search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நாதமுனிகள் சென்னை
    X
    நாதமுனிகள் சென்னை

    சென்னை சித்தர்கள்: நாதமுனி சுவாமிகள்-அமைந்தகரை

    நாதமுனி சித்தரின் பெயர் ஆவணங்களில் இடம் பெற்று உள்ளது. பல ஏழைகளை அவர் பணக்காரர் ஆக்கி உள்ளார். என்றாலும் நாதமுனி சித்தரின் நோக்கம் அதுவல்ல.
    நாதமுனி சுவாமிகள் என்றதும் வைணவத்தில் உள்ள மகான்தான் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். ஆனால் இதே பெயரில் பல சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.

    சென்னையிலும் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு நாதமுனி என்ற பெயரில் சித்தர் ஒருவர் வாழ்ந்துள்ளார். அவர் வாழ்ந்த காலத்தில் சென்னையில் இப்போது இருக்கும் நவீன வளர்ச்சிகள் இல்லை. ஆங்காங்கே ஊர்கள் சிதறி கிடந்தன.

    பெரும்பாலும் வனப்பகுதியாகவே சென்னையில் பல பகுதிகளும் காட்சி அளித்தன. அதில் தற்போது அமைந்தகரையில் உருவாகி இருக்கும் நகர் பகுதியும் ஒன்றாகும். அங்கு அந்த காலக்கட்டத்தில் அருமையான மலர் செடிகளுடன் மிகப்பெரிய தோட்டம் இருந்தது.

    அங்குதான் நாதமுனி சித்தர் மிகப்பெரிய மடம் ஒன்றை அமைத்து தவம் செய்து வந்தார். இந்த சித்தர் எந்த ஊரை சேர்ந்தவர், எப்போது சென்னை வந்தார் என்பது போன்ற எந்த தகவல்களும் யாருக்கும் தெரியாது. அவர் தொடர்பான குறிப்புகளும் பெரிய அளவில் ஆவணங்கள் எதிலும் பதிவாகவில்லை.

    என்றாலும் அவர் செய்த சித்தாடல்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக நோய் தீர்ப்பதில் நாதமுனி சித்தர் சிறப்பான இடத்தை பெற்றிருந்தார். இதனால் சென்னை மட்டுமின்றி பல்வேறு புறநகர் கிராமங்களில் இருந்தும் அவரை தேடி வந்து ஏராளமானோர் பலன் பெற்றனர்.

    அந்தவகையில்தான் நாதமுனி சித்தரின் பெயர் ஆவணங்களில் இடம் பெற்று உள்ளது. பல ஏழைகளை அவர் பணக்காரர் ஆக்கி உள்ளார். என்றாலும் நாதமுனி சித்தரின் நோக்கம் அதுவல்ல.

    பொதுவாகவே சித்தர்கள் தங்களை நாடி வரும் ஒவ்வொருவரையும் ஆத்ம ஞானத்தில் மேன்மை படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கவே விரும்புவார்கள். ஆத்ம பலம் பெறும் ஒவ்வொருவருக்கும் ஆத்ம ஞான பயணத்தில் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல சித்தர்களின் வழி காட்டுதல்கள் முதன்மை யானதாக இருக்கும்.

    சித்தர்கள் காட்டும் வழிகள்தான் வித்தியாசமாக இருக்குமே தவிர அவர்கள் தங்களை நாடி வரும் மக்களுக்கு ஆத்ம பலத்தை உருவாக்குவதில் ஒரே மாதிரிதான் உள்ளனர்.

    அந்தவகையில்தான் நாதமுனி சித்தரும் தன்னை நாடிவருபவர்களுக்கு ஆன்மீக பயிற்சி அளித்தார். ஆத்மாவை உணர்வதன் மூலம் விரைவில் முக்தி பெற முடியும் என்பதை தெளிவுபடுத்தினார். ஆனால் அவர் காட்டிய வழியில் சென்றவர்கள் மிக சிலர்தான்.

    அவர் நடத்திய தினசரி வாழ்வியல், சித்தாடல்களைதான் பெரும்பாலானவர்கள் விரும்பினார்கள். அந்த அதிசயங்களிலேயே அவர்கள் திருப்திபட்டு போனார்கள். ஆனால் அதற்காக நாதமுனி சித்தர் எந்த வருத்தமும் அடையவில்லை. தொடர்ந்து தனது ஆன்மீக பணிகளை மேற்கொண்டார்.

    பொதுமக்களை ஆன்மீக பாதையில் திருப்புவதற்காகவே அவர் தனது மடத்தில் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அந்த லிங்கத்திற்கு கம்ப கேஸ்வரர் என்று பெயர். கம்ப என்றால் நடுக்கம் என்று பொருளாகும். பூகம்பம் என்று கூட சொல்வார்கள். இந்த நடுக்கத்தை அல்லது பயத்தை தீர்க்கும் ஈசனாக கம்பகேஸ்வரர் பார்க்கப்பட்டார்.

    பொதுவாக ஒருவருக்கு ஏதாவது ஒரு வி‌ஷயத்தில் அதிக எதிர்பார்ப்போ அல்லது அதிக கோபமோ அல்லது அதிக வருத்தமோ இருந்தால் மனதளவிலும், உடம்பிலும் ஒரு வித படபடப்பு, நடுக்கம் வந்துவிடுகிறது. இந்த படபடப்புதான் அடுத்தடுத்து மன உணர்வுகளை அதிகரிக்க செய்து விடுகிறது.

    இதை தொடக்கத்திலேயே தடுத்துவிட வேண்டும் என்ற யுக்தியை நாதமுனி சித்தர் தனது பக்தர்களுக்கு வலியுறுத்தினார். யார் ஒருவர் மனதளவில் எந்தவொரு வி‌ஷயத்திற் காகவும் நடுக்கமில்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் மனம் எப்போதும் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும்.

    மனதில் சஞ்சலம் இல்லாவிட்டால் அந்த மனம் எப்போதும் உண்மையான ஆத்மார்த்தமான அமைதி யில் ஆழ்ந்து விடும். அந்த சூழ்நிலைக்கு யார் ஒருவர் தன்னை தயார்படுத்தி கொள்கிறார்களோ அவர்களுக்கு வருத்தம், கவலை, மகிழ்ச்சி, எதிர் பார்ப்பு, ஏமாற்றம் போன்ற எதுவுமே துன்புறுத்தாது.

    மனதை இந்த நிலைக்கு கொண்டு செல்லும் போது தியானம் கைகூடும். அது இறைவனை நெருங்க உதவும் என்று நாதமுனி சித்தர் தன்னை நாடிவந்த முக்கிய பக்தர்களுக்கு வலியுறுத்தினார். அதில் அவருக்கு ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்தது.

    இப்படி ஆன்மீக பணி, மருத்துவ பணி செய்த நாதமுனி சித்தர் குறிப்பிட்ட காலத்தில் பரிபூரணம் அடைந்தார். ஆனால் அவர் எப்போது ஜீவசமாதி ஆனார் என்ற குறிப்புகள் இல்லை. அவரது மடத்திலேயே அவர் ஜீவ சமாதி செய்யப்பட்டார். தொடக்க காலங்களில் அவரது சீடர்கள் அந்த ஜீவசமாதியில் தினசரி பூஜைகள் செய்து நன்றாக வழிபாடுகள் செய்து வந்தனர். ஆனால் கால ஓட்டத்தில் இந்த வழிபாடுகளிலும், பூஜைகள் முறைகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டது. அந்த பகுதி நகர்ப்புறமாக மாறியதும் ஜீவ சமாதியிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது.

    தற்போது நாதமுனி சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ள பகுதி மிகப்பெரிய சிவாலயமாக உருவெடுத்து உள்ளது. அந்த பகுதி மக்கள் இந்த சிவாலயத்தை மிகச்சிறப்பாக உருவாக்கி பராமரித்து வருகிறார்கள். அந்த ஆலயத்துக்கு கம்பகேஸ்வரர் ஆலயம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    அந்த கோவில் வளாகத்திலேயே இடது பக்கத்தில் நாதமுனி சுவாமிகளின் தனி சன்னதி அமைந்து உள்ளது. கடந்த சில ஆண்டுகளில்தான் இந்த மாற்றங்கள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன.

    இந்த ஆலயத்தில் தர்மசவர்த்தினி அம்பாள் சன்னதியும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதை தவிர ஒரு சிவாலயத்துக்குரிய அனைத்து சன்னதிகளும் அந்த ஆலயத்தில் உள்ளன.

    மிகப்பெரிய அர்த்த மண்டபமும் கட்டி உள்ளனர். நாதமுனி சித்தரை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் அந்த மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கு ஏற்ற வசதிகள் உள்ளது.

    இந்த ஆலயத்தில் நாதமுனி சித்தரின் அருள் அலைகள் இப்போதும் அதிக அளவில் இருப்பதை சித்தர் அருளாளர்கள் உணர்ந்து உள்ளனர்.

    சென்னையில் பெரும் பாலானவர்களுக்கு இப்படி ஒரு சித்தர் வாழ்ந்தார் என்பதே தெரியாமல் உள்ளது. அதிலும் அவர் தனது ஜீவ சமாதியில் தற்போதும் அருள்பாலித்து வருகிறார் என்ற நிதர்சனமும் பலருக்கும் தெரியாமல் உள்ளது.

    கம்பகேஸ்வரர் ஆலயத்துக்குள் சென்றாலே ஒருவித அமைதியை உணர முடிகிறது. இந்த அமைதியின் பின்னால் நாதமுனி சித்தரின் அருளாசிகள் நிரம்பி இருப்பதாக சொல்கிறார்கள்.

    வாழும் காலத்தில் மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நாதமுனி சித்தர் ஒவ்வொரு நாளும் வலியுறுத்தி வந்தார். அதற்கான பயிற்சிகளையே அவர் அதிகம் கொடுத்தார். ஜீவ சமாதி ஆன பிறகும் அந்த நோக்கிலேயே அவரது அதிர்வு அருள் அலைகள் அமைந்து உள்ளன.

    எனவே கம்பகேஸ்வரர் ஆலயத்தில் நாதமுனி சித்தரை முறையாக தியானித்து வழிபட்டால் மனதில் அமைதி பெற முடியும். அந்த பகுதிக்கு சென்று நாதமுனி சித்தர் ஜீவ சமாதி எங்கு இருக்கிறது என்று கேட்டால் யாருக்குமே தெரியாது. கம்பகேஸ்வரர் ஆலயம் என்று சொன்னால்தான் தெரிகிறது.

    இந்த ஆலயம் பற்றி சந்தோஷ்குமார் என்பவர் கூறுகையில், “இங்கு ஜீவ சமாதி குரு பூஜைகள் ஒரு காலத்தில் மிக விமரிசையாக நடந்து உள்ளன. கருவறையில் சிறிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. நாதமுனிஸ்வரர் என்ற பெயரும் எழுதப்பட்டு இருந்தது.

    கோவிலை புதுப்பித் தவர்கள் பழைய சிவ லிங்கத்தை கருவறைக்குள் ஒரு பகுதிக்குள் வைத்து விட்டு பழைய இடத்தில் பெரியதாக ஒரு புதிய சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து உள்ளனர். மூலவரின் பெயரையும் நாதமுனிஸ்வரர் என்று இருந்ததை கம்பகேஸ்வரர் என்று மாற்றி விட்டனர்.

    இதனால் இந்த ஆலயம் மிகப்பெரிய சிவாலயமாக மாறி உள்ளது. கோவில் வளாகத்துக்குள் கருவறைக்கு எதிரில் ஒரு மரத்தடியில் நாதமுனி சுவாமிகளின் சிலை உள்ளது. அதுவும் தனி சன்னதியாக பராமரிக்கப்படுகிறது” என்று கூறினார்.

    இந்த ஜீவ சமாதிக்கு சென்று எத்தனையோ பேர் பலன் பெற்று உள்ளனர். குறிப்பாக மனதில் நிம்மதி இல்லை என்று அலைபவர்களுக்கு இந்த ஜீவ சமாதியில் பலன் கிடைக்கிறது.

    காலை 7 மணி முதல் 10 மணி வரையும், பிற்பகலில் 5.30 மணி முதல் 8.30 மணி வரையும் இந்த ஆலயம் திறந்திருக்கிறது. ஆன்மீகத்தில் மேன்மை பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் நாதமுனி சித்தரை இங்கு சென்று தரிசனம் செய்யலாம்.

    பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக செல்பவர்கள் அமைந்த கரை, பச்சையப்பன் கல்லூரி அருகே இடது புறம் திரும்பும் சாலை வழியாக சென்றால் கடைசியில் இடது பக்கமாகவும், வலது பக்கமாகவும் பாதைகள் பிரியும். அதில் வலது பக்க பாதைக்கு திரும்பினால் கம்பகேஸ்வரர் ஆலயத்தை பார்க்கலாம்.

    சூளைமேடு பகுதியில் இருந்து வருபவர்கள் கூவம் ஆற்று பாலத்தை கடந்து வந்தால் கம்பகேஸ்வரர் ஆலயத்துக்கு மிக எளிதாக செல்ல முடியும்.
    Next Story
    ×