search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உடல் நலம் காக்கும் மன ஒழுக்கம்
    X
    உடல் நலம் காக்கும் மன ஒழுக்கம்

    ஆரோக்கியம் நம் கையில் - உடல் நலம் காக்கும் மன ஒழுக்கம்

    உடல் நலம் காக்கும் மன ஒழுக்கம் குறித்து யோகக் கலைமாமணி பி.கிருஷ்ணன் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
    எல்லா மனிதர்களும் வாழ்வில் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். மன அமைதியுடன் ஆனந்தமாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். ஆனால், சராசரியாக நம் நடைமுறை வாழ்வில் சந்திக்கின்ற மனிதர்களுக்கு உடலில் எவ்வளவு நோய் உள்ளது. மனதில் எவ்வளவு அழுத்தம், கவலை உள்ளது? 

    ஏன் இந்த நிலை? இது மாறாதா? நிச்சயம் மாறும். அதுதான் யோகக்கலை. யோகா வாழ்வு ஆகும்.

    மனதில் ஒழுக்கம்:மனித மனம் மாயைக்குட்பட்டது. ஆசைகள், பேராசை களுக்கு அளவே கிடையாது. மனதில் எழும் எண்ணங்களையெல்லாம் நாம் செயல்படுத்த நினைக்கின்றோம். ருசிக்காக சாப்பிடுகின்றோம். பசிக்காக, பசியறிந்து சாப்பிடுவதில்லை. சத்தானவைகளை சாப்பிடுவதில்லை. காலை 8.30 மணிக்குள் காலை சிற்றுண்டி அருந்த வேண்டும். மதியம் 12.30 முதல் 1.30 மணிக்குள் மதிய உணவு சாப்பிட வேண்டும். இரவு 7.30 மணிக்குள் அரைவயிறு மட்டும் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். இது நமது முன்னோர்கள் வகுத்த உணவில் ஒழுக்க கோட்பாடு ஆகும். இதிலும் நமக்கு பசியிருந்தால் மட்டுமே மூன்று வேளை உண்ண வேண்டும். ஒரு சில சமயம், மதியம் சாப்பிட்டது ஜீரணமாகாமலிருந்தால் நாம் இரவு சாப்பிடுவதை நிறுத்தி விடலாம். இது உணவில் ஒழுக்கமாக அமைகின்றது.

    பிறர் நிறை காண்: நாம் பழகும் மனிதர்கள், உறவினர்கள் அனைவரிடத்திலும் அன்பாக பழக வேண்டும். அனைவரிடமும் உள்ள நிறைவான குணங்களையே பார்க்க வேண்டும். குறைகளை சுட்டிக்காட்டி யாரையும் பகைமை கொள்ளக் கூடாது. ஆனால் சராசரி வாழ்வில் நாம் அனைவரிடத்திலும் உள்ள குறைகளையே சுட்டிக் காட்டுகின்றோம். இது நமது உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளை ஒழுங்காக இயங்காமல் போகச்செய்யும். அதனால் உடல் ஆரோக்கியத்தை நாம் இழக்க நேரிடும்.

    பிறர் வளர்ச்சியை கண்டு பாராட்ட வேண்டும். பொறாமை பட கூடாது, பொறாமை பட்டால் வயிறு எரிச்சல், அல்சர், பசியின்மை ஏற்படும்.

    பார்க்கின்ற பொருள்களை எல்லாம் அடைய நினைக்க கூடாது. சிலர் சில பொருட்களை நமக்குத் தேவையா, இல்லையா என்று கூட சிந்திக்காமல் வாங்கிவிடுவர். பின் பணம் கட்டமுடியாமல் அவதி படுவார்கள். இது மன அழுத்தமாக மாறி ரத்த அழுத்தம், இதயம், சம்மந்தமான பிரச்சினையாக, நோயாக மாறிவிடுகின்றது. அடிப்படை காரணம் என்னவென்றால் பேராசையே ஆகும். எனவே பேராசையை தவிர்க்க வேண்டும்.

    எரிச்சல்: சிலருக்கு வாழ்வில் பேராசை காரணமாக நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த எதிர்பார்ப்புகள் நடக்காததால் மனதில் எரிச்சல் ஏற்படும். இந்த எரிச்சல் அதிகமானால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். அதன் இயக்கம் சரியாக இருக்காது. நாம் கல்லீரல் இயங்கவில்லை என்று மாத்திரை சாப்பிடுவோம். ஆனால் முழுமையாக குணம் அடையாது. காரணம் மனதில் உள்ள எரிச்சல் நீங்கினால்தான் கல்லீரல் சிறப்பாக இயங்கும்.

    உடலுக்கு ஓய்வு:நாம் நமது உடலுக்கு சரியான ஓய்வை கொடுக்க வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை உடலுக்கு நல்ல ஓய்வு (தூக்கம்) கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில் கண் விழித்தால் உடலில் உள்ள ராஜ உறுப்புகளான சிறுநீரகம், சிறுநீரகப்பை, இதயம், கல்லீரல், மண்ணீரல் சக்தி ஓட்டம் குறையும்.

    காலை எழும் நேரம்: அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் எழ வேண்டும். எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு பல் விளக்கி விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு கிழக்கு முகமாக ஒரு மேட் விரித்து அதில் அமர்ந்து கீழ்குறிப்பிட்ட முக்கியமான முத்திரைகளை பயிற்சி செய்ய வேண்டும்.

    தியான முத்திரை

    தியான முத்திரை: இடது கை கீழ், வலது கை மேலே வைத்து இரு கட்டை விரல் நுனிகளும் ஒன்றையொன்று தொடட்டும். படத்தில் உள்ளது போல் கைகளை வைக்கவும். கண்களை மூடி இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக வெளிவிடவும். பத்து முறைகள்செய்யவும். பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கூர்ந்து கவனிக்கவும். ஐந்து நிமிடங்கள் மூச்சை மட்டும் கூர்ந்து தியானிக்கவும்.

    மகா சிரசு முத்திரை

    மகா சிரசு முத்திரை:நிமிர்ந்து விரிப்பில் அமரவும். முதுகு எலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள்செய்யவும். பின் உங்கள் கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிப் பகுதிகளையும் ஒன்றையொன்று தொடும்படி வைக்கவும். மோதிர விரலை மடக்கி உள்ளங்கையின் நடுவில் தொடுமாறு வைக்கவும். சுண்டு விரல் நேராக இருக்கட்டும். படத்தைப் பார்க்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.

    பலன்கள்:“என் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்“ என்பதற்கேற்ப நமது தலையில் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்கு சக்தி பெற்று இயங்கும். முகத்தில் உள்ள எல்லா உறுப்புகளும் பிராண சக்தி பெற்று இயங்கும். இதனால் மூளை பகுதியில் உள்ள டென்‌ஷன் நீங்கும்.

    தலைவலி நீங்கும். உடல் சூடு சமமாகும். அடிக்கடி தலைவலி வருபவர்கள் இந்த முத்திரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    கண் வலி வராது. கண்கள் நன்கு பிரகாசமாக இருக்கும். சைனஸ், மூக்கடைப்பு, சலி தொந்தரவு வராது. சுவாச உறுப்புகள் நன்றாக இயங்கும்.

    முக பொலிவு உண்டாகும். முகத்தசைகள் சுருக்கமில்லாமல் பளபளப்புடன் பிராண ஆற்றல் பெற்று இயங்கும்.

    கழுத்துவலி வராமல் பாதுகாக்கும். சுறுசுறுப்பும், உற்சாகமும் கிடைக்கும். மன அமைதி கிடைக்கும். தேவையற்ற எண்ணங்கள் நீங்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வாழலாம்.

    சக்தி முத்திரை

    சக்தி முத்திரை:விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். இருபது வினாடிகள் கவனிக்கவும். பின் கண்களை திறந்து கட்டை விரலை உள்ளங்கையில் மடக்கி அதன்மேல் ஆள் காட்டி விரல், நடு விரலை மடக்கி தொட்டுக்கொண்டிருக்கட்டும். மோதிரவிரல், சுண்டு விரலும் நீட்டப்பட்டு நுனிகளில் தொட்டுக்கொண்டிருக்கட்டும். படத்தை பார்க்கவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் காலை மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    பலன்கள்:ஆழந்த தூக்கம் கிடைக்கும், சிறுநீரகம் சிறப்பாக சக்தி பெற்று நன்கு இயங்கும். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள் செய்தால் அக்குறை நீங்கும். இதயம், நுரையீரலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். பெண்களுக்கு கருப்பை நன்கு சக்தி பெற்று இயங்கும், மாதவிடாய் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.

    சீத்தளி மூச்சுப்பயிற்சி:விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். வாயை விசில் மாதிரி வைத்து வாய் வழியாக (உதட்டை குவித்து) மூச்சை மெதுவாக இழுக்கவும். வாயை மூடி இரு மூக்கு துவாரம் வழியாக மூச்சை மெதுவாக வெளியிடவும். இது போல் பத்து முறைகள் பொறுமையாக பயிற்சி செய்யவும். வாய்வழியாக மூச்சை இழுக்கும் பொழுது அடிவயிறு லேசாக வெளிவர வேண்டும். மூக்கு வழியாக மூச்சை வெளியிடும் பொழுது அடிவயிறு லேசாக உள்ளே செல்ல வேண்டும். இந்த உணர்வுடன் பயிற்சி செய்யவும்.

    பலன்கள்: உடலில் உள்ள அதிக உஷ்ணம் நீங்கும். வயிற்றுப்புண்கள், அல்சர், வாய் புண்கள், நாக்கு புண்கள் வராது. தலைவலி வராது. மூளை சூடு தணியும், மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும். ரத்த அழுத்தம் வராமல் வாழலாம். நரம்பு மண்டலம் நன்கு இயங்கும். ஜீரண மண்டலம் நன்கு இயங்கும்.

    மேற்குறிப்பிட்ட பயிற்சிகள் அனைத்து வயதினரும் செய்யும் எளிமையான யோகப் பயிற்சிகள் ஆகும். பொறுமையாக தினமும் காலை மாலை இருவேளையும் சாப்பிடுமுன் பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடல், மனம் ஆன்மாவுடன் இணைந்து ஆத்ம சக்தியை உணர்ந்து வாழ வழிவகை செய்கின்றது.

    உணவில் ஒழுக்கம், உடலுக்குரிய ஓய்வு, எண்ணங்களை சரி செய்து விழிப்புடன் நல்ல எண்ணங்களை மட்டும் பின்பற்றி வாழ்தல், முத்திரை, தியானம், மூச்சு பயிற்சி செய்யுங்கள். தனிமனித ஒழுக்கத்தை வாழ்வில் கடைபிடியுங்கள், வாழ்க்கை இன்பமாகவே அமையும், துன்பமின்றி வாழலாம்.

    நமது உடல், மன இன்ப துன்பத்திற்கு நாமே முழு காரணமாவோம். எண்ணம், சொல், செயலால் பிறருக்கு தீங்கு விளைவிக்காமல் இருந்தால், நன்மையை செய்வதாக இருந்தால் நமக்கு நன்மையே நடக்கும். வாழ்வில் இன்பமே இருக்கும்.

    உங்கள் சந்தேகங்கள்:ஆரோக்கியமாக வாழவும், உடல், மனம் பற்றிய உங்கள் சந்தேகங்களை கீழ்குறிப்பிட்ட ணிவிகிமிலி முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். அதற்குரிய விடையை உங்களுக்கு விளக்கமாக தெரிவிக்கின்றோம்.

    யோகக் கலைமாமணி

    பெ.கிருஷ்ணன் பாலாஜி 
    Next Story
    ×