என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  இலந்தை
  X
  இலந்தை

  இயற்கைத் தரும் இனிய வாழ்வு - கர்ப்பிணிகளுக்கு ஊட்டம் தரும் இலந்தை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இயற்கைத் தரும் இனிய வாழ்வு எனும் தலைப்பில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டம் தரும் இலந்தை குறித்து போப்பு அவர்கள் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
  காட்டு விளைச்சலில் மற்றொரு கண்டுகொள்ளாத பழம் இலந்தை. புதர்ச்செடியாக மானாவரிக் காடுகளில், ஓடைக் கரைகளில் தானாக முளைத்து, வளர்ந்து மஞ்சளும் வெள்ளையும் கலந்த நிறத்தில் பூக்கள் தெறிப்பது போல மலர்ந்திருக்கும். காய்கள் நன்றாக உருண்டு திரண்டுக் கெட்டியாக இருக்கும். நல்ல வெயிலின் வெப்பத்தைக் குடித்து சூரியப்பழமான இலந்தை எண்ணையில் முக்கி எடுத்தது போல அத்தனை மினுமினுப்பாக இருக்கும். இந்த அழகே இலந்தையை முன் பின் பார்த்திராதவர்களைக் கூட அள்ளித் தின்னச் சொல்லும்.

  முக்கால் பழமாக இருக்கும் பொழுது இளந்துவர்ப்புடன் கூடிய இனிப்பு ஒரு சுவை. இந்த நிலையில் அதிகம் சாப்பிட முடியாது. நன்றாகச் சிவந்து பழுத்த நிலையில் புளிப்பும், இனிப்பும் சம அளவில் கலந்த வண்ணம் இன்னொரு சுவை. நன்றாகக் கனிந்து பழுத்த கிழவியின் கன்னம் போன்ற நிலையை எட்டிய பழங்கள் மனதைக் கவரும் புளிப்பு வாசத்துடன் அதே மினுமினுப்பு குறையாமல் கூழ் போன்ற சதையுடன் இருக்கும். புளிப்பு நாக்கைத் துளைக்கும் அளவிற்கு இருந்தாலும் அதையும் மீறி தின்னத் தூண்டும். ஆவல் அடங்காது.

  இன்றும் கால்படிப் பத்து ரூபாய்க்குப் பெரு நகரங்களில் விற்பனைக்குக் கிடைக்கத்தான் செய்கிறது. காட்டுப் பழமாகவே இருந்தாலும் அணாப் பைசாவுக்கு மரியாதை இருந்த காலத்திலேயே ”எட்டி நின்னா எட்டுப் பைசா” ”தொட்டுத் தந்தா பத்துப் பைசா”பாடல் பெற்றப் பழமாக இருந்தது. இது காட்டுப் பழமே என்றாலும் அந்தக் காலந்தொட்டு இலந்தைக்கு வணிக மதிப்பு உண்டு. காரணம் அதில் உள்ள சத்து மதிப்பே ஆகும்.

  கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் சி என அத்தனை விதமான சத்துக்களும் நிறைந்தது இலந்தைப்பழம். ”தேனாட்டம் இனிக்கும் பயொம்” என்று எல்.ஆர் ஈஸ்வரி அம்மாள் புகழ்ந்த இந்தப் பழம் எந்த வயதினரையும் விட்டு வைப்பதில்லை. தேனாட்டம் இனித்தாலும் அதில் உள்ள சர்க்கரைச் சத்து 17% சதவீதம் என்பதால் நீரிழிவுக்காரர்கள் அஞ்சாமல் நெருங்கலாம் இலந்தைப் பழத்தை. அதில் உள்ள புளிப்பு மற்ற உணவின் புளிப்புகளைப் போல அமிலத் தன்மையை உடலில் அதிகரிப்பதில்லை. மாறாக அதன் சதைப் பற்று தோலுடன் ஒட்டிக் கொண்டிருப்பதால் இயற்கையான காரத்தன்மையும் கொண்டுள்ளது. ஆகையால் அமிலத்தை முறிக்கும் ஆற்றல் இயல்பாகவே இலந்தையில் இருக்கிறது.

  நன்றாகப் பழுத்த இலந்தையை அல்லது வாடிப்போன இலந்தைப் பழங்களை நீரில் ஊறவிட்டு நன்றாகக் கையால் பிசைந்தால் பசைத் தன்மையுடன் கூடிய கூழ் வடிவில் சாறு கிடைக்கும். இந்தச் சாற்றில் இழை இழையாக மென்னரம்பு ஓடுவதைக் காண முடியும். இந்த நரம்புகள் மூளைக்கு ஆற்றல் வழங்குகின்றன.

  மூளை நரம்புகளுக்கு மட்டுமல்ல உடலில் ஓடும் மொத்த நரம்புத் தொகுதிகளுக்கும் ஆற்றலை வழங்குகிறது. அதனால் முதுகுத் தண்டு வலி உள்ளவர்களுக்கும் இலந்தை நல்ல நிவாரணியாகச் செயல்படுகிறது. சிறு பெருங்குடல்களுக்கு ஆற்றலை வழங்குவதால் நல்ல பசியைத் தூண்டவும் செய்கிறது. எனவே பசி மந்தித்த நிலையில் உள்ளவர்களும் இலந்தைப் பழத்தைத் தேடி உண்ணலாம்.

  ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். எந்தத் தின் பொருளில் இயற்கையான தீஞ்சுவை இருக்கிறதோ அது அதிக ஆற்றலை வழங்குகிறது என்று பொருள். ஒரு உணவுப் பொருளில் செயற்கையாக ஏற்றப்பட்ட அதீத சுவையானது சிலரது உடலுக்கு ஊக்கம் அளிக்கும் என்றாலும் ஏதேனும் உடல் உபாதை அல்லது சிக்கல் உள்ளவர்களுக்கு அது எதிர் விளைவுகளைக் கொடுக்கும். ஆனால் இயற்கையான தீஞ்சுவை உள்ள பழங்கள் நமக்குப் பிடித்தமான நேரத்தில் எடுத்துக் கொள்கிற பொழுது நன்மையே செய்கிறது.

  இலந்தைப் பழத்தைக் கண்ணால் பார்த்தால் போதும் அது எந்த வயதினரையும் எளிதில் ஈர்த்து விடும். அப்படியானால் எந்த வயதினருக்கும் அதன் நுண் சத்துக்கள் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் உண்பதற்கு முன் வயிற்றில் வேறெந்த உணவும் இருக்கவும் கூடாது. அதேபோல் உண்ட பின்னர் சுமார் ஒருமணி நேரத்திற்கு வேறெதும் உண்ணக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது. ஆசை அடங்காமல் இலந்தைப் பழத்தை உண்டு விட்டு நாக்கில் ஏற்பட்ட துளைப்பது போன்ற உணர்வைத் தணிக்கத் தண்ணீரைக் குடித்தால் நின்று நிதானமாகச் செரிக்க வேண்டியப் பழக்கூழானது வயிற்றால் ஓடி குடல்களைத் தளர்த்தி விடும். மறுபடியும் சில நாட்களுக்கு வேறு உணவே உண்ண இயலாத நிலை ஏற்பட்டு விடும்.

  எனவே தீஞ்சுவை மிகுந்த இலந்தைப் பழத்தை அளவோடு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் புறச் சதையும் உள்ளுறுப்புகளும் வலுப்பெற வேண்டிய ஏழு வயதில் இருந்து 18 வயதிற்கு இடைப்பட்ட பருவத்தில் இலந்தைப் பழத்தை எடுத்துக் கொண்டால் அது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

  அதனால் தான் அந்தக் காலங்களில் பள்ளி வாயிலை ஒட்டி வேறு உடலுழைப்பு செலுத்த முடியாத வயது முதிர்ந்த பெரியவர்கள் இலந்தைப் பழங்களை சிறுவர்களுக்காக விற்றுக் கொண்டிருந்தார்கள். ஆண் பெண் என இருபால் பிள்ளைகளும் காகிதப் பொட்டலங்களில் நாலணாவுக்கும் எட்டணாவுக்கும் இலந்தைப் பழத்தை வாங்கி உப்பு மிளகாய்த் தூள் தூவி உணக்க கண்களில் நீர் வடிய சுவைத்துக் கொண்டிருந்தார்கள். இயற்கையான சுவை கூட்டிகள் நாவின் சுவை மொட்டுக்களைத் தீட்டி சுரணையை மெருகேற்றிக் கொடுத்து வந்தன.

  சுவை மொட்டுகள் இயற்கையான உணர்வுத் தூண்டலுக்கு உட்படும் பொழுது உள் சுரப்பிகளும் தூண்டுதல் பெறுகின்றன. இத்தகைய தூண்டல் இன்றைய உணவிலும் தின்பண்டங்களிலும் கிடைக்கப் பெறாமையால் தான் நம் நவீன பளபளப்பான காகிதங்களில் சுற்றப்பட்ட ஆலைத் தயாரிப்புப் பண்டங்களுக்கு அடிமையாக இருக்கின்றனர்.

  பிள்ளைகள் இயற்கையான தூண்டலுக்கு ஆட்படாத பொழுது உடலில் இயல்பான வளர்ச்சிகள் மங்கிப் போகின்றன. அதேநேரத்தில் செயற்கையான சுவையூட்டிகள் வளரும் வயதில் சுரப்பிகளை ஏறுக்குமாறாகத் தூண்டி விடுவதால் அதீத சதை வளர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். இந்த சீரற்ற தூண்டல்கள் உண்ணாமலே சதையைப் பெருக்கச் செய்து அந்த வயதில் பெற்றிருக்க வேண்டிய மென்மையும் பதத் தன்மையும் கூடிய தோலுக்குப் பதிலாக சொர சொரப்பான கெட்டியான வரி வரியான கறுமையுடன் கூடிய தோலுடன் இருக்கிறார்கள். இந்த இயல்புக்கு மாறான தோலின் தன்மையைச் சீராக்க மீண்டும் தோல் நிபுணர்களை நாடுவதிலோ அல்லது சோப்புகளை மாற்றி மாற்றிக் குளிப்பதிலோ ஒரு பலனும் இல்லை. இதற்கு ஒரே தீர்வு செயற்கைப் பண்டங்களைத் தவிர்த்து இயற்கையான உணவுகளைக் குறிப்பாகப் பழங்களை முடிந்த மட்டிலும் அதிகமாக எடுத்துக் கொள்வதே ஆகும்.

  செயற்கைப் பண்டங்கள் உள் சுரப்புகளை தாறுமாறாகத் தூண்டுவதால் புறத் தோற்றமும், ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதோடு இயல்புக்கு மாறான கோபம், சலிப்பு, எரிச்சல் போன்ற உணர்வுகளையும் அதீதமாக வெளிப்படுத்தச் செய்கிறது. இது குணக்கேடு அல்ல. உடலின் இயல்பிற்கு மாறான வெளிப்பாடு என்றே பெற்றோர் உணர வேண்டும். ஒரு மனிதனின் அவ்வப்போதைய வெளிப்பாட்டையும், வாழ்க்கையை வழி நடத்தும் ஆளுகையையும் தீர்மானிப்பது அவன் உண்ணும் உணவு தான் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஒரு சாமான்ய மனிதனை வடிவமைப்பதில் உணவும் முக்கிய காரணியாக இருக்கிறது.

  நாம் இலந்தைப் பழத்திற்கு வருவோம். இலந்தையில் நிறைய வகை உண்டு என்றாலும் குறிப்பாக இருப்பது இரண்டு பெருவகைகளே ஆகும். ஒன்று காட்டு இலந்தை எனப்படும் சிற்றின வகையாகும். இதுதான் காலங்காலமாக பரவலாக அறியப்பட்டது. அடுத்தது பெரு இலந்தை இதனை சீமை இலந்தை என்றும் சொல்வார்கள். சீமை இலந்தைக்கு காட்டு இலந்தை அளவிற்குத் தீஞ்சுவை இல்லை. எனவே தொடர்ந்து உண்பதில் சலிப்பு ஏற்படுத்தும்.

  காட்டு இலந்தை தான் வெறுமே பழமாக உண்ணத் தகுந்தாக மட்டும் இல்லாமல் பலவேறு வடிவங்களிலும் இதனை மக்கள் பயன்படுத்துகின்றனர். கனிவதற்கு முந்தைய நிலையில் உள்ள சிவப்பு நிறத்தை எட்டாத இலந்தை இரத்த உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக செங்காயின் துவர்ப்புச் சுவை. தமிழகத்தில் இலந்தை வடை எங்கும் பரவலாகக் காணப்படும் ஒன்றுதான். இதனை காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய், வெல்லம், உப்பு, பெருங்காயம் போட்டு இலந்தையின் விதை உடைபடாமல் இடித்துத் தட்டிக் காய வைத்துத் தயார் செய்வது. இயற்கையான முறையில் பதப்படுத்தும் இந்த இலந்தை வடை பழுத்த இலந்தைக் கனிக்குரிய அத்தனை நன்மைகளையும் நமக்கு வழங்க வல்லது. தற்காலத்தில் இலந்தை ஜாம் என்று பாக்கெட்டில் விற்கிறார்கள். இது முழுமையாக இலந்தைப் பழத்தைக் கொண்டு தயாரிக்கிறார்களா இல்லையா என்பது தெரியாத போதிலும் பிற பாக்கெட் சிறு பண்டங்களை விட மேலானது என்பதை அதன் சுவை உறுதிப்படுத்துகிறது.

  சீனாவைத் தாயகமாகக் கொண்ட இலந்தை இன்று வட தென் அமெரிக்காவிலும் பரவலாக வணிக ரீதியாக விளைவிக்கப்படுகிறது. உலகமெங்கும் சுமார் 4000 ஆண்டுகளாக இலந்தையை மக்கள் சுவைத்து வருகிறார்கள். வியட்நாம், கொரியா, தாய்லாந்து, சீனா ஆகிய கிழக்காசிய நாடுகளில் உலர்ந்த இலந்தைப் பழத்தைக் கொண்டு தேநீர் தயாரிக்கிறார்கள். இது வழக்கமான (பாலில்லாத) டீயை விட நல்ல சுறுசுறுப்பைத் தருவதால் கிராமப் புறங்களில் மட்டுமல்லாது நகர்ப் புறங்களிலும் விரும்பி அருந்தக் கூடியதாக இருக்கிறது. இலந்தையை ஆங்கிலத்தில் ஜூஜூபி என்பார்கள். ஆனால் ஜூஜூபி என்று சொல்லும் அளவிற்கு பழம் சிறியதாக இருந்தாலும்

  இந்தியாவில் அஸாம், வங்காள, பீகார் மாநிலங்களில் நேரடியாகப் பழங்களாக உண்பதோடு ஊறுகாயாகவும் தயாரித்து வைத்துக் கொள்கிறார்கள். குழம்பிலும் இலந்தையைப் பயன்படுத்துகிறார்கள். நான் உணவகம் நடத்திக் கொண்டிருந்த பொழுது புளிக்குப் பதிலாக இலந்தைப் பழத்தை ஊற வைத்துப் பிசைந்து அவ்வப்போது ரசம் தயாரித்து பரிமாறுவது உண்டு. அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

  பெண்கள் கருவுற்ற காலத்தில் பல்வேறு விதமான நுண் சத்துக்களை உண்ண வேண்டியது அவசியமாக இருக்கிறது. இச்சத்துத் தேவைகளை வழக்கமான உணவுகள் மட்டுமே வழங்கி விட முடியாது. அதனால் தான் அவர்கள் சாம்பல் சுவைப்பதும், மண்ணைத் தின்பதும் நடக்கிறது. மாங்காய், நெல்லிக்காய் போன்ற அதீத சுவை தரும் காய்களை கருவுற்ற மாதர் உண்பதைக் கண்டிருப்போம். அத்தகைய சுள்ளென்று உறைக்கும் சுவைகளே அவர்தம் சத்துத் தேவைகளை ஈடுசெய்ய முடியும். இலந்தைப் பழமும், இலந்தை வடை, இலந்தை ஊறுகாய் போன்றவை கருவுற்ற மாதர்களுக்குரிய சத்துத் தேவைகளை ஈடுசெய்ய வல்லது. இத்தகைய தின்பண்டங்கள் கிடைத்தால் கருவுற்ற பெண்களின் சுரப்புகளில் சமநிலை ஏற்படும். இரத்த உற்பத்தி சீராக இருக்கும். கருவுற்ற மாதர்க்குத் தேவையான மாறுபட்ட சுவைகளை ஈடு செய்யத் தான் வளைகாப்பு நடத்தி ஏழு வகையான ஒன்பது வகையான சுவை உணவுகளைச் சமைத்து அளிப்பதை சடங்கு உபச்சாரமாகச் செய்கிறோம்.

  இலந்தைப் பழத்தை ஊற வைத்துக் கூழ் எடுத்து சோற்றில் கலந்து சமைப்பதும் கூட அவர்களது சத்துத் தேவையை ஈடுசெய்யும் ஒன்றாக இருக்கலாம்.

  இலந்தைப் பழம் மட்டும் அல்லாமல் இலந்தைச் செடியின் இலையும் மருத்துவப் பண்பு மிக்கதென்று நாட்டு மருத்துவர்கள் கூறுகின்றனர். கருத்தங்காதப் பெண்டிருக்கு பிடியளவு இலந்தையை எடுத்து அரைத்து பாலில் கலந்து கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்கிறார்கள். அதையும் உதிரப் போக்கு நின்ற பிறகு மூன்றுநாட்கள் கழித்து வெறும் வயிற்றில் அருந்த நல்ல பலன் கிடைக்கும்.

  இப்போது வணிகக் கவனம் பெற்றுள்ள நாவல் பழம் குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்.
  Next Story
  ×