என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    உள்ளுணர்வை தூண்டும் ஜென்ம நட்சத்திர வழிபாடு
    X
    உள்ளுணர்வை தூண்டும் ஜென்ம நட்சத்திர வழிபாடு

    உள்ளுணர்வை தூண்டும் ஜென்ம நட்சத்திர வழிபாடு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஒரு ஜாதகத்தில் விதிக்கு தீர்வு தரும் மதி எனப்படும் சந்திரனின் நிலை மிக மிக முக்கியம். ஒருவரின் சுய ஜாதகத்தில் சந்திரனின் மூலம்தான் அனைத்து விதமான யோகங்கள், அவயோகங்கள் ஏற்படுகின்றன.
    ஜாதகம் என்பது ஒரு குழந்தை பிறந்த நேரத் தில் வான்மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலையைக் காட்டும் ஒரு குறிப்பு. அந்த குறிப்பில் சந்திரன் எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசி ஜென்ம ராசியாகும். சந்திரன் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அது ஜென்ம நட்சத்திரமாகும். ஒரு ஜாதகத்தில் பிரதானமான பலன்களை எடுத்துரைப்பது விதியெனும் லக்னமாக இருந்தாலும் விதியால் ஏற்படும் வினைகளைத் தீர்ப்பது மதியெனும் சந்திரனாகும். ஆக விதிக்கு துணையாக இருப்பது மதி எனும் சந்திரனாகும். 

    அதனால் தான் சந்திரன் நிற்கும் நட்சத்திரத்தை வைத்து பிறந்த நாள் கொண்டாடுகிறோம், திருமண பொருத்தம் பார்க்கிறோம், ஜாதக ரீதியான தசை புத்தி மற்றும் கோட்சார பலன்களை கணிக்கிறோம். எழுதப்பட்ட கர்மா விதிப்படி தான் நடக்கும் என்றாலும் விதி யால் ஏற்படப் போகும் விளைவுகளை உணரும் உள்ளுணர்வைத் தருவதும் சந்திரன் தான். சந்திரன் வளர்ந்து தேயும் கிரகம் என்பதால் சந்திரன் நின்ற பாகவம் மூலம் கிடைக்கும் பலன்களும் நிதானிக்க முடியாத விதத்தில்தான் இருக்கும்.

    ஒரு ஜாதகத்தில் விதிக்கு தீர்வு தரும் மதி எனப்படும் சந்திரனின் நிலை மிக மிக முக்கியம். ஒருவரின் சுய ஜாதகத்தில் சந்திரனின் மூலம்தான் அனைத்து விதமான யோகங்கள், அவயோகங்கள் ஏற்படுகின்றன.

    மனிதராய் பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு தொழில் அல்லது வேலை செய்து வாழ வேண்டும் என்பது விதி. ஜனன கால ஜாதகத்தில் தொழில் காரகனாகிய சனி சிறப்பாக இருந்தாலும் ஒருவர் தன் தொழிலை திறம்பட நிர்வகிக்க மதியாகிய சந்திரனின் வலிமை மிக அவசியம். சந்திரன் சுப வலிமை பெற்றவர்கள் தனது சிந்திக்கும் திற னால், உள்ளுணர்வால் தொழிலில், வாழ்வில் ஏற்படப் போகும் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் உணர்ந்து செயல்படுவார்கள்.

    ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் என்பது உடல் மற்றும் மனம். ஆரோக்கியமான உடலும் தெளி வான சிந்தனையும் கொண்ட ஒருவரே வாழ்வில் வெற்றி பெற முடியும். அதனால் தான் ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் லக்னத்திற்கு இணையான முக்கியத்துவத்தை பெறுகிறது.

    அதே போல் மனிதர்கள் அனைவரும் விரும்பி னாலும் விரும்பாவிட்டாலும் சில கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டிய கால கட்டாயம் ஏற்படுகிறது. இவற்றை சந்திக்கும் போது சில நிலைகளில் மகிழ்ச்சியும் ஆனந்தமும், பல நிலைகளில் சங்கடங்களும் துக்கங்களும் கிடைக் கிறது.

    இந்த முயற்சியில் ஒரு சிலருக்கு மனச் சோர்வு ஏற்பட்டு எதிர்மறை சிந்தனை மிகுதியாகிவிடும். மேலும் பார்க்கும் வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது. எதிலும் எளிதில் முடிவு எடுக்க முடியாமல் திணருவது, ஒரு செயலை செய்வதா? வேண்டாமா? என இருவிதமான மனநிலையை ஏற்படுத்தும். அதீத எதிர்மறை எண்ணங்களால் தன் நிலை மறந்து வாழ்க்கையின் மகிழ்ச்சியை குறைத்து துக்கம், துன்பம், கவலை போன்ற அடையாளங்களை ஏற்படுத்தி விடும். இதற்கு காரணமும் சந்திரன் தான்.

    உலகில் உள்ள அனைத்து உயிர்களும் சூரிய ஒளியை பெற்றே இயங்குகிறது. சூரியன் பகலின் நாயகன் என்றால் சூரியனின் ஒளியை பகலில் பெற்று இரவில் குளுமையை தரும் நாயகி சந்திரன். ஒரு உயிரை உயிர்பிக்க செய்வது சூரிய ஒளி என் றால் உயிரை தாங்கும் உடல் சந்திரன். ஆன்மா உடல் என்றால், மனம் சந்திரனாகும். சூரியனுக்கு அடுத்து நம் கண்ணுக்கு தெளிவாக தெரியக்கூடிய கிரகம் சந்திரனாகும்.

    மனோகாரகனான சந்திரன் நவக்கிரகங்களில் இரண்டாம் இடத்தை வகிப்பவர். சந்திரன் ஒரு நீர் கிரகம். இந்த உலகத்தில் நிலை இல்லாமல் இருக்கும் கடல்கள், ஏரிகள், தண்ணீர் சம்பந்தப்பட்ட அனைத்தும் சந்திரனுக்கு சொந்தமாகும். கடலில் அலைகள் என்றைக்குமே ஒரே மாதிரியாக இருக் காது. சந்திரன் மனோகாரகன், நீர் கிரகம் என்பதாலும், அதன் இயக்கம் விரைவாக இருப்பதாலும் சந்திரனின் இயக்கத்திற்கு ஏற்ப மனிதர்களின் மனம் , எண்ண அலைகள் ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண்டே இருக்கிறது.

    சந்திரன் உடல் மற்றும் மனதிற்கு காரகன். சூரியன் ஆத்மாவிற்கு காரகன். உடல் மற்றும் ஆத்மா இரண்டும் இணையும் புள்ளி லக்ன புள்ளி. எனவே லக்ன புள்ளி உயிரை கூறும் உயிர் புள்ளி. சூரியன் சந்திரன் இரண்டும் இணைவதே உயிர் புள்ளி. லக்ன புள்ளி என்பது ஒருவரின் கொடுப்பினை புள்ளி. உயிராக மற்றும் பொருளாக எதை பெறுகிறோம் எதை இழக்கிறோம் என்பதை லக்னபுள்ளி வாயிலாக அறியலாம். ஆத்மாவிற்கு எதுவும் தேவை இல்லை.

    ஆனால் மனதிற்கும், உடலுக்கும் அனைத்தும் தேவை. உடலுக்கு, மனதிற்கு என்னென்ன எப்பொழுது தேவை? தேவையில்லை, எதை பெறுகிறது? எதை இழக்கிறது என்பதை சந்திரனை வைத்து தசா புத்திகள் எடுத்தார்கள். லக்ன புள்ளியில் சூரியன் மற்றும் சந்திரன் இரண் டுமே வருவதால் தசா புத்தி பலன்கள் துல்லியமாக உள்ளது.

    சந்திரன் கால புரு‌ஷனுக்கு நான்காம் வீடான கடகத்தின் அதிபதி. நான்காமிடம் சுக ஸ்தானத்தை குறிக்கும். எனவே சந்திரனை வைத்து ஜாதகரின் சுகம் மற்றும் ஜாதகருக்கு தன் சொந்தக்காரர்களின் மூலம் கிடைக்கும் மன சந்தோசத்தை கூறலாம். நான்காமிடம் சொந்தங்களை குறிக்குமிடம்.

    சந்திரனின் கடக வீட்டிற்கு நேர் எதிர் பாவம் மகரம். மகரம் என்பது கர்ம ஸ்தானம். கர்ம ஸ்தானத் துக்கு நிவர்த்தி பாவம், நேரெதிர் இந்த கடகம். சந்திரன் அதிபதி. சந்திரன் ஒரு நீர் கிரகம். எனவே சந்திரன் பாவங்களை கழுவுபவர். சந்திரன் நீர், ஆத்மா நெருப்பு. நீர் என்பது கீழே இறங்கி செல்லும் தன்மை உடையது. ஆத்மா என்பது ஒளி. ஒளி என்பது மேலெழும்பி செல்வது. ஆத்மா என்பது எத்தனை முறை மேலே சென்றாலும், அதாவது மறு பிறப்புக்கு காரகம், மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க இந்த பூமிக்கு வந்தே ஆக வேண்டும். அதனால் தான் சூரியனும், சந்திரனும் இணையும் அமாவாசை நாளில் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கப்படுகிறது.

    ஆக சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்ப வர். ஒருவருக்கு எந்தவிதமான கஷ்ட, நஷ்டங்கள் வந்தாலும் முதலில் பாதிப்பது மனம்தான். அமைதி யின்மை, கோபம், பிடிவாதம், சோகம், இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் போன்ற மனநிலை பாதிப்பு ஏற்படும். ஒரு தெளிவான சிந்தனை, முடிவு எடுப்பதற்கு காரணமாக விளங்குபவர் சந்திரன். மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மனித வாழ்வில் நம் பணிகளை திறம்பட செய்து முடிக்க கடுமையான முயற்சி செய்து வருகிறோம். அனைவரிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கும்.

    ஒவ்வொருவரின் திறமையும் மற்றவர்களின் திறமையில் இருந்து நிச்சயம் மாறுபடும். முயற்சியில் வெற்றி அல்லது தோல்வி என்பது நம் விதிப்படி தான் நடக்கும் என்றாலும் உள்ளுணர்வின் தூண்டுதலால் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம். ஒரு சிலர் தங்களின் வெற்றியின் சாதக, பாதகத்தை உள்ளுணர்வின் மூலம் துல்லியமாக கணித்து விடுவார்கள். ஒருவருக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை தீமைகளை உணர்த்துவது ஜோதிடம் என்றால் அந்த நன்மைகளை சாதகமாக்கவும் தீமைகளை தகர்க்கவும் உள்ளுணர்வு மிக மிக அவசியம்.

    உள்ளுணர்வு என்றால் என்ன?

    உடலும், ஆன்மாவும் இணைந்து செயல்படுவதே உள்ளுணர்வு. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது. உடல் என்பது பிறந்த ராசி.

    ஒருவர் பிறந்த ராசிக்கு ஏற்பவும் ராசியில் உச்சம், நீச்சம் பெறும் கிரகத்தின் தன்மைக்கு ஏற்பவும் ஆழ் மனதில், சிந்தனையில், உள்ளுணர்வில் மாறுபாடு இருக்கும். ஆழ் மனதில் நல்ல சிந்தனை இருந்தால் உடலும் ஆன்மாவும் இணையும். தீய சிந்தனை இருந்தால் உடலோடு ஆன்மா இணையாது. ஒருவர் எதை நினைக்கின்றாரோ அந்த இடத்திற்கு அவரது ஆன்மா செல்லும். உதாரணமாக இறைவனை நினைக்கும் போது உடலும் ஆன்மாவும் இணைந்து சூட்சும சக்தி பெற்று இறைவனிடம் சென்று உள்ளுணர்வு சிறப்பாக இயங்கும். தீய செயல்களை நினைக்கும்போது சூட்சும சக்தி அசுப வலிமை பெற்று எண்ணச்சிதறலால் உள்ளுணர்விற்கு வலிமை குறையும். ஒரு மனிதன் சம நிலையில் இருக்கும் போது மட்டுமே உள்ளுணர்வு சீராக இருக் கும். உள்ளுணர்வை சீராக்க சித்தர்கள், ஞானி கள் அருளிய உபயம் ஜென்ம நட்சத்திர வழிபாடு.

    மனித உடல் இறைவனால் பஞ்ச பூதத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவை பஞ்ச பூதங்களாகும். பஞ்சபூத ஆற்றலில் உண்டாக் கப்பட்டு இயங்கும் மனிதன், தான் வாழும் காலத்தில் பஞ்ச இந்திரியங்களான மெய், வாய், கண், காது, மூக்கு ஆகியவற்றின் மூலமாக தூண்டப்பட்டு தன் புலன்களால் இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்களால் பிறருக்கு தீங்கு விளைவிக்கும்போது ஏற்படும் பாவங்களால் கர்மவினைகள் உண்டாகிறது.

    எவ்வகையில் பாவம் செய்யப்பட்டதோ அவ்வகை யில் தானே அதனை தீர்க்க முடியும். ஐந்து விதமான சேவைகள் மூலம் பாவங்களை போக்க முடியும். அவை:-

    1. யாதனம் : கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோயில் திருப்பணிகள் செய்தல்.

    2. சிரவணம் : இறைவனின் பெருமைகளை ஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாக கேட்டல்.

    3. கீர்த்தனம் : இறைவனை இசை கருவிகள் கொண்டு பாடி ஆடி மகிழ்வித்தல்.

    4. பூஜார்த்தனம் : அபிஷேகம் செய்தல், அலங் காரம் செய்தல், அர்ச்சனை செய்தல், நைவேத் தியம் படைத்து பூஜை செய்தல்.

    5. ஸ்துதி : இறைவனை புகழ்ந்து தோத்திர இசைப் பாடல்களை பாடுதல்.

    இந்த ஐந்து விதமான சேவைகளை செய்து வர கர்ம வினைகளால் உடல், உயிர் அனுபவிக்கும் துன் பங்கள் மாறி இன்பங்கள் கிடைக்கும். இந்த வழி பாட்டை ஜென்ம நட்சத்திர நாளில் செய்யும் போது பலன் இரட்டிப்பாகும்.

    ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டால், லக்னம் ஆன்மாவையும், சந்திரன் நின்ற ராசி உடலையும் குறிக்கும், சந்திரனானது ஏதாவது ராசியில், ஏதோ ஒரு நட்சத்திர பாதத்தில் இருக் கும். அதுவே பிறந்த ஜென்ம நட்சத்திரமாகும்.ஒவ்வொரு ராசியில் உள்ள நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு அதிபதிகள் உள்ளனர். அந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு யார் அதிபதியோ அவர் ஜாதகரின் உடலை இயக்குவார்.கர்மவினைக்கு ஏற்ற வாறு உடல் அனுபவிக்கும் நன்மைகள் மற்றும் தீமை களுக்கு காரணமாக திகழ்பவர்கள் ஜென்ம நட்சத் திர அதிபதிகள்.

    இதனாலேயே, குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும். அனைத்து வித தோ‌ஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ் வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரங்கள் ஆகும்.

    எனவே ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை குறித்து வைத்துக் கொண்டு அன்றைய தினம் அந்த அதிதேவதை யின் கோவிலுக்கு சென்று ஜாதகத்தில் உள்ள தோ‌ஷங்கள் விலக விசே‌ஷ அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜை செய்தல் நன்று. வசதி, வாய்ப்பு இருப்ப வர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று ஹோமம் செய்தால் கூடுதல் பலனை பெற முடியும். வாய்ப்பு இல்லாதவர்கள் குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் முடியாதவர்கள் ஜென்ம நட்சத்திரத்தைச் சொல்லி அர்ச்சனையாவது செய்ய வேண்டும்.

    ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும். ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது. உள்ளுணர்வு சிறப்பாக இயங்கி தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.

    பலர் ஆங்கில தேதியை அடிப்படையாகக் கொண்டு பிறந்த தினத்தன்று ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்கிறார்கள். இது தவறு. அவர் பிறந்த மாதத்தின் அதே நட்சத்திரத்தில் கொண்டாடுவது தான் நல்லது. அப்போது தான் கிரகங்கள், நட்சத்திரங்கள் அவர் பிறப்பின் போது இருந்தது போலவே அமைந்திருக்கும். அதிலும் குறிப்பாக ஜென்ம நட்சத்திர திதியின் அதி தெய்வம் அல்லது உபாசனை தெய்வம் எது என்பதை அறிந்து வழிபட்டால் 100 சதவீதம் வெற்றி நிச்சயம்.
    Next Story
    ×