என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  பட்டினத்தார்
  X
  பட்டினத்தார்

  சென்னை சித்தர்கள்: பட்டினத்தார்- திருவொற்றியூர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகம் திரும்பிய பட்டினத்தார் திருவிடைமருதூரில் வந்து சிவன் கோவில் கிழக்கு கோபுரத்தின் அருகில் தங்கினார்.


  சென்னையில் வெளியூர்களில் இருந்து வந்து ஐக்கியமாகி இருக்கும் சித்தர்களில் பெரும்பாலானவர்கள் திருவொற்றியூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில்தான் ஜீவ சமாதி கொண்டுள்ளனர்.

  அப்படி திருவொற்றியூரில் ஐக்கியமாகி இருக்கும் சித்தர்களில் சில நூறாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மக்களுக்கு ஆன்மீகத்தின் மகத்துவத்தை உணர வைத்த பட்டினத்தார் தனித்துவம் கொண்டவர்.

  இவரது வாழ்க்கையே சித்தர்களின் வாழ்க்கையை நமக்கு உணர வைப்பது போன்று உள்ளது. இவரது பூர்வீகம் காவிரி பூம்பட்டினம். தற்போது பூம்புகார் என்று அழைக்கப்படும் அந்த ஊரில் கி.பி.11-ம் நூற்றாண்டில் செல்வ செழிப்புமிக்க வணிகராக சிவநேச செட்டியார் என்பவர் வாழ்ந்து வந்தார்.

  இவருக்கும், இவரது மனைவி ஞானகலாம்பிகை அம்மையாருக்கும் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யர் அருளால் பிறந்ததால் அந்த குழந்தைக்கு திருவெண்காடார் என்று பெயரிட்டனர்.

  திருவெண்காடாருக்கு உரிய வயது வந்ததும் சிவகலை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். திருமணமாகி நீண்ட நாட்களாகியும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இதனால் வருத்தமடைந்த திருவெண்காடார்-சிவகலை தம்பதி பின்னர் திருவிடைமருதூருக்கு சென்று சிவபெருமானை வழிபட்டு விரதம் இருந்து வந்தனர்.

  அவர்களது தெய்வ பக்தியை அறிந்த சிவபெருமான் அவர்களுக்கு அருள் பாலிக்க முடிவு செய்தார். அந்த ஊரில் சிவசருமர் என்று ஒருவர் வாழ்ந்து வந்தார். கடுமையான வறுமையில் அவர் ஒவ்வொரு நாளையும் கழித்துக்கொண்டிருந்தார்.

  தினமும் திருவிடைமருதூர் ஆலயத்துக்கு சென்று சிவபெருமானை மனம் உருக அவர் வேண்டுவதுண்டு. அவர் மூலமே சிவபெருமான் தனது திருவிளையாடலை தொடங்கினார்.

  தாம் ஒரு குழந்தையாக தோன்றுவதாகவும், அந்த குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து வந்திருக்கும் திருவெண்காடாவிடம் கொடுத்து பொன், பொருளை பரிசாக பெற்றுக்கொள்ளவும் என்று ஈசன் அசரீரியாக கூறினார். அதைக்கேட்ட சிவசருமர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார்.

  சிவபெருமான் சொன்னது போலவே குழந்தை வடிவில் தோன்றினார். அந்த குழந்தையை எடுத்து சென்று திருவெண்காடாரிடம் சிவசருமர் ஒப்படைத்தார். திருவெண்காடாரும் மகிழ்ச்சியோடு பரிசு பொருட்களை கொடுத்து அந்த குழந்தையை பெற்றுக்கொண்டார். அந்த குழந்தையுடன் காவிரிப்பூம்பட்டினத்துக்கு திரும்பினார்.

  மருதவாணனை அவர் சீரும், சிறப்புமாக வளர்த்து வந்தார். தன்னை போன்றே தனது மகனையும் திருவெண்காடார் வணிகத்தில் ஈடுபடுத்தினார். மருதவாணனை மிகப்பெரிய வணிகனாக்கி புகழ் பெறச்செய்ய வேண்டும் என்று விரும்பினார். எனவே வெளிநாடுகளுக்கு கப்பலில் சென்று வியாபாரம் செய்வதையும் கற்றுக்கொடுத்தார்.

  அப்படி ஒரு தடவை வியாபாரம் செய்வதற்காக கப்பலில் மருதவாணன் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தார். குறிப்பிட்ட நாளில் அவர் காவிரிப்பூம்பட்டிணத்துக்கு திரும்பி வருவதாக தகவல் வந்தது. தனது மகன் கப்பல் நிறைய பொன், பொருட்களுடன் பெரும் செல்வந்தனாக திரும்பி வருவான் என்று திருவெண்காடார் நினைத்தார்.

  அவரது எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. மருதவாணன் காவிரிப்பூம்பட்டினத்தை வந்தடைந்ததும் திருவெண்காடாரின் ஆவல் அதிகரித்தது. கப்பலில் என்னவெல்லாம் தனது மகன் கொண்டு வந்திருக்கிறான் என்று ஆய்வு செய்தார். ஆனால் அந்த கப்பல் முழுக்க தவிடும், வரட்டியும்தான் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது.

  இதனால் திருவெண்காடார் அடைந்த கோபத்துக்கு அளவே இல்லை. அதே கோபத்துடன் வீட்டுக்கு வந்தார். வீட்டில் மருதவாணன் ஒரே ஒரு சிறிய பெட்டியை மட்டுமே கொண்டு வந்திருந்தார். அந்த பெட்டியை திறந்து பார்த்தால் அதற்குள் ஒரு பனை ஓலை இருந்தது. அந்த பனை ஓலையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று எழுதப்பட்டு இருந்தது.

  அதைப்படித்ததும் திருவெண்காடாருக்கு இந்த உலகின் வாழ்வியல் தத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்து, சுகம் அனைத்தையும் அவர் உதறி தள்ளினார். தனது ஆடம்பர மாளிகையை விட்டு வெளியேறினார்.

  அதேவேகத்தில் துறவியாகவும் மாறினார். அன்று முதல் அவரது பெயர் திருவெண்காடார் என்பது மறைந்து பட்டினத்தார் என்று மாறியது. ஊர் ஊராக பித்து பிடித்தவர் போல அலைந்து திரிந்தார். இதனால் அவரது சொத்துக்கள் அனைத்தையும் அவரது சகோதரி கைப்பற்றிக்கொள்ள முடிவு செய்தார்.

  ஒருநாள் வீட்டுக்கு வந்திருந்த பட்டினத்தாரை வி‌ஷம் வைத்து கொள்ள அவரது சகோதரி திட்டமிட்டார். பட்டினத்தாருக்கு கொடுத்த அப்பத்தில் வி‌ஷம் தடவி சாப்பிட கொடுத்தார். அதை வாங்கிய உடனேயே பட்டினத்தாருக்கு எல்லாம் புரிந்து விட்டது. அந்த அப்பத்தை அப்படியே வீட்டின் கூரையில் சொருகினார்.

  “தன் வினை தன்னை சுடும். ஓட்டப்பம் வீட்டை சுடும்” என்று கூறி விட்டு நடக்க ஆரம்பித்தார். அடுத்த வினாடி அந்த வீடு மள மளவென தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. பட்டினத்தார் சொன்ன ஒரே ஒரு சொல்லால் அந்த வீடு இடிந்ததை கண்டதும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகுதான் பட்டினத்தார் மிகப்பெரிய சித்தராக மாறி இருக்கிறார் என்பது அவர்களுக்கு புரிய வந்தது.

  அப்போது பட்டினத்தார் தனது தாயிடம் கூறுகையில், “உங்கள் வாழ்வு நிறைவு பெறும்போது இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நான் வந்து இறுதிச்சடங்குகள் செய்வேன்” என்று கூறி விட்டு அரண்மனையை விட்டு வெளியேறினார்.ஊர் ஊராக சென்று சிவாலயங்களில் வழிபட்டு வந்தார்.

  அப்போது ஒருநாள் அவருக்கு தனது தாய் மரணமடைந்து விட்ட தகவல் தெரிந்தது. உடனடியாக காவிரிப்பூம்பட்டினத்துக்கு திரும்பி வந்த அவர் தனது தாய் உடல் மீது பச்சை வாழை மட்டைகளை அடுக்கி தீ வைத்தார். அந்த பச்சை வாழை மட்டைகள் தீப்பற்றி எரிந்தன. உறவினர்கள் அனைவரும் அதை ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

  அப்போது பட்டினத்தார், “ஐயிரண்டு திங்களாய்” என்று தொடங்கும் பாடலை பாடி தனது தாயின் சிறப்புகளை சொல்லி உருகினார். பிறகு யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் அந்த ஊரை விட்டே வெளியேறினார். வட மாநிலங்களுக்கு சென்று புனித தலங்களில் நீராடி வழிபட்டார்.

  உஜ்ஜைனி நகரில் அவர் சிவபெருமானை வழிபட்டு அங்கு உள்ள ஆலயத்தில் தங்கி இருந்த போது அவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. அந்த ஊரை பத்தரகிரியார் என்ற அரசர் ஆட்சி செய்து வந்தார். அவரது அரண்மனையில் நகைகளை திருடி விட்டு கொள்ளைக்காரர்கள் தப்பி சென்றனர்.

  அப்போது ஆலயத்தில் தூங்கி கொண்டிருந்த பட்டினத்தாரை நோக்கி ஒரு மாலையை போட்டுவிட்டுசென்றனர். திருடனை துரத்தி வந்த அரண்மனை காவலர்கள் பட்டினத்தார் நகை மாலையுடன் நிற்பதை கண்டதும் அவர்தான் கொள்ளை கூட்ட தலைவர் என்று தவறாக நினைத்து அவரை கைது செய்து அரண்மனைக்கு அழைத்து சென்றனர்.

  அரசர் பத்தரகிரியார் விசாரணை நடத்தாமலேயே இவனை தூக்கில் போடுக என்று உத்தர விட்டார். தூக்கு மரத்தில் பட்டினத்தாரை தொங்க விட ஏற்பாடுகள் தயார் ஆன போது அவர் “என் செயலாவது யாதொன்று மில்லை இனி தெய்வமே உன் செயலே” என்று தொடங்கும் பாடல் ஒன்றை பாடினார். அடுத்த நிமிடம் தூக்கு மரம் தீப்பிடித்து எரிந்தது.

  இதைப்பார்த்த அரசர் பத்ரகிரியார் தன் தவறை உணர்ந்தார். பட்டினத்தார் மிக பெரிய சித்தர் என்பதை அறிந்து அவரிடம் மன்னிப்பு கேட்டார். அப்போது பட்டினத்தார் சிரித்துக் கொண்டே, “உன் மனைவியே உன்னை ஏமாற்றுகிறாள்” என்று கூறினார்.

  இதைக்கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பத்ரகிரியார் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது தான் அவரது மனைவி துரோகம் செய்திருப்பது தெரிய வந்தது. பட்டினத்தாரின் மேன்மையை உணர்ந்த பத்ரகிரியார் தாமும் அரச வாழ்க்கையை துறந்து துறவியானார்.

  பட்டினத்தாரின் சீடராகவே அவர் மாறினார். பட்டினத்தார் போகும் இடமெல்லாம் அவரை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். தமிழகம் திரும்பிய பட்டினத்தார் திருவிடைமருதூரில் வந்து சிவன் கோவில் கிழக்கு கோபுரத்தின் அருகில் தங்கினார்.

  பத்ரகிரியார் அந்த ஊரில் பிச்சை எடுத்து வந்து பட்டினத்தாருக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டு வந்தார். ஒருநாள் சிவபெருமான் சிவனடியார் போல வேடமிட்டு பட்டினத்தாரிடம் வந்து அன்னதானம் தாருங்கள் என்று கேட்டார். உடனே பட்டினத்தார் சிரித்துக்கொண்டே, “நானோ ஒன்றுமில்லாதவன். மேற்கு கோபுரத்தில் ஒருவன் இருக்கிறான். அவனிடம் போய் கேளுங்கள்” என்றார்.

  இதை அறிந்ததும் பத்ரகிரியாருக்கு கோபம் வந்தது. தனது கையில் இருக்கும் திருவோடைதான் பட்டினத்தார் கிண்டல் செய்கிறார் என அறிந்து வேதனை பட்டார். அந்த திருவோட்டை தூக்கி எறிந்தார்.

  இப்படி பட்டினத்தாரும், பத்ரகிரியாரும் சொந்தம், பந்தம், சொத்து அனைத்தையும் துறந்து துறவியாக வாழ்ந்தனர். இந்த நிலையிலேயே பத்ரகிரியார் பரிபூரணம் அடைந்தார். அவரை ஜீவ சமாதி செய்து விட்டு பட்டினத்தார் சிவபெருமானை நோக்கி வழிபட்டார். தனக்கும் முக்தி கொடுக்க வேண்டும் என்று வேண்டினார்.

  அப்போது இறைவன், “எந்த இடத்தில் உனக்கு பேய் கரும்பு இனிக்கிறதோ! அங்கு உனக்கு முக்தி” என்று அருள் புரிந்தார். பட்டினத்தாரும் அதை ஏற்று தமிழகம் முழுவதும் தல யாத்திரை செய்தார். திருவொற்றியூர் தலத்துக்கு வந்த போதுதான் அவருக்கு பேய் கரும்பு இனித்தது. எனவே திருவொற்றியூரில் ஜீவ சமாதி அடைய முடிவு செய்தார்.

  திருவொற்றியூர் கடற்கரையில் அடிக்கடி அவர் குழந்தைகளுடன் விளையாடுவார். தன்னை மணலுக்குள் புதைக்க செய்து சிறுவர்களை மகிழ்விப்பார். ஒருநாள் அப்படி அவர் மணலுக்குள் புதைந்த போது வெகு நேரமாக அவர் எழுந்து வரவில்லை. அவரை மூடி வைத்த இடத்தில் குழந்தைகள் தேடிய போது அங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தது.

  அதன் பிறகே பட்டினத்தார் முக்தி பெற்றதை அந்த பகுதி மக்கள் உணர்ந்தனர். அவர் மூடி மறைந்த இடத்திலேயே ஜீவ சமாதி அமைக்கப்பட்டது. திருவொற்றியூர் கடற்கரையில் இருக்கும் ஜீவ சமாதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

  ஜீவ சமாதியில் தினமும் காலையில் அபிஷேகம் செய்யப்படுகிறது. பக்தர்கள் கட்டணம் செலுத்தி அபிஷேகம் செய்யலாம். ஒவ்வொரு மாதமும் உத்திராடம் நட்சத்திரம் தினத்தன்று இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. காந்த சக்தியும், அதிர்வலைகளும் அதிகமாக இருப்பதால் பட்டினத்தாரின் அருள் இன்னமும் அங்கு இருப்பதை மக்கள் உணருகிறார்கள்.

  இதனால்தான் வியாழக்கிழமை மற்றும் பிரதோ‌ஷ நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள். இந்த ஜீவ சமாதி ஆலயம் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  பக்தர்கள் தியானம் செய்ய தனி மண்டபம் இருக்கிறது. ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திர தினத்தன்று மகா குரு பூஜை நடத்துகிறார்கள்.

  Next Story
  ×