என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

பாபா காட்டிய பாதை: என்னை சரண் அடையுங்கள்- 34
சாய்பாபா அருளை மிக மிக எளிதாக பெற முடியும். சாய்பாபாவை நெருங்கி செல்வதும் மிகவும் எளிதாகும். அதற்கு ஒரே வழி பாபாவை எந்தவித பிரதிபலனும் பாராமல் சரண் அடைந்து விடுவதுதான். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அவர் பெருமை தெரிவதில்லை. அவர் மீது கொஞ்சம் நம்பிக்கை வைத்து பாருங்கள். அதன் பிறகு அவர் காட்டும் அற்புதங்கள் உங்களை பிரமிக்க வைக்கும்.
நம்பிக்கை இருப்பவர்களுக்கு அவர்கள் எத்தனை மைல் தொலைவில் இருந்தாலும் பாபாவின் தரிசனம் நிச்சயமாக கிடைக்கும். இதை பாபாவே பல தடவை தனது பக்தர்களுக்கு சரணாகதி சுட்டிக்காட்டி உள்ளார். அவர் சுட்டிக் காட்டிய விஷயங்கள் அவர் காட்டிய மிக முக்கியமான பாதைகளில் ஒன்றாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. சரணாகதி பற்றி பாபா கூறி இருப்பதாவது:-
யார் என்னை அளவு கடந்து பாசத்தோடு நேசிக்கிறார்களோ அவர்களுடைய பார்வையில் நான் எப்போதும் இருந்து கொண்டே இருப்பேன். நான் இல்லாத வாழ்க்கை அவர்களுக்கு சூன்யமாக தெரியும். அவர்களது வாயில் இருந்து என்னை பற்றிய பேச்சுதான் அதிகமாக இருக்கும்.
என்னுடன் யார் ஒருவர் மனதளவில் ஒன்றி விடுகிறாரோ அவர் தன்னையே மறந்து விடுவார். அப்படிப்பட்டவர்களிடம் நான் நிரந்தரமாக இருக்கிறேன் என்று அர்த்தமாகும். என்னிடம் முழுமையாக சரண் அடைந்து விடுபவர்களின் பொறுப்புகளை நான் தலையில் ஏற்றிக்கொள்கிறேன். அவர்களை கை தூக்கி விடுவேன்.
எதை சாப்பிடுவதாக இருந்தாலும் அல்லது எந்த பானத்தை அருந்துவதாக இருந்தாலும் முதலில் எனக்கு அர்ப்பணித்து விட்டு பிறகு சாப்பிடுபவர்களுக்கு நான் கடன் பட்டு இருக்கிறேன். இத்தகைய மனநிலை கொண்டவர்கள் எனக்கு சமமானவர்கள். அவர்களை நான் தியானத்தில் வைத்திருக்க விரும்புகிறேன்.
நான் பல்வேறு வகையான உருவங்கள் கொண்டவன். அதை யாராலும் கணக்கெடுக்க முடியாது. நான் இல்லாத இடம் எதுவும் இல்லை. இதை உணர்ந்து கொண்டு ஆன்மிக பயிற்சியை தினமும் மேற்கொள்ள வேண்டும். அந்த ஆன்மிக பயிற்சியில் வெற்றி பெற்றால் நான் அனைத்து இடங்களிலும் நிறைந்து இருப்பது அனுபவப்பூர்வமாக உங்களுக்கு தெரிய வரும்.
நாளடைவில் நீயும், நானும் ஒன்றுதான் என்ற உண்மை உனக்கு புரிய வரும். அப்படி புரியும்போது உலகில் உள்ள ஒவ்வொன்றும் உனக்கு குருவாக தெரியும். அந்த நிலையில் நீங்கள் என்னோடு இரண்டற கலந்து விடுவீர்கள். அன்னியம் என்று ஒன்று இல்லை என்பதை அனுபவப்பூர்வமாக புரிந்து கொள்வீர்கள்.
என் மீது பக்தி அதிகரிக்கும்போது உங்களது மனம், புத்தி, சித்தம் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக சுத்தம் அடைந்து விடும். கங்கை நீர் இல்லாமலேயே நீங்கள் கங்கையில் நீராடிய புனித தன்மையை பெறுவீர்கள். இதை கருத்தில் கொண்டு உங்களது உடல், மனம், வாக்கு மூன்றையும் என்னிடம் சரண் அடைய செய்து விடுங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்களுக்கு அளவிட முடியாத அளவுக்கு அற்புதங்கள் நடந்து கொண்டே இருக்கும்.
சரணாகதி என்றவுடன் வெறும் பக்திப் பூர்வமான சரணாகதி என்று அர்த்தமில்லை. பக்தியின் வெளிப்பாடாக குருவின் காலடியில் பணிந்து வணங்குவது மட்டும் போதுமானது அல்ல. ஆத்ம நிவேதனம் செய்தல் வேண்டும். அப்படி செய்தால்தான் எனது அருளை நீங்கள் பரிபூரணமாக பெற முடியும்.
உங்களுக்கு என்று சில அடையாளங்கள் இருக்கக் கூடும். அந்த அடையாளத்தை சரண் அடைய செய்யுங்கள். அப்படி செய்தால் ஞானம் எனும் பொக்கிஷம் உங்களை தானாக தேடி வரும். சில சமயங்களில் உங்களில் சிலர் மனம் இருந்தால் மட்டுமே எனக்கு சேவை செய்கிறீர்கள். மனம் ஒத்துழைக்காவிட்டால் எனக்கு சேவை செய்வது இல்லை. இது உண்மையான சேவை இல்லை.
இந்த உலகில் நீங்கள் எதையெல்லாம் சொந்தம் என்று நினைக்கிறீர்களோ அவையெல்லாம் உங்களுக்கு சொந்தம் இல்லை. உங்களுடைய உடலே உங்களுக்கு சொந்தம் கிடையாது. இதை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும். உங்கள் உடல் குருவுக்கு சொந்தமானது. குருவுக்கு சேவை செய்யவே உங்கள் உடல் அவதாரம் எடுத்துள்ளது. இதை சீரடிக்கு வரும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் என் குருவுக்கு சேவை செய்தபோது விடாமுயற்சி மேற்கொண்டேன். பல ஆண்டுகள் தொடர்ந்து சேவை செய்தேன். என் குருவுக்கு இரண்டு பைசா தட்சணை அளித்தேன். நம்பிக்கை, பொறுமை எனும் இரண்டு பைசா தட்சணை மூலம் நான் பெற்றது ஏராளம்.
பொதுவாக பெரும்பாலானவர்களிடம் ஆளுமை உணர்வு இருக்கிறது. அந்த ஆளுமை உணர்வால் திசை மாறி சென்று விடுகிறார்கள். யார் ஒருவர் தனது ஆளுமை உணர்வை விட்டு விடுகிறாரோ அவருக்கு அர்ப்பணிப்பும், நம்பிக்கையும் ஏற்படும். அவர்கள் அனைத்து விதமான தோஷங்களில் இருந்தும் விடுபடுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு முக்தி மிக எளிதாக கிடைத்து விடும்.
யார் ஒருவர் என்னிடம் சரண் அடைந்து விடுகிறாரோ அவருக்கு நான் கடன் பட்டு இருக்கிறேன். அப்படி என்னிடம் சரண் அடைந்தவர்களை மேம்படுத்த வேண்டியது எனது கடமையாகும். அவர்களுக்கு நல்ல உணர்வை தந்து சுயஞானம் அளித்து மோட்சம் அடைய செய்வதன் மூலம் நான் இந்த கடனை திருப்பி கொடுக்கிறேன்.
என்னை அடைக்கலமாக ஏற்றுக் கொண்டவர்களை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். இதை எந்த இடத்திலும் உறுதியோடு சொல்ல முடியும். எனது பக்தனுக்கு கொடுப்பதற்காக நான் எப்போதும் காத்திருக்கிறேன்.
இந்த மசூதியில் நான் ஏன் உட்கார்ந்திருக்கிறேன் தெரியுமா? உங்களது மனக்குறைகள், வேதனைகள், தேவைகள் போன்றவைகளை கேட்டுத் தெரிந்துகொண்டு அவற்றை உங்கள் கர்ம வினைகளுக்கு ஏற்ப நிறைவேற்றித் தரவே நான் இங்கு அமர்ந்திருக்கிறேன்.
இன்னும் சொல்லப்போனால் பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் பக்தர்களை நான்தான் சீரடிக்கு வரவழைக்கிறேன். இங்கு வரும் ஒவ்வொரு பக்தரும் எனது விருப்பத்தின் பேரில்தான் வருகிறார்கள். அவர்கள் சொல்லும் சின்ன சின்ன பிரச்சினைகளை நிறைவேற்றி வைக்கவேண்டியது எனது கடமையாகும்.
முதலில் வாழ்வியல் நடைமுறை பிரச்சினைகளுக்காகவே எனது பக்தர்கள் இங்கு வருகிறார்கள். அவர்களை முதலிலேயே ஆன்மிக பாதைக்கு திருப்புவது என்பது சற்று கடினமானது என்று எனக்குத் தெரியும். எனவேதான் அவர்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையானதை முதலில் செய்துகொடுத்து விட்டு பிறகு அவர்களை ஆன்மிக பாதை பக்கம் நான் கொண்டு வருகிறேன்.
நான் இந்த உலகில் இருந்து விடைபெறும் வரை என்னை நாடி வந்து பக்தர்கள் தங்களுக்கு தேவையானதைப் பெற்றுக்கொள்ளலாம். கடைசி வரை என் பக்தர்களை நான் காப்பாற்றுவேன். எனது உயிர் பிரிந்தபிறகும், எனது பக்தர்களை எனது சக்தி தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டேதான் இருக்கும். பக்தர்களின் கவலைகளுக்கு தீர்வையும், தெளிவையும் நான் தொடர்ந்து அளிப்பேன்.
என் பக்தர்களின் வலி, வேதனையை நான் ஒதுக்கி தள்ளுவது இல்லை. காரணம் நீங்கள் ஒவ்வொருவரும் எனது குழந்தைகள். உங்களது கஷ்டங்களை எனது கஷ்டமாக பார்க்கிறேன். எனவே என்னை நாடி வருபவர்கள் நிச்சயம் பலன் பெறுவார்கள்.
என்னை சரணடைந்து விட்டவர்கள் எதற்காகவும் கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை. உங்களது ஒவ்வொரு எண்ணமும் எனது எண்ணமாக இருக்கும். நீங்கள் ஒன்றை நினைத்தால் நிச்சயமாக அது என்னிடம் எதிரொலிக்கும். நீங்கள் ஒரு செயலை செய்தால் அந்த விநாடியே அது என்னிடம் பிரதிபலிக்கும்.
இந்த உலகின் ஒவ்வொரு அசைவும் என்னுடையதுதான். உங்களது விருப்பங்களை எனது ஒவ்வொரு அசைவும் பூர்த்தி செய்யும். எனவே உங்களுடைய அனைத்து செயல்களையும் என்னிடம் விட்டு விடுங்கள். முழுமையாக என்னிடம் சரண் அடைவதை மனப்பூர்வமாக செய்யுங்கள்.
நீங்கள் என்னை நோக்கினால், நான் உங்களை நோக்குவேன். இரவும், பகலும் எனது பக்தர்களைப் பற்றியே நான் சிந்திக்கிறேன். என்னை புகலிடமாகக் கொண்டவர்களுக்கு எனது சமாதியும் கைகொடுத்து உதவும். அதற்குள் நான் வீரியமாக இருந்து செயல்படுவேன்.
என்னை ஒருவர் நினைத்து எந்த அளவுக்கு எனது சிறப்பை உச்சரித்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறாரோ அவர்களது கர்மா அனைத்தையும் நான் விலக்குவேன். எனது பக்தன் எத்தனை மைல் தொலைவில் இருந்தாலும், அவனது இறுதி காலத்தில் அவனை நான் என் பக்கத்தில் இழுத்துக் கொள்வேன்.
என்னை அணுகுவதற்கு என் பக்தர்கள் சிரமப்படக்கூடாது. என்னை நினைத்தாலே போதும். மிகப்பெரிய பூஜைகளும், நான்கு விதமான சாதனா முறைகளும், ஆறு விதமான சாஸ்திரங்களும் கையாள்வதற்கு அவசியமே இல்லை. இவை இல்லாமலேயே எனது பக்தர்கள் அருகில் நான் செல்வேன். இப்படிப்பட்டவர்களிடம் இருந்து என்னை பிரிக்க இயலாது. இவற்றை எல்லாம் உணர்ந்து என்னிடம் சரண் அடைய வேண்டும்.
நான் கடவுளின் அடிமை. இந்த பிரபஞ்சம் முழுவதும் எனக்குள் இருக்கிறது. நீங்கள் பார்க்கும் ஒவ்வொன்றிலும் நான் வியாபித்து இருக்கிறேன். என்னை பின் தொடர வேறு எந்த வழிகாட்டுதல்களும் தேவை இல்லை. நான் எந்த மந்திரமும் உபயோகிப்பது இல்லை. நான் இதுவரை சொன்னவற்றை கையாண்டு என்னை சரண் அடையுங்கள். உங்கள் வாழ்வில் அற்புதமான மாற்றங்களை நான் நடத்திக் காட்டுவேன்.
இவ்வாறு சாய்பாபா கூறி உள்ளார்.
சாய்பாபாவை சரண் அடைவதற்கு இந்த பாதை முக்கியமானது. பாபா பக்தர்கள் ஒவ்வொருவரும் இந்த வரிகளை தங்கள் மனதுக்குள் ஆழமாக பதித்துக் கொள்ள வேண்டும்.






