என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

கடவுளின் காலடிகள்
ஆன்மிக அமுதம் 51 - கடவுளின் காலடிகள்
கடவுளை எந்த வடிவில் நாம் வழிபட்டாலும் அந்த வடிவத்தின் பாதங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து.
*திருக்குறள் எல்லா சமயத்திற்கும் பொதுவானதுதான். அவர் கடவுளின் பெயரையோ அடையாளத்தையோ நெற்றிக் குறிகளையோ குறிப்பிடவில்லை என்பது உண்மைதான்.
ஆனால் உருவமே இல்லாத அருவக் கடவுளை வள்ளுவர் கூறவில்லை. வள்ளுவர் கூறும் கடவுளுக்குப் பாதங்கள் உண்டு.
‘கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்`
`மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்`
‘வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.’
‘தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தாற் கல்லால்
மனக்கவலை மாற்றலரிது`
`அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லல்
பிறவாழி நீந்தல் அரிது.`
‘கோளில் பொறியில் குணமிலவே எண் குணத்தான்
தாளை வணங்காத் தலை.’
`பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்’
என்றெல்லாம் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் இறைவனின் திருவடிகளை மீண்டும் மீண்டும் போற்றுகிறார் வள்ளுவர்.
கடவுளை எந்த வடிவில் நாம் வழிபட்டாலும் அந்த வடிவத்தின் பாதங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து. கடவுள் சக்தியை உருவம் கொடுத்து வழிபடுவது வள்ளுவருக்கு உடன்பாடான தத்துவம்தான்.
*கடவுளைச் சரணடைதலைச் சரணாகதி என்கிறோம். சரணம் என்றால் பாதம் என்றே பொருள். விபீஷண சரணாகதி என்ற பகுதியில் பரம்பொருளேயான ராமபிரானின் பாதங்களில் விபீஷணன் விழுந்து பணிவதை ராமாயணம் சொல்கிறது.
ராமபிரானது பாதங்களை ராமாயணம் பல இடங்களில் போற்றுகிறது. அகலிகைக்கு சாப விமோசனம் அளித்தது அவன் பாதங்கள்தான்.
ராமன், கையால் அம்பு செலுத்தித் தாடகையின் உயிரை எடுத்தான். காலால் தீண்டி அகலிகைக்கு உயிரைக் கொடுத்தான்.
`மைவண்ணத் தரக்கி போரில்
மழைவண்ணத் தண்ணலே நின்
கைவண்ணம் அங்கு கண்டேன்
கால்வண்ணம் இங்கு கண்டேன்`
என ராமனின் திருவடி மகிமையைக் கம்ப ராமாயணத்தில் போற்றுகிறார் விஸ்வாமித்திர மகரிஷி.
துளசி ராமாயணம் குகன் ராமபிரானுக்குப் பாதபூஜை செய்ததை விளக்குகிறது. கல்லைப் பெண்ணாக்கிய பாதமல்லவா ராமனின் புனிதப் பாதம்?
`ராமனின் காலடியில் உள்ள மண்துகள் அவன் ஓடத்தில் பயணம் செய்யும்போது திடீரெனப் பெண்களாக மாறிவிட்டால் ஓடம் கனம் தாங்காதே?` எனச் சொல்லி ராமனின் அனுமதி பெற்று அவனுக்கு குகன் பாதபூஜை செய்தான் என்கிறார் தமது ராமசரித மானஸ் என்ற ராமாயண நூலில் துளசிதாசர்.
ராமபிரானது பாதங்களுக்கு மட்டு மல்லாமல் அந்தப் பாதங்களைத் தாங்கிய பாதுகைகளுக்கும் பெருமை வரும்படிச் செய்தான் பரதன். கானகம் வந்து ஸ்ரீராமனின் பாதுகைகளைப் பெற்று அவற்றிற்கு மகுடம் சூட்டி அரசாண்ட மகத்துவம் பரதனுடையது. ராமனின் காலணிகள் ஆட்சி பீடத்தில் அமர்ந்து பதினான்கு ஆண்டுகள் அரசாண்டன.
ராமபிரானின் பாதுகைகளைப் பற்றியே ஆயிரம் தோத்திரங்கள் அடங்கிய சம்ஸ்கிருத நூலைப் படைத்தார் மகான் வேதாந்த தேசிகர்.
*வாமனஅவதாரத்தில் மகாபலியிடம் யாசகம் கேட்க, குள்ள வடிவெடுத்துச் செல்கிறார் திருமால். மூன்றடி மண் கேட்டு, அதைக் கொடுப்பதாய் மகாபலி ஒப்புக் கொண்டபின் உலகளந்த பெருமாளாய் விஸ்வரூபம் காட்டுகிறார்.
ஓரடியால் மண்ணுலகையும் மற்றோ ரடியால் விண்ணுலகையும் அளந்த திருமால் மூன்றாம் அடியை மகாபலியின் வேண்டுகோளுக்கிணங்கி அவன் தலையில் வைத்தார் என்கிறது விஷ்ணு புராணம்.
திருமாலின் பாதம் விண்ணை அளந்தபோது அந்தப் பாதத்தை நீராட்டிப் பூஜித்தார் பிரம்மா. அந்த நீரே பெருக்கெடுத்து கங்கை என்ற புனித நதியாக உருக் கொண்டது.
வாமன அவதாரத்தில் உலகளந்த பாதங்கள் ராமஅவதாரத்தில் கானகத்தில் மெய்ந்நோக நடந்தனவே என இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவைப் பாடலில் உருகி உருகிப் பாடுகிறார்.
‘மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகை முடியத்
தாவிய சேவடி சேப்ப தம்பியொடும் கான் போந்து
சோஅரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!`
கும்பகோணத்தில் கோயில் கொண்டிருக்கும் சாரங்கபாணி என்கிற ஆராவமுதனைப் பற்றிப் பாடுகிறார் திருமழிசையாழ்வார். வாமன அவதாரத்திலும் ராமஅவதாரத்திலும் நடந்து நடந்து திருமாலின் பாதங்கள் வலி கண்டிருக்க வேண்டும். வராக அவதாரத்தில் நீரின் அடிப்பரப்பைப் பிளந்ததால் வலி உண்டாகியிருக்கும். அதனால்தான் கும்பகோணத்தில் துயில்கொண்டு வலிநீங்க ஓய்வெடுக்கிறானோ திருமால் எனக் கேட்கிறார் அவர்.
‘நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்குமால் வரைச்சுரம்
கடந்த கால் பரந்தகா விரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி கேசனே!’
*கண்ணனின் கால்கள் பிரசித்தமானவை. காளியன் என்ற பாம்பின்மேல் நடனம் செய்த கால்கள் அவை.
‘பாம்புத் தலைமேலே நடம்செய்யும்
பாதத்தினைப் புகழ்வோம்
மாம்பழ வாயினிலே குழலிசை
வண்மை புகழ்ந்திடுவோம்`
எனக் கண்ணனின் பாதத்தைப் புகழ்கிறார் மகாகவி பாரதி.
*`இடதுபாதம் தூக்கி ஆடும் நடராஜன் அடி பணிவையே நெஞ்சே` என சிவபெருமானின் பாதங்களைப் புகழ்ந்து பாடுகிறார் பாபநாசம் சிவன்.
‘காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே என்னைக்
கைதூக்கி ஆள் தெய்வமே!’
என காலைத் தூக்கி ஆடும் சிவனின் நடனக் கோலத்தைப் புகழ்ந்து கவிஞர் மாரிமுத்தா பிள்ளை ஒரு கீர்த்தனை எழுதியிருக்கிறார்.
*பாலன் தேவராயன் எழுதிய கந்த சஷ்டி கவசம், முருகனின் பாதங்களில் அணிந்திருந்த கொலுசுகளைப் பற்றிப் பேசுகிறது. அவன் கொலுசுகளிலிருந்து எழுந்த ஒலிகளையும் அது பதிவு செய்துள்ளது.
‘செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகு டிகு டங்கு டிங்குகு’
என வரும் ஒலிக்குறிப்புச் சொற்கள் முருகப் பெருமானின் கால் கொலுசுகளின் ஓசை என்ற வகையில் பாலன் தேவராயர் தன் உட்செவியில் கேட்டுணர்ந்து பதிவு செய்த மந்திர ஒலிகள். அந்த ஒலிகளை நம் மனத்தில் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து ஒலிக்கச் செய்வதன் மூலம் மன அமைதியைப் பெறலாம்.
*தேவர்களுக்குக் கால் நிலத்தில் தோயாது. தமயந்தி தன் சுயம்வரத்தில் தேவர்கள் தன் காதலன் நளனோடு நளன் உருவிலேயே நின்றபோது கால் நிலத்தில் தோய்ந்திருந்த மனித நளனைக் கண்டறிந்து அவனுக்கு மாலையிட்டாள் என்கிறது நளசரிதம்.
*கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரதம் முழுவதும் கால்களால் நடந்தே சென்றுவந்த மகான்கள் சிலர் வரலாற்றில் உண்டு. அவர்களில் பெரிதும் குறிப்பிடத் தக்கவர் ஆதிசங்கரர்.
காலடியில் பிறந்த அவர், காலடியால் பாரதம் முழுதும் நடந்தவரும் கூட. ஆங்காங்கே அத்வைத மடங்களை நிறுவியவர்.
சுவாமி விவேகானந்தரும் காஞ்சி மகாசுவாமிகளும் இன்னும் சில மகான்களும் பாரதம் முழுவதும் நடந்த பெருமைக்குரியவர்கள். ஒருவகையில் அவர்கள் நடந்து காட்டியவர்கள்! அவர்கள் காட்டிய வழியில் நடக்க வேண்டியது நம் பொறுப்பு.
ஞானிகளில் தாங்கள் இருந்த இடத்திலேயே இறுதிவரை இருந்தவர்களும் உண்டு. வடக்கில் சீரடி பாபாவும் தெற்கில் ரமண மகரிஷியும் தாங்கள் இருந்த இடத்திலேயே தான் சித்தியாகும் வரை இருந்தார்கள். சீரடி பாபா சீரடியை விட்டோ ரமண மகரிஷி திருவண்ணாமலையை விட்டோ எங்கும் செல்லவில்லை.
* ‘காலா உன்னைநான் சிறு புல்லென மதிக்கிறேன்..என்றன் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்’ என எமனை எதிர்த்துக் கவிதை புனைந்தார் மகாகவி பாரதி. மார்க்கண்டேயன் தன்னை மரணம் நெருங்கியபோது சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். தன்னைச் சரணடைந்த மார்க்கண்டேயனைக் காப்பாற்றுவதற்காக சிவன் தன் காலால் எமனை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டார் என்கிறது மார்க்கண்டேய புராணம்.
பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கும் கலாசாரம் (காலாசாரம்!) நம் பண்பாட்டு மரபு. திருமணச் சடங்கில் மணமகன் மணமகளின் வலக்காலைப் பிடித்து ஏழடி நடக்கச் செய்து அம்மிமேல் வைத்து மந்திரம் சொல்லும் சடங்கு உண்டு.
`சப்தபதி` என்ற பெயருடைய இச்சடங்கு மிக முக்கியமானது. தாலி கட்டினாலும் கூட இந்தச் சடங்கும் நடந்து முடிந்தால்தான் திருமணம் நடந்ததாகக் கொள்ளப்படும் என்கின்றன சாஸ்திரங்கள்.
மணநாளன்றே சடங்கின் பொருட்டேனும் கணவன் தன் காலைப் பிடிக்குமாறு செய்வதில் பெண்கள் வெற்றி பெற்று விடுகிறார்கள்!
மனைவியின் கால் விரலில் கணவன் மெட்டி அணிவிக்கும் வழக்கமும் உண்டு. ஆண்கள் பெண்களின் காலைத்தான் முதலில் பார்க்க வேண்டும். கால் விரலில் மெட்டி இருந்தாலே அந்தப் பெண்ணை வேறு கண்ணோட்டத்தில் பாராது சகோதரியாய்ப் பார்க்கும் மனோபாவம் வரவேண்டும் என்பது நம் மரபு நமக்குச் சொல்லித்தரும் பண்பாடு.
வலதுகாலை வைத்து ஓர் இடத்தில் நுழைந்தால் மங்கலங்கள் பெருகும் என்பது நமது நம்பிக்கை. அதனால்தான் புகுந்த வீட்டுக்கு முதன்முதலில் வரும் மணமகளை வலதுகாலை எடுத்துவைத்து வரச் சொல்கிறார்கள்.
*அடிப் பிரதட்சணம் செய்வதாய் நேர்ந்து கொண்டு ஆலயத்தில் அடிப்பிரதட்சணம் செய்யும் மரபு இருக்கிறது. பாதங்களை இடைவெளியின்றி அடுத்தடுத்து வைத்து சன்னிதியை வலம் வருவதே அடிப்பிர தட்சணம் எனப்படுகிறது.
கைகளால் இறைவனைக் கும்பிடுகிறோம். ஆனால் கால்களால்தான் இறைவன் குடியிருக்கும் தலத்தை வலம் வருகிறோம். திருவண்ணாமலையில் கிரிவலம் வருபவர்கள் பாதங்கள் வலிக்க வலிக்க நடந்தே இறையனுபவத்தில் திளைக்கிறார்கள்.
இறைவனின் பாதங்களில் சரணடையச் சொல்லும் திருக்குறளைப் பின்பற்றி இறைவனைச் சரணடைந்து வாழ்ந்தால் வாழ்க்கையில் நேரும் எந்தத் துயரையும் எதிர்கொண்டு வெல்ல முடியும் என்பதே நமது ஆன்மிகத்தின் சாரம்.
தொடர்புக்கு:thiruppurkrishnan@gmail.com
Next Story






