என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கருணாநிதி, குஷ்பு
    X
    கருணாநிதி, குஷ்பு

    குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும்... பிரச்சினையை தீர்த்து வைத்த கலைஞர்

    நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.


    தலைவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் மக்களை தன்பால் ஈர்க்கும் சக்தி நான் பார்த்த தலைவர்களில் கலைஞரிடம் தான் அதிகம் இருந்தது.

    அந்த முதல் நாள் சந்திப்பும், அப்போது அவர் காட்டிய பரிவும், பண்பும் அவரிடம் மீண்டும் மீண்டும் பேச வேண்டும் என்ற எண்ணத்தைத்தான் மனதில் ஏற்படுத்தியது.

    அதன்பிறகு பலமுறை அவரிடம் பேசி இருக்கிறேன். நேரில் சந்தித்தும் இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் எனது வளர்ச்சியை உன்னிப்பாக கவனித்தது மட்டுமல்ல, அதை சொல்லி பாராட்டியது மட்டு மல்ல, குறைகளையும் சுட்டிக் காட்டி அறிவுரை வழங்குவார். நாம் நடித்த படத்தை சொல்லி அதன் காட்சிகளையும் நினைவு படுத்தி அதில் பேசியவார்த்தைகளை இப்படி உச்சரித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பார்.

    ஒரு மாபெரும் தலைவராக இருந்தும் சின்ன சின்ன வி‌ஷயங்களையும் கண் காணித்து ஒரு தந்தையை போல் அவர் என் மீது அக்கறையுடன் நடந்துகொண்ட விதத்தை நினைத்து பார்த்து பலமுறை ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.

    அந்த மாதிரி தருணங்களில் எனது கணவரிடமும் அதை சொல்லி ‘அவரால் (கலைஞரால்) மட்டும் எப்படி முடிகிறது, என்பேன். அதைகேட்டு என் கணவர் சொல்வது ஒரே பதில் தான் ‘அவர்தான் கலைஞர். அது தான் கலைஞர்’.

    அவரை சந்திக்க வேண்டுமென்றால் ‘அப்பா உங்களை சந்திக்க வர வேண்டும். எப்போது ஓய்வாக இருப்பீர்கள், என்பேன்.

    அப்பாவை பார்க்க பிள்ளைக்கு நேரம் வேண்டுமா? தாராளமாக வா.... என்பார் சிரித்துக்கொண்டே.

    அந்த மாதிரி ஓய்வு நேரத்தில் அவரை சந்தித்து பேசினால் நேரம் போவதே தெரியாது.

    நான் அவரை சந்திக்கும் போதெல்லாம் அவர் கேட்கும் முதல் கேள்வி ‘தமிழ் எப்படி பேசுகிறாய்? நன்றாக கற்றுக்கொண்டாயா?’ என்பதுதான். நான் தமிழ் படிப்பதற்காக பல புத்தகங்களையும் எனக்கு வழங்கி இருக்கிறார்.

    கலைஞரை சந்தித்த பிறகு எனது பிறந்த நாள், என் கணவரின் பிறந்தநாள், எங்கள் திருமண நாட்களில் குடும்பமாக சென்று சந்தித்து வாழ்த்துபெற தவறியது கிடையாது.

    அவ்வாறு சென்ற போது என் மகள்கள் அவர் காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றார்கள். அவர்களை வாழ்த்திவிட்டு ‘குழந்தைகளை தமிழ் பண்பாட்டின்படி நன்றாக வளர்த்து இருக்கிறாய், என்று பாராட்டினார்.

    அதற்கு நான் ‘எல்லாம் உங்களை பார்த்து கற்றுக் கொண்டது தான் அப்பா’ என்றேன். அதை கேட்டதும் வழக்கமான புன்முறுவலுடன் சிரித்தார். கலைஞரிடம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வி‌ஷயம் பிடித்து இருக்கும். சிலர் அவரது தமிழ் பேச்சை ரசிப்பார்கள். சிலர் அவரது நினைவாற்றலை பார்த்து வியப்பார்கள், சிலர் அவரது அரசியல் சாதுர்யத்தை கண்டு ரசிப்பார்கள். எனக்கு பிடித்தது அவரது புன்னகைதான்.

    அந்த மாதிரி புன்னகையை எவரது முகத்திலும் பார்க்க முடியாது. அந்த புன்னகை ஒரு மந்திர புன்னகை. அவரது முகத்தில் புன்னகை பூக்கும் தருணங்களில் அருகில் இருந்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

    அவரது கட்சிக்காரர்கள் ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே, என்று அவரது வாயில் இருந்து வரும் வார்த்தையை கேட்டதும் துள்ளிகுதித்துவிடுவார்கள்.

    ஆனால் கட்சிக்கு அப்பாற்பட்டு அவரை பார்த்து வியப்பதென்றால் அவரது அந்த புன்னகைதான்.

    முக்கியமாக இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அவரது இதயத்தில் இடம் பிடித்த அத்தனைபேரும் ஒருமுறை அவரிடம் வாழ்த்து பெற்றால் போதும். மறுமுறை அதேநாளை சரியாக நினைவு கூர்வார்.

    நான் எனது பிறந்தநாள், கணவரின் பிறந்த நாள், திருமணநாள் ஆகிய 3 நாட்களில் நேரில் சென்று ஆசிபெறுவேன் என்றேன் அல்லவா?

    அவ்வாறு போகும்போது நாங்கள் ‘அப்பா இன்று எங்கள்... என்று தொடங்குவதற்குள் ‘வாப்பா சுந்தர்... உனக்கு இன்னக்கி பிறந்த நாள் தானே? வாம்மா... இன்னக்கி உனக்கு பிறந்தநாள் தானே! வாங்க... வாங்க... நட்சத்திர தம்பதிகள்... இன்று உங்கள் திருமண நாள் தானே என்று கேட்டு வியப்பில் ஆழ்த்தி விடுவார்.

    தனக்கு பிடித்தவர்களின் முக்கியமான நாட்களை நினைவில் வைத்திருப்பார். இப்படி அவரோடு பழகிய பலரை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

    ஓரிரு முறை நேரில் செல்ல முடியாமல் வெளிநாடுகளில் இருந்து போனில் தொடர்பு கொள்வேன். உடனே ‘என்னமா.. நல்லா இருக்கியா? இன்று உனக்கு பிறந்த நாள் தானே என்பார்.

    ஆமாப்பா, வெளி நாட்டில் இருக்கிறேன். அதுதான் நேரில் வரமுடியவில்லை என்பேன். அவரது நினைவாற்றலை பார்த்து வியந்து ‘எப்படிப்பா இவ்வளவு கரெக்டா ஞாபகம் வெச்சிருக்கீங்க’ என்றேன்.

    உடனே ‘பிள்ளையின் பிறந்த நாள் அப்பாவுக்கு மறக்குமா என்ன?, என்று கேட்டு மெய்சிலிர்க்க வைத்து விட்டார். அதை கேட்டதும் ‘ரொம்ப சந்தோசம்பா. உடம்பை பார்த்துக்குங்க, என்பேன்.

    அவர் முதல்- அமைச்சராக இருந்த நேரத்திலும் எவ்வளவு பணிச் சுமைக்கு இடையிலேயும் சந்திக்க வேண்டும், ஏதாவது ஒரு பிரச்சினை தொடர்பாக பேச வேண்டும் என்றால் எப்படியும் நேரம் ஒதுக்கி தருவார். நாம் எதிர் பார்க்கும் தீர்வையும் அவரிடம் இருந்தே பெற முடியும்.

    அந்த அனுபவம் எனக்கு உண்டு. தீர்க்கவே முடிய வில்லையே. இந்த பிரச்சினையில் இருந்து எப்படி வெளிவரப்போகிறோம் என்று பலநாள் தவித்து இருக்கிறேன். ஆனால் ஒரேநாள்... ஒரே இரவு... அவரிடம் சில நிமிட பேச்சு...! அவ்வளவு தான். மொத்த பிரச்சினையும் தீர்ந்து சுமூக மானோம்...! ( அது என்ன என்ற உங்கள் ஆர்வம் புரிகிறது. அடுத்த வாரம் வரை காத்திருங்கள்).

    கலைஞர் தாத்தா ...

    எனது மகள்கள் அவந்திகா, அனந்திதா இரு வருமே கலைஞரை ‘தாத்தா’ என்றுதான் அழைப்பார்கள். அந்த நேரத்தில் உண்மையிலேயே ஒரு தாத்தா போலவே என் பிள்ளைகளை கொஞ்சி மகிழ்வார்.

    தந்தையாகவே இருந்து தந்தை இல்லையே என்ற எனது மனக்குறையை போக்கியது போலவே என் பிள்ளைகளுக்கு தாத்தா (அம்மாவின் தந்தை) இல் லாத குறையையும் போக் கியதே எனக்கு மிகப் பெரிய பாக்கியம்.

    ttk200@gmail.com

    Next Story
    ×