search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தர்ப்பணம்
    X
    தர்ப்பணம்

    தை அமாவாசை பித்ரு தர்ப்பணம்: பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி- 22

    தை அமாவாசையன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று இறந்த தாய், தந்தையர், முன்னோர்களை நினைத்து பித்ருக்கள் வழிபாடு, பூஜை, திதி, தர்ப்பணம் செய்யலாம்.


    பிரதமை முதல் அமாவாசை வரை திதிகள் 15. இதில் அமாவாசை திதி முக்கியமானது. அன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைவதால் பூமிக்கு ஒரு காந்த சக்தி ஏற்படும். மற்ற திதிகளில் ஏதாவது ஒன்று, இரண்டு கிரகம் திதி சூன்யம் அடையும். ஆனால் அமாவாசையன்று எந்தக் கிரகமும் சூன்யம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களை தொடங்கினால் அது வெற்றி பெறும். முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். அமாவாசை அன்று சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் நெற்றிக்கண் பலப்படுவதால் அமாவாசையன்று மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனர். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோ‌ஷத்தைப் போக்குகின்றனர்.

    அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனர். சில சடங்குகள், சில பூஜை முறைகளுக்கும் அமாவாசை சிறந்தது. அதில் ஒன்று தான் பித்ரு தர்ப்பணம்.

    இறைவனடி சேர்ந்த முன்னோர்கள், பெற்றோர்களின் ஆசி வேண்டி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாளான அமாவாசையில் தைமாத அமாவாசை மிகவும் சிறப்புடையது.

    பித்ரு லோகம் என்பது , சூரியனுக்கு அப்பால், பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருட புராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும், வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர். மறைந்த முன்னோர்களின் ஆன்மாக்கள் சந்திரனின் ஒளிக்கதிரில் உள்ள அமிர்தம்தான் உணவு.

    அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கதிர் ஆன்மாக்களுக்குக் கிடைக்காது. அதனால் அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக இருக்கும். ஆன்மாக்கள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாத ஆன்மாக்கள் தனது ரத்த சம்பந்தமுடையவர்களின் வீடுகளுக்கு சென்று இல்லங்களில் உள்ள நீர் நிலை, வாசலில் நின்று உணவை படையல், தர்பணம் மூலம் எதிர்பார்த்து காத்து இருப்பார்கள்.

    அவர்களின் பசியை போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் மூதாதையர்களின் பசியும், தாகமும் விலகி சந்ததியரை வாழ்த்துவார்கள். அன்று வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமல் இருந்தால் பித்ருக்கள் வருத்தத்துடன், கோபமாக பிதுர்லோகம் செல்வர். எனவே அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.

    ஒரு ஜாதகத்தில் உள்ள தோ‌ஷங்களிலேயே மிகவும் வலிமையான தோ‌ஷம் பித்ரு தோ‌ஷம். இந்த தோ‌ஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. இந்த தோ‌ஷம் இருக்கும் வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் தன்னுடைய பலனை தராது. மாறாக வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும். பிதுர் தோ‌ஷம் நீங்காமல் மற்ற எந்த பரிகாரங்கள் செய்தாலும் பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர ஜெபங்களும் சித்தியடைவதில்லை. ஒரு ஜாதகத்தில் பிதுர் தோ‌ஷம் இருந்தால் தோ‌ஷம் நீங்கிய பின்பு தான் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்.

    தை அமாவாசையன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று இறந்த தாய், தந்தையர், முன்னோர்களை நினைத்து பித்ருக்கள் வழிபாடு, பூஜை, திதி, தர்ப்பணம் செய்யலாம். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், தேவிபட்டினம், திருச்செந்தூர், வேதாரண்யம், திருவையாறு, கொடுமுடி, பவானி கூடுதுறை, தாமிரபரணி போன்ற இடங்களிலும், வட மாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களிலும் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.

    இறந்த நாள், திதி தெரியாதவர்களும், மாதாந்திர அமாவாசையன்று திதி கொடுக்க முடியாதவர்களும் தை அமாவாசையன்று திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம். இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தை தீர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும்.

    முன்னோர்களுக்கு செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம். அதனால் அன்று சூரிய வழிபாடு செய்வது மிக அவசியம்.

    அமாவாசை நாட்களில் தீர்த்தக் கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீர்த்தமாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டில் உள்ள தோ‌ஷங்கள் நீங்கும்.

    இயற்கை மரணம் அடைந்து ஆத்மா சாந்தி அடைந்தவரின் வீட்டில் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். முறையாக திதி தர்பணம் கிடைக்கும். இறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் நற் சக்தியும் சாத்வீக குணமும் வந்துவிடும். அவர்களை முறையாக வழிபாடு செய்தால் அவர்களின் அத்தனை சக்தியையும் வழிபாடு செய்பவர்களின் முன்னேற்றத்திற்கு கிடைக்கச் செய்து ஆசீர்வாதம் செய்வார்கள். மனவேதனை அடைந்து துர்மரணம் அடைந்தாலோ, கொடூரமான நோய் தாக்கத்தால் இறந்தவரின் ஆன்மாவோ தான் எளிதில் முக்தி பெறுவது இல்லை.

    துர்மரணம் அடைந்தவர் ஆத்மா முக்தி அடையும் வரை சில மன வருத்தம் தரும் நிகழ்வுகள் குடும்பத்தில் நடந்து கொண்டே இருக்கும். துர்மரணம் அடைந்தவர்களின் ஆன்மாவை சாந்தியடைய செய்யும் வழிபாட்டு முறைகளை செய்யாமல் இருப்பதே இதற்கு காரணம். இறந்த பிறகு ஆன்மாக்களுக்கு பிறவி குணம் இருக்காது. முறையான திதி தர்பணம், திலஹோமத்தால் இறந்த அனைத்து ஆத்மாக்களையும் புனிதமடையச் செய்ய முடியும்.

    முன்னோர்களின் ஆன்மாக்களை யாரும் பார்க்க முடியாது ஆனால் அவர்களிடம் இருந்து கிடைக்கும் சுப, அசுப அதிர்வுகளை உணர முடியும். அதே நேரத்தில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கவும் முடியாது என்பதால் ஹோமம் வளர்த்து பஞ்ச பூதங்களையும், நவகிரகங்களையும் முன்நிறுத்தி உரியமந்திரங்களோடு வணங்கும் தில ஹோமம் எத்தகைய துர்மரணம் அடைந்தவர் ஆத்மாவையும். சாந்தி அடைய செய்யும்.

    இந்த ஆண்டு 31-1-2022, தை18 அன்று காலை சதுர்த்தசி திதி இருப்பதால் துர்மரணம் அடைந்தவர்களுக்கு சாந்தி பூஜை செய்தால் இறந்தவர்களின் ஆன்மா நற்கதி அடையும். ஹோமம் செய்ய முடியாத வர்களுக்கு தொடர் அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும். பித்ருக்கள் பூஜை செய்யும் முறையையும் அதனால் ஏற்படும் சுப பலன்களையும் காணலாம்.

    தை அமாவாசை: இந்த ஜென்மத்தில் ஒருவர் செய்யக்கூடிய பாவ, புண்ணியங்களுக்கு தகுந்த வகையில் தான் மறுபிறவி அமையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்கள். சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய்வழி முன்னோர்கள். அமாவாசை திதியன்று சூரியனும்,சந்திரனும் ஒன்றாக இணையும் நாள். கர்ம பலன்களை குறைத்து சுப பலன்களை அதிகமாக தரும் சக்தி திதிகளுக்கு உண்டு. இதில் அமாவாசை திதி முக்கியமானது.

    புண்ணியங்களை மிகுதியாக வழங்கக்கூடிய சிறப்பு மிகுந்த தை அமாவாசை திருக்கணித பஞ்சாங்கப்படி பிலவ வருடம் தைமாதம் 18ம் நாள் திங்கட்கிழமை 31-1-2022 பகல் 2.18 மணி முதல் தை19, செவ்வாய் கிழமை 1-2-2022 காலை 11.16 மணி வரை நிகழ்கிறது. சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்க்காரகன்.இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    அதிலும் கால புரு‌ஷனுக்கு கர்ம ஸ்தானமான மகர ராசியில் ஆட்சி பலம் பெற்ற கர்ம காரகன் சனியுடன் சூரியன், சந்திரன் சேர்வது மிகவும் விசே‌ஷமான தை அமாவாசையாகும். அதிலும் உத்திராயண புண்ய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் கூடுதல் சிறப்பாகும். இந்த காலத்தில் சூரியனுடன் இணையும் சந்திரன் உத்தி ராடம், திருவோண நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்.

    உத்திராடம் சூரியனின் நட்சத்திரம். திருவோணம் சந்திரனின் நட்சத்திரம். சூரிய, சந்திர நட்சத்திரங்களில் உருவா கும் தை அமாவாசை மிக மிக சிறப்பான உன்னதமான பலன்களை வழங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

    அன்று சூர்யோதயத்திற்கு முன்பாக கடற்கரை, மகாநதிகள், ஆறு, குளம், கிணற்றிலோ பித்ருகளுக்கு, தர்ப்பணம் தர வேண்டும்.தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு வலது ஆள் காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் உள்ள பித்ரு பூமிய ரேகைகள் வழியாக நீரை வார்த்து தரப்படும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்‌ஷன சக்தியை மீறி மேல்நோக்கி எழும்பிச் சென்று, எத்தனையோ கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும்.

    தை அமாவாசையன்று இச்சக்தியானது மிகவும் அபரிமிதமானதாகப் பெருகுகின்றது. பித்ருக்களுக்கு பூஜை செய்து அந்தணர்களுக்கு தானம் தரும் பொருட்களில் பூசணிக்காய் , வாழைக்காய், போன்ற காய்கறிகள் இருக்க வேண்டும். அதற்கு பிறகு வீட்டில் இருக்கும் நமது முன்னோர் படங்களுக்கு துளசி மாலை அணிவித்து முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்த பிறகு சாப்பிட வேண்டும். அன்று ஏழைகளுக்கு அன்னதானம் ஆடைகள் தானம் வழங்கலாம்.

    இதுவரை பித்ருக்களுக்கு, தர்ப்பணம் போன்ற கர்ம காரியங்களை செய்யாதவர்கள் கூட வரும் தை அமாவாசை அன்று செய்து அளவிட முடியாத ஆனந்தமான பலனைப் பெறலாம். நீர் நிலைக்கு சென்று பித்ருதர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், பெண்கள். ஆதரவற்ற முதியோருக்கு உணவு தந்து வீட்டிலோ அல்லது சிவன் கோவிலிலோ ஆத்மார்த்த வழிபாடு செய்தாலே பலன் கிடைக்கும்.

    ராகு-கேதுக்கள் மற்றும் சனி பகவான் போன்ற கிரகங்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். அமாவாசை தானங்கள் நமது கர்ம வினைகளை நீக்கும்.

    Next Story
    ×