என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  பொங்கல்
  X
  பொங்கல்

  ஆன்மிக அமுதம்: பொங்கலோ பொங்கல் - 37

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொங்கல் குறித்து திருப்பூர் கிருஷ்ணன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
  நம் பல பண்டிகைகள் ஒரே ஒருநாள் மட்டுமே கொண்டாடப்படுகின்றன. மிகச் சில பண்டிகைகள்தான் பல நாட்கள் கொண்டாடப் படுகின்றன.

  தீபாவளி ஒருநாள் பண்டிகைதான். கிருஷ்ண ஜெயந்தி, ராம நவமி, சிவராத்திரி போன்றவையும் கூட ஒருநாள் பண்டிகைகளே. ஆனால் நவராத்திரி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் நான்குநாள் பண்டிகை.

  எப்படி ஓணம் கேரளத்துப் பண்டிகையோ அதுபோல் பொங்கல் தமிழகத்துப் பண்டிகை. `போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல்` எனப் பொங்கல் பண்டிகை நான்காக வளர்கிறது.

  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பான தத்துவத்தை உள்ளடக்கியது. பொங்கலை முழுமையான விழா என்று சொல்ல வேண்டும்.

  பழையதை பகைமையைத் தூக்கிப் போட்டுவிடவேண்டும் என்று போதிக்கும் போகி, சூரிய சக்தியின் பெருமையைப் பறை சாற்றி உழவர்களை முன்னிலைப்படுத்தும் பொங்கல், எல்லா உயிரினங்களையும் நேசிக்க வேண்டும் என உணர்த்தும் மாட்டுப் பொங்கல், நட்பு மற்றும் உறவுகளின் பெரு மையை வலியுறுத்தும் காணும் பொங்கல், அதையொட்டி உலகப் பொதுமறையாகிய திருக் குறளை இயற்றிய திருவள்ளுவர் தினம் எனப் பொங்கல் பண்டிகையின் ஒவ்வொரு நாளும் முக்கியமானதுதான்.

  *வருணன் மூலம் பெருமழை பெய்யச் செய்து கோகுலத்திற்குத் தொல்லை தந்தான் தேவேந்திரன். அப்போது கோவர்த்தன கிரியைக் கண்ணன் உயர்த்திப் பிடித்து கால்நடைகளையும் மக்களையும் மழைநீர் பாதிக்காமல் காத்தான்.

  தோல்வியுற்ற இந்திரன் கண்ணனைப் பணிந்தான். இந்திரனின் பணிவால் மகிழ்ச்சி அடைந்த கண்ணன், இந்திர விழாவைக் கொண்டாட அனுமதித்தான்.

  சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழின் பழைய இலக்கியங்களில் சொல்லப்படும் இந்திர விழா என்பது பொங்கல்தான் என்று சில தமிழறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் தை மாதத்தில் நீராடுதல் பற்றிய குறிப்புகள் உண்டு. பரிபாடலிலும் தை நீராடல் பேசப்படுகிறது.

  தைநீராடலே பொங்கல் பண்டிகையின் தோற்றுவாயாக இருக்கவேண்டும் என் கிறார்கள் அறிஞர்கள்.

  *போகிப் பண்டிகை சொல்லும் உயரிய தத்துவம் உலகின் வேறு எந்தப் பகுதியிலும் சொல்லப் பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. `பழையன கழிதலும் புதியன புகுதலும்` என்ற இலக்கணத்தின் விளக்கமே போகி.

  வேண்டாத பழையவற்றைக் கழித்தால்தானே புதியனவற்றைக் காப்பாற்ற முடியும்? பல வீடுகள் தேவையற்ற பொருட்களின் குப்பைத் தொட்டிபோல் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறையேனும் தேவையற்ற பொருட்களை நீக்கினால்தான் நிம்மதியாக வாழ முடியும். இதற்கென்றே அமைந்த நாள்தான் போகி.

  தேவையற்ற பொருட்களை மட்டுமல்ல, நம் மனத்திலுள்ள பொறாமை, பகைமை போன்ற தேவையற்ற உணர்வுகளையும் மனத்தை விட்டு நீக்கவேண்டும். `நம் அகத்தில் உள்ள வேண்டாதவற்றை நீக்கவேண்டும்` என்று சொல்கிறபோது, அகம் என்ற சொல், நம் வீட்டையும் நம் மனத்தையும் சேர்த்தே குறிக்கிறது.

  `மனத்துக்கண் மாசிலன் ஆதல்` என்று வள்ளுவர் சொல்லும் லட்சி யத்திற்கு வழிகாட்டும் பண்டிகைதான் போகி. பொங்கலை ஒட்டி வீடுகளில் வெள்ளை யடிப்பது முக்கியம்தான். அதோடு நம் மனத்தையும் நல்ல சிந்தனைகளைக் கொண்ட வெள்ளை மனமாக மாற்றிக் கொள்வதும் முக்கியம்.

  போகி என்பது தமிழ்ச் சொல்லா என்ற ஐயம் எழலாம். பழையவற்றைப் போக்குவதால் போக்கி எனத் தொடக்கத்தில் அழைக்கப்பட்டு, பின்னர் அந்தச் சொல்லே மருவி போகி என்றானதாகச் சொல்லப்படுகிறது.

  சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் ரப்பர் டயர்களை எரிக்கும் வழக்கமெல்லாம் அண்மைக் காலத்தில் வந்ததுதான். மாசுகளை நீக்குவதற்காக ஏற்பட்ட பண்டிகை அன்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவதென்பது, எந்த வகையிலும் பொருத்த மற்றது என்பதை மக்கள் உணரவேண்டும்.

  அது போகிப் பண்டிகையின் நோக்கத்திற்கு நேர் முரணானது. வீட்டையும் அதன் சுற்றுப் புறத்தையும் சுத்தப்படுத்துவதே போகியின் நோக்கம்.

  *பொங்கல் உழவர்களின் பெருமையைப் போற்றும் நாள். `சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை` என வள்ளுவரும் `உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்` என மகாகவி பாரதியும் உழவுத் தொழிலின் சிறப்பைப் பேசுகிறார்கள்.

  உழவுத் தொழிலுக்கு ஆதாரமான சூரியனை வணங்கும் தினமே பொங்கல். `ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்` எனச் சிலப்பதிகாரத்தில் சூரியதேவனைப் போற்றுகிறார் இளங்கோ அடிகள்.

  நம் ஆன்மிகத்தில் சொல்லப்படும் மந்திரங்களில் எல்லாம் தலையாயது காயத்ரி மந்திரம்தான். காயத்ரி மந்திரத்தைச் சொல்லிப் பிற மந்திரங்களைச் சொன்னால்தான் மற்ற மந்திரங்களுக்கே பலன் உண்டு என்று சொல்வதுண்டு.

  காயத்ரி மந்திரம் சூரியதேவனைத்தான் போற்றுகிறது. தாம் எழுதிய பாஞ்சாலி சபதத்தின் குறிப்பில் காயத்ரி மந்திரத்தைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் பாரதியார்.

  செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக` என்பதே அந்த மொழிபெயர்ப்பு.

  திருப்பூர் கிருஷ்ணன்

  *சென்னை அருகே திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு குலோத்துங்க சோழன் பொங்கல் விழா கொண்டாடுவதற்காக அந்தக் கோயிலுக்கு நிலத்தை வழங்கியதாகக் குறிப்பிடுகிறது. ஆக பொங்கல் இல்ல விழாவாக மட்டுமல்லாமல் கோயில் விழாவாகவும் பழங்காலந்தொட்டே கொண்டாடப்பட்டு வருவதை அறிய முடிகிறது.

  பொங்கல் என்பது அறுவடைத் திருவிழா. உழவர்கள் தங்கள் உழைப்பின் பலனை அனுபவிக்கும் திருவிழா.

  பத்துப் பதினைந்து ஆண்டுகள் முன்னாள் கொண்டாடப்பட்ட பொங்கலுக்கும் இப்போது கொண்டாடப்படும் பொங்கலுக்கும் நிறைய வேறுபாடுகள் வந்துவிட்டன.

  முன்பு நண்பர்களுக்கும் உறவினர் களுக்கும் பொங்கல் வாழ்த்து அட்டைகளை அஞ்சலில் அனுப்புவது வழக்கம். ஒவ்வொரு வீட்டிற்கும் கட்டுக்கட்டாக வாழ்த்து அட்டைகள் வந்துசேரும்.

  இப்போது அத்தகைய வாழ்த்து அட்டைகளின் வரவு மிகவும் குறைந்துவிட்டது. மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவை மூலமே இன்று பெரும்பாலானோர் வாழ்த்துப் பரிமாறிக் கொள்கிறார்கள். அழகழகான வாழ்த்து அட்டைகளைத் தயாரிக்கும் தொழிலில் சுணக்கம் நேர்ந்துவிட்டது.

  *மாட்டுப் பொங்கல் பற்றிய புராணக் கதையும் கண்ணனை ஆதாரமாகக் கொண்டதுதான். கோவர்த்தன கிரியைக் கண்ணன் உயர்த்தி ஏழுநாட்கள் கால்நடைகளைக் காத்தானே? அந்த தினத்தை ஒட்டி, கால்நடைகளைப் போற்றும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது என்கிறது ஒரு கதை.

  உழவர்கள் பூமியை உழு வதற்குப் படும் சிரமங்களைப் பார்த்து மனம் உருகிய சிவபெருமான் ஒருநாள் தன் வாகனமான நந்தியை கயிலாயத்திலிருந்து பூமிக்கு அனுப்பி உழவர்களுக்கு உதவச் சொன்னாராம்.

  நந்தி மாடுகளின் வடிவெடுத்து எல்லா உழவர்களுக்கும் உதவத் தொடங்கினாராம். அப்படி சிவன் நந்தியை பூமிக்கு அனுப்பிய நாளே மாட்டுப் பொங்கல் நாள் என்றும் சொல்லப்படுகிறது.

  பழங்காலத்தில் ஒருவன் செல்வந்தனா இல்லையா என்பதை அவன் எத்தனை மாடுகள் வைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை வைத்துத்தான் கணக்கிட்டார்கள். மாடு என்ற சொல்லுக்கே தமிழில் செல்வம் என்ற பொருள் உண்டு.

  மாட்டுப் பொங்கலன்று நடைபெறுவதுதான் ஜல்லிக் கட்டு என்கிற காளைகளை அடக்கும் விளையாட்டு. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து மணிக்கொடி எழுத்தாளர் சி.சு. செல்லப்பா `வாடிவாசல்` என்ற புகழ்பெற்ற ஒரு புதினத்தை எழுதியிருக்கிறார்.

  *பல்லாண்டுகளாக நிலவிய கடும் வறட்சியிலும் ஒவ்வொரு நாளும் விடாமல் பூமியை உழுதுகொண்டிருந்தானாம் ஒரு விவசாயி. வியப்படைந்த கடவுள் வறண்ட நிலத்தை உழுவது ஏன் எனக் கேட்டாராம்.

  கடவுள் அருளால் என்றேனும் மழை பெய்யும், அப்போது நான் உழும் தொழிலை மறக்காதிருக்க வேண்டுமே! அதற்காகத் தான் இப்போதும் உழுது வருகிறேன்!` என பதில் சொன்னானாம் உழவன்.

  கடவுள் தானும் தன் படைப்புத் தொழிலை ஒருபோதும் நிறுத்தக் கூடாது என்ற பாடத்தை அவனிடம் கற்றுக் கொண்டதாகக் கூறி அந்த உழவனுக்கு நன்றி தெரிவித்தாராம். இப்படியும் ஒரு கதை உண்டு. அந்த உழவன் அவ்விதம் பதில் சொன்ன நாள்தான் மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடப்படுகிறது.

  *இந்தக் கொரோனா காலத்தில் காணும் பொங்கலை வழக்கமான முறைப்படி பல்வேறு நண்பர்களையும் உறவினர்களையும் நேரில் சென்று காணும் பொங்கலாக எப்படிக் கொண்டாடுவது? கொஞ்ச காலமாகவே காணும் பொங்கல் என்பது தொலைக்காட்சி காணும் பொங்கல் என்றாகிவிட்டது.

  கொங்கு நாட்டிலும் இன்னும் சில பிரதேசங்களிலும் காணும் பொங்கலைப் பூப்பறிக்கும் நோன்பு என்று கொண்டாடுகிறார்கள். பூளைப்பூ என்ற தும்பைப்போல் மிகச்சிறிய வெள்ளை நிறப் பூவை அன்று பறித்துவந்து வீடுகளில் கட்டுவார்கள். வண்டிகளில் கூட்டம் கூட்டமாகப் போய் பூங்காக்களுக்குச் சென்று பலவிதப் பூக்களைப் பறித்து வருவார்கள். பூங்காக்களில் சேர்ந்து குடும்பம் குடும்பமாக விருந்து சாப்பிடுவார்கள்.

  காணும் பொங்கல் சகோதரர்களின் நலனுக்காக சகோதரிகள் வேண்டிக்கொள்ளும் நாளாகவும் திகழ்கிறது. அதிகாலையில் காகங்களுக்கு விதவிதமான படையல் வைத்து தங்களின் சகோதரர்கள் என்றென்றும் நலமாக இருக்க வேண்டும் எனப் பெண்கள் பிரார்த்தனை செய்துகொள்ளும் தினம் இதுதான்.

  ஆண்டுதோறும் பொங்கலை ஒட்டிய ஜனவரி பதினைந்தாம் நாள் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தை ஒட்டி அன்று நாம் திருக்குறளை முழுமையாக வாசிக்கலாம். உரையைப் படித்து அதன் கருத்துக்களை மனத்தில் யோசிக்கலாம். நம்மால் வள்ளுவர் சொல்லும் கருத்துகளில் எவற்றைப் பின்பற்ற இயலும் எனச் சிந்தித்து முடிவெடுக்கலாம்.

  முக்கியமாக `இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று` என்ற குறளை மட்டுமாவது பின்பற்றலாம். இனிய சொற்கள் மூலம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தொலைபேசி மூலம் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து நாமும் மகிழ்ந்து அவர்களையும் மகிழ்விக்கலாம். அவ்விதத்தில் அன்பு வளர வழிகாட்டும் பண்டிகை பொங்கல் என்பதுதானே உண்மை?
  Next Story
  ×