயன்? தோணியை வைத்துக் கொண்டு நதியைச் சுற்றி வரலாம்...

  கடலைச் சுற்றி வரமுடியுமா? முடியாது தான்...

  ஆனால் இறைவன் நினைத்திருந்தால் இது முடிந்திருக்குமே...

  பாரதிக்கு ஏன் அதை செய்யவில்லை என்று கேள்வி எழுப்புகிறார் கண்ணதாசன்.

  பாரதி, வருமான மில்லாது வாழ்க்கையில் வாடினாலும்.. அவனது கவிதைகள் கோடிகளையும் மிஞ்சுமே...

  அருந்தமிழ்ச் சொற்கள் வரிசை கட்டி நின்று என்னைப் பயன்படுத்து, பயன்படுத்து என்று கெஞ்சுமே... அப்படிப்பட்ட மகா கவியின் வாழ்க்கையை பொசுக்கென்று முடித்து விட்டாயே இறைவா... இது என்ன நியாயம் என்று மெத்த வருந்துகிறார் கண்ணதாசன்.

  சரி அது போகட்டும்... நான் ஈட்டிய பணம் கொஞ்சமா? கணக்கில்லையே? என்ன பலனை நான் கண்டேன்... ஏதுமில்லையே? காட்டியது போல் காட்டி கண்ணைப் பறித்துக் கொண்டாயே கண்ணா வாட்டியது போதும். இனிமேலாவது எனக்கு நல்வழியைக் காட்டு என்று கண்ணனிடம் முறையிடுகிறார் கண்ணதாசன்.

  தனிமை என்னும் தத்துவத்தில் நீந்தி, அதில் இனிமை என்னும் ஞானரசம் ஏந்தி மலர்களோடும் மயில்களோடும் கொஞ்சி விளையாடி... விதவிதமாக கனிந்து தொங்கும் கனிகளை பறித்து உண்ணும் காலம் வந்தால் எப்படி இருக்கும்? என்று எண்ணிப் பார்த்து இந்தக் கவிதையில் உருகி இருக்கிறார் கண்ணதாசன். நடந்தது என்ன? ஏழை பாரதியின் கனவும் பலிக்கவில்லை. பணக்கார கண்ணதாசனின் கனவும் பலிக்கவில்லை.

  ஆனால் இருவரது கவிதைகளையும் இமயத்தில் உச்சியில் கொண்டு போய் உலகுக்கே வெளிச்சம் தரும் அணையா விளக்காக ஏற்றி வைத்து விட்டான் இறைவன்... யாரை எங்கே வைப்பது? என்னும் ரகசியத்தை இறைவன் இறுதிவரை ரகசியமாக வைத்திருக்கிறான்... பாரதியின் கவிைத உறங்கிக் கொண்டிருந்த மக்களை தட்டி எழுப்பி... வீரத்தை ஊட்டி ஒரு நாட்டிற்கே விடுதலை வாங்கி தந்து விட்டது.

  கண்ணதாசன் கவிதையோ வாழ்க்கைத் தத்துவத்தை சாறு பிழிந்து எடுத்து... வருந்தி நிற்கும் மனங்களுக்கு மருந்து போடுகிறது... இரவிலே கண்ணதாசன் பாட்டை கேட்டு விட்டுத்தான் பல்லாயிரம் பேர்கள் இன்று தூங்குகிறார்கள் என்பது தான் எவரும் மறுக்க முடியாத நிசர்சனமான உண்மையாகும். கண்ணதாசன் பாட்டுதான் பல பேருக்கு மருந்தாக இருக்கிறது.

  அடுத்த வாரம் சந்திப்போம்

  Next Story
  ×