என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    யோக முத்திரை
    X
    யோக முத்திரை

    ஆரோக்கியம் நம் கையில்: உடல் வெப்பத்தை குறைக்கும் யோக முத்திரை- 129

    எல்லா கை விரல்களையும் கோர்த்து இடது கை கட்டை விரலை மட்டும் நேராக வைக்கவும். இதயம் பக்கத்தில் கையை வைத்து சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை, மதியம் மாலை மூன்று வேளைகள் செய்யவும்.


    இப்பொழுது வெயில் காலம் ஆரம்பமாகி உள்ளது. மே மாதம் அக்னி நட்சத்திரம் வரும் பொழுது இன்னும் வெயிலின் தாக்கம் அதிகமாகிருக்கும். இந்த காலகட்டங்களில் நம் உடலுக்கு சில பிரச்சினைகள் வரலாம். அவை வராமல் தடுப்பதற்கும், வந்தால் பெரிதாகாமல் சரி செய்வதற்குரிய யோகப்
    பயிற்சிகளை இன்று காண்போம்.

    பொதுவாக வெயில் காலங்களில் அடிக்கடி வரக்கூடிய பிரச்சினைகள்: வயிற்றுப்போக்கு, உடல் சூடு, கண் எரிச்சல், கண்ணில் கட்டிகள், வயிற்றுப்புண், வாய் நாக்கு புண், மலச்சிக்கல் , வாந்தி, அம்மை நோய் , அதிக வியர்வை, உடல் சோர்வு, மூல வியாதி, தலைவலி, சைனஸ், மூக்கடைப்பு போன்ற நோய்களின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். இதிலிருந்து விடுதலையடைய எளிமையான முத்திரை, யோகப்பயிற்சிகள் உள்ளன. இப்பொழுது எளிமையான, அருமையான வெயில் காலத்தில் செய்யும் யோகப்பயிற்சிகளை காண்போம்.

    உடல் அதிக உஷ்ணம் தணிய சீத்தளி பிராணாயாமம்: காலை எழுந்தவுடன் பல் விலக்கி, காலை கடன்களை முடித்துவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திவிட்டு தரையில் ஒரு விரிப்பு விரித்து நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இடது, வலது கைகள் சின் முத்திரையில் வைக்கவும். ஆள்காட்டி விரல் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற மூன்று விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். வாய் வழியாக, உதட்டை விசில் மாதிரி குவித்து மெதுவாக மூச்சை இழுக்கவும். உடன் வாயை மூடி இரு நாசி வழியாக மூச்சை மெதுவாக வெளிவிடவும். பத்து முதல் இருபது முறைகள் காலை மதியம் மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    இப்பயிற்சி செய்யும்பொழுது உங்கள் உணர்வில் நன்கு தெரியும். மூச்சை உள் இழுக்கும் பொழுது குளிர்ந்த காற்று உட் செல்லும். மூச்சு வெளியிடும் பொழுது அடி வயிற்றில் உள்ள சூடான காற்று வெளிவரும். இதனால் நமது உடலில் அதிக உஷ்ணம் வெளியேறுகின்றது. உடல் அதிக சூடாகாமல் பாதுகாக்கப்படுகின்றது.

    சீத்காரி: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கைகள் சின் முத்திரையில் வைக்கவும். நாக்கை லேசாக படத்தில் உள்ளது போல் மடிக்கவும். அதன் இடுக்குகள் வழியாக மெதுவாக மூச்சை இழுக்கவும். உடன் வாயை மூடி இரு மூக்கு வழியாக மூச்சை மெதுவாக வெளிவிடவும். இதேபோல் பத்து முறை முதல் இருபது முறைகள் செய்யவும்.

    ஸதந்தா: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கைகள் சின் முத்திரையில் வைக்கவும். பற்களின் மேல் வரிசை கீழ் வரி சையை சேர்த்து வைக்கவும். உடன் மூச்சை உள்ளே பற்களின் இடுக்குகள் வழியாக மெதுவாக இழுக்கவும். உடன் வாயை மூடி மூக்கு வழியாக வெளிவிடவும். இதேபோல் பத்து முதல் இருபது முறைகள் செய்யவும்.

    மேற்குறிப்பிட்ட பயிற்சிகள் மூன்றுமே குளிர்ச்சி வகை பிராணாயாமம் ஆகும். நிதானமாக இதனை வெயில் காலங்களில் காலை மதியம் மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யுங்கள். வெயில் காலங்களில் அதிக உஷ்ணம் உடலில் வராமல் உடலையும், மனதையும் பாதுகாக்கும்.

    முத்திரை

    முத்திரைகள்: முத்திரைகள் மூலம் நம் உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தாமல் வாழ முடியும்.

    பிராண முத்திரை: தரையில் விரிப்பு விரித்து கிழக்கு முகமாக நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் மோதிர விரல் சுண்டு விரல் மத்தியில் கட்டை விரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் காலை மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    பலன்கள்: வெயில் காலத்தில் கண்களில் கட்டிகள், கண் சம்மந்தமான வியாதி வராமல் பாதுகாக்கப்படுகின்றது, கண் நரம்புகள் நன்றாக இயங்குகின்றது. லிவருக்கு நல்ல சக்தி ஓட்டம் கிடைக்கின்றது. உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கலாம். உடலில் பிராண சக்தி எல்லா உறுப்புகளுக்கும் கிடைக்கும். கால் பாத வீக்கம் பாத எரிச்சல் வராமல் வாழலாம்.

    மலச்சிக்கல் நீக்கும் சுஜி முத்திரை: வெயில் காலங்களில் நிறைய நபர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும். அதிலிருந்து விடுபட சுஜி முத்திரையை செய்யவும்.

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் சுண்டு விரல், மோதிர விரல், நடு விரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து கட்டை விரலை மோதிரவிரலின் நடுவில் வைத்து ஆள்காட்டி விரலை படத்தில் உள்ளது போல் வலது தோள்பட்டை இடது தோள்பட்டை அருகில் சற்று சாய்த்து வைக்கவும். 2 நிமிடங்கள் காலை, மதியம், மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    மலச்சிக்கல் நீங்கும். உடல் உஷ்ணம் தணியும். உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும், வெயில் காலத்தில் இந்த முத்திரை ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது.

    வயிற்றுப்போக்கு வராமல் வாழ ஜலோதர நாசக் முத்திரை: வெயில் காலத்தில் நிறைய நபர்களுக்கு வயிற்றுப்போக்கு (பேதி) ஏற்படும். அதனால் உடலில் நீர் சக்தி குறைந்து உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இந்த ஜலோதர நாசக் முத்திரையை இரண்டு நிமிடங்கள் செய்யுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் சுண்டு விரலை மடக்கி அதன் நகத்தின் மேல் மையத்தில் கட்டை விரலை வைத்து லேசாக ஒரு அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள், காலை மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும். இந்த முத்திரையை வயிற்றுப்போக்கு இருந்தால் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும். மற்ற சமயங்களில் காலை ஒரு வேளை அல்லது மாலை ஒரு வேளை இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்தால் போதுமானது. இந்த முத்திரை மூலம் வெயில் காலத்தில் வயிற்றுப்போக்கு வராமல் தடுக்க முடியும்.

    வெயில் காலத்தில் உண்ண வேண்டிய உணவு முறை: அதிகமாக பழ ரசங்கள் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். திராட்சை பழம், மாதுளம் பழம், வாழை பழம், கொய்யா பழம், வெள்ளரிக்காய், தர்பூசணி, கிரிணி பழம், நாட்டு வாழைப்பழம், மணத்தக்காளி, புதினா, எலுமிச்சை பழ ஜூஸ், கருப்பு திராட்சை பழம் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். இரவு பழம் மட்டும் சாப்பிடுங்கள். நுங்கு, பதநீர், இளநீர் காலை சாப்பிடுங்கள். அதிக காரம், உப்பு, புளிப்பு குறைத்துக் கொள்ளுங்கள். காலை மாலை இருவேளையும் குளிர்ந்த நீரில் குளியுங்கள்.

    வாசகர் கேள்வி: முடி உதிர்தல், தலையில் வழுக்கை விழுதல், இதனை தவிர்க்க என்ன முத்திரை செய்யவேண்டும்?

    பதில்: நிறைய நபர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது. உடல் சூடு ஒரு காரணம், பிட்யூட்டரி, பினியல் சுரப்பிகள் சரியாக இயங்காதது ஒரு காரணம். பரம்பரை, பரம்பரையாக இது ஒரு வியாதியாக சிலருக்கு இருக்கும். இதற்கு நாம் சில குறிப்பிட்ட முத்திரைகள், யோகப்பயிற்சிகள் எடுத்து சரி செய்ய முடியும். முழுமையான தீர்வு காண சற்று காலம் பிடிக்கும். ஆனால் தொடர்ந்து பயின்றால் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

    பிரசன்ன முத்திரை

    பிரசன்ன முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் கட்டை விரல் தவிர மற்ற விரல்களை மடக்கி இரண்டு கை விரல்களின் நகங்கள் ஒன்றையொன்று தொடும்படி படத்தில் உள்ளது போல் வைக்கவும். கட்டை விரல் இரண்டும் படத்தில் உள்ளதுபோல் சேர்ந்திருக்கட்டும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். காலை மதியம் மாலை மூன்று வேளையும் செய்யவும். அவசர படாமல் நிதானமாக ஐந்து நிமிடங்கள் செய்யவும்.

    நேரம் கிடைக்கும் பொழுது இந்த முத்திரையை கை விரல் நகங்களை ஒன்றையொன்று உராயும் படி லேசாக பத்து முறைகள் தேய்க்கவும். ஒரு நாளில் மூன்று முறைகள் செய்யவும்.

    லிங்க முத்திரை: எல்லா கை விரல்களையும் கோர்த்து இடது கை கட்டை விரலை மட்டும் நேராக வைக்கவும். இதயம் பக்கத்தில் கையை வைத்து சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை, மதியம் மாலை மூன்று வேளைகள் செய்யவும்.

    லிங்க முத்திரை

    வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்கவும். நெல்லிப்பழம் சாப்பிடவும். அதி மதுர பொடி உணவில் எடுத்துக் கொள்ளவும். மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை உணவில் எடுக்கவும். மணத்தக்காளி கீரை உணவில் எடுக்கவும். கடுக்காய் சூர்ணம் ஒரு வேளை எடுக்கவும். முளைகட்டிய வெந்தய சாதப்பொடி உணவில் எடுக்கவும்.

    எப்பொழுதும் அதிக அளவு சிந்தனை செய்ய வேண்டாம். மன அழுத்தம் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும் பொழுது இரு நாசி வழியாக மூச்சை மெதுவாக இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஐந்து முறைகள் செய்யவும். ஒரு நாளில் பத்து முறைகள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை இது போன்று செய்யவும்.

    மேலே, குறிப்பிட்ட குளிர்ச்சிவகை மூச்சுப்பயிற்சி சீத்தளி /சீத்காரி / ஸதந்தா பயிற்சிகளையும் செய்யுங்கள். தலை முடி கொட்டுவது நிற்கும்.

    யோகக் கலைமாமணி

    பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    Next Story
    ×