என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  ஓம் மந்திரத்தை உச்சரித்து ஒமைக்ரானை விரட்டலாம்
  X
  ஓம் மந்திரத்தை உச்சரித்து ஒமைக்ரானை விரட்டலாம்

  ஆரோக்கியம் நம் கையில் - ஓம் மந்திரத்தை உச்சரித்து ஒமைக்ரானை விரட்டலாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓம் மந்திரத்தை உச்சரித்து ஒமைக்ரானை விரட்டலாம் என யோகக் கலைமாமணி பி.கிருஷ்ணன் பாலாஜி கூறியுள்ளார்.
  இப்பொழுதுதான் நாம் கொரோனாவில் இருந்து விடுதலை அடைந்து வருகின்றோம். இந்த நேரத்தில் ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதாக செய்தியை அறிந்து மக்கள் சற்று மனக்கலக்கம் அடையும் நேரமிது. இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் தைரியமாக வாழும் யோக நெறிமுறைகளை பற்றி சற்று சிந்திப்போம்.

  நமது நாட்டு நலன் கருதி சமுதாய விழிப்புணர்வுடன் அரசு, சுகாதாரத்துறை கூறும் நெறிமுறைகளை சரியாகக் கடைபிடிப் போம். ஆனால் எந்த ஒரு மனிதருக்கும் பயம் என்ற உணர்வு அதிகமாகாமல் வாழும் நெறிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதுவே யோக முறையாகும்.

  பதஞ்சலி மகரிஷி யோகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவரது யோகம் அஷ்டாங்க யோகமாகும். எட்டு படிகளைக் கொண்டது. இதில் மனித உடல் அமைப்பு பற்றியும், இதனுள் மறைந்துள்ள இயற்கை ஆற்றல், சக்தி பற்றியும் இந்த அற்புத சக்தியை எப்படி பயன்படுத்துவது, எப்படி அறிவது என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார்.

  மனித உடல் பல மில்லியன் செல்களால் ஆனது, இந்த உடல் பஞ்ச பூத தன்மையை கொண்டது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூத தன்மைகள் உள்ளன. இந்த உடலில் உள்ள எல்லா உறுப்புக்களும் எப்படி இயங்குகின்றது. இந்த உடம்பிற்குள் ஒரு அற்புத இயற்கை சக்தி (உயிர் ஆற்றல்) உள்ளது. அதனையே நாம் கடவுள், இறைவன் என்று அழைக்கின்றோம். இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன. ஆனால் பதஞ்சலி மகரிஷி தனது யோக சூத்திரத்தில் இறைவனின் பெயர் என்ன என்றும், இறைவனின் ஒலி (சப்தம்) என்ன என்றும் தெளிவாக விளக்கியுள்ளார்.

  இந்த உலகமே “ஓம்“ என்ற ஒலியில் அதிர்வலையில் இயங்குகின்றது. இதுவே இறைவனின் பெயர் என்கிறார். மனித உடலிலும் “ஓம்“ என்ற ஒலி அதிர்வலைகளுடன் இறைவன் குடி கொண்டுள்ளார். உங்களது இரு காதுகளையும் கட்டை விரலால் அடைத்து. கண்களை மூடி ஒரு நிமிடம் இருங்கள். ஒரு அற்புதமான ஒலியை “ஓம்“ என்ற ஒலியை வண்டின் ரீங்காரம் போல் கேட்கலாம். இதுவே இறைவனின் பெயர் என்கிறார்.

  இந்த உலகமே ஒரு அற்புத ஒலியால் இயங்கி கொண்டிருக்கிறது. அந்த ஒலி நம்முள்ளும் சதா சர்வ காலமும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அதுதான் “ஓம்“ என்ற பிரணவ மந்திரம்.

  இந்த ஓம் என்ற சொல்லுக்கு மட்டும் இவ்வளவு பெரிய ஆற்றல் எப்படியிருக்கின்றது. ஓம் என்ற சொல்லை பிரித்தால் அ + உ + ம் = ஓம். எல்லா மொழியின் முதல் எழுத்து “அ” என்ற எழுத்தாகும். நாம் வாயைத் திறந்தவுடன் உண்டாகும் ஒலி “அ” ஆகும். இது தொண்டையின் அடியிலிருந்து தோன்றுகின்றது.

  “அ” என்று தொடங்கும் ஒலி வாய் முழுவதும் பரவி உதட்டில் வந்து முடிவதற்கு முன் தோன்றுகின்ற உயிர் ஒலி “உ” என்பதாகும்.

  நாம் உதட்டை மூடும் பொழுது உண்டாகின்ற ஒலி “ம்“ ஆகும். அ,உ,ம் = ஓம். உலகில் உள்ள எல்லா ஒலிகளும் இந்த மூன்று எழுத்தின் ஒலிகளுக்குள் அடக்கம்.

  இந்த ஓம் என்ற ஒலி நமது உடலில் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. அதிலிருந்து அதிர்வலைகள் உடலின் இயக்கத்திற்கு பரவிக் கொண்டே இருக் கின்றது. இதுதான் அனாகத ஒலி ஆகும். அழிக்க முடியாத ஒலி என்று பெயர். இதை பிரணவ ஒலி என்று கூறுவர். பிரணவம் என்ற சொல் நமது பிராணனுடன் தொடர்பு கொண்டுள்ளது. பிராணன் எப்பொழுதும் உடலை, உயிருடன் வைத்துக் கொண்டிருக்கின்றது.

  இந்த பிராணன், மனித உடலில் உயிர் தங்கி இயங்குவதற்குறிய அதிர்வு அலைகளை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றது. இந்த ஓம்கார ஒலி அலைகள் உயிர் உள்ள பொருட் களிலும் உயிரற்ற பொருட்கள், அசையா பொருட்களிலும், கல்லினுள்ளும் இருக்கிறது. எனவே கல்லிற்குள் தேரையும் உயிருடன் இருக்கின்றது.

  கல்லில் பிராணன் தூங்குகின்றது. தாவரங்களில் அது புரண்டு கொண்டு இருக்கிறது. விலங்குகளில் கனவு காண்கின்றது. மனிதர்களில் விழித்து எழுகிறது. மாமனிதர்களிடம் மட்டும் பிராணன் துடிப்புடன் செயல்படுகின்றது என்று யோகத் தந்தை பதஞ்சலி மகரிஷி அருள்கின்றார்.

  ஓம் மந்திரத்தை முறையாக பொருள் உணர்ந்து காலை/மாலை உச்சரித்தால் அதன் அதிர்வலைகள் மனிதனின் ஒவ்வொரு செல்லிலும் புத்துணர்வை அளிக்கும். ஒவ்வொரு உறுப்பிற்கும், குறிப்பாக ராஜ உறுப்பான இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீரகப்பை, நல்ல சக்தி பெற்று இயங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். மனோ பயம், படபடப்பு, மன அழுத்தம், டென்‌ஷன், கவலை நீக்கும். 

  மந்திரம்

  மனோ தைரியம் கிடைக்கும். ஒவ்வொரு செல்களும் “ஓம்“ மந்திரத்தின் மூலம் மிகச் சிறப்பாக இயங்கும். எந்த ஒரு தொற்றுக் கிருமியும் தாக்காமல் வாழலாம். இது ஒவ்வொருவருக்கும் ஒரு கவசமாக அமைகின்றது.

  விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். கை பெருவிரலால் காதை நன்கு அடைக்கவும். மற்ற விரல்களை படத்தில் உள்ளதுபோல் வைக்கவும். காதை மட்டும் நன்கு அடைக்கவும்.

  கண்களை மூடி ஐந்து நிமிடங்கள் இருக்கவும். ஓம்கார ஓசை வண்டின் ரீங்காரம் போல் ஒலிப்பதை உணர முடியும். பின் மெதுவாக கைகளை சாதாரண நிலைக்கு கொண்டு வரவும்.

  உடன் கைகளை சின் முத்திரையில் வைக்கவும். பெருவிரல், ஆள்காட்டி விரல் நுனிகளை இணைக்கவும். கண்களை மூடி “ஓ” என்று சத்தமாக ஒலியை எழுப்பவும், அப்பொழுது உங்கள் உணர்வு முதுகுத் தண்டின் அடிப்பகுதியிலிருந்து பிராணன் மேல் நோக்கி வருவதாக “ஓ” என்று கூறி முடிந்த அளவு கூறி “ம்“ என்று சொல்லும் பொழுது உங்களது உணர்வு கழுத்து பின் பகுதியிலிருந்து உச்சந்தலை நெற்றிப்பொட்டு வழியாக இதயத்தில் “ம்“ என்று கூறி முடிக்கவும். இவ்வாறு ஒரு முறை கூறி ஒரு பத்து வினாடிகள் கழித்து மீண்டும் ஒரு முறை உச்சரிக்கவும். இவ்வாறு 12 முறை உச்சரிக்கவும். இது சிரமமாக இருந்தால் “ஓம்“ என்று ஆழமாக முடிந்த அளவு “ஓ” என்று கூறி “ம்“ என்று கூறவும் 12 முறைகள். பின் இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும் 5 நிமிடங்கள்.

  ஓம் என்ற மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நம் மனதில் உள்ள தீய அனுபவப்பதிவுகள் அழிக்கப்படுகின்றது. ஓம் மந்திரம் உச்சரிப்பதால் நல்லவரின் தொடர்பு கிடைக்கின்றது. இந்த உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள ஆத்மாவின் தொடர்பு கிடைக்கின்றது. உடல் முழுவதும் புத்துணர்வு ஓம் மந்திர அதிர்வலை மூலம் கிடைக்கின்றது.

  விரிப்பில் ஒரு மேட் விரித்து அமரவும். படத்தில் உள்ளதுபோல் ஒவ்வொரு காலாக மடியில் போடவும். கைகளை சின் முத்திரையில் வைக்கவும். கண் களை மூடி “ஓம்“ என்ற மந்திரத்தை சத்தமாக 12 முறைகள் உச்சரிக்கவும். பின் சாதாரண மூச்சில் மூச்சை மட்டும் கவனிக்கவும் இரண்டு நிமிடங்கள்.

  இதே போல் படத்தில் உள்ளது போல் வஜ்ராசன மிட்டு அதில் ஓம் மந்திரத்தை 12 முறைகள் உச்சரிக்கவும்.

  படத்தில் உள்ளதுபோல் ஒரு காலை மட்டும் தொடையில் வைத்து கைகளை சின் முத்திரையில் வைத்து “ஓம்“ மந்திரத்தை 12 முறைகள் உச்சரிக்கவும்.

  பத்மாசனம், வஜ்ராசனம், அர்த்த பத்மாசனம் போட முடியாதவர்கள் சுகாசனத்தில் அமர்ந்து “ஓம்“ மந்திரத்தை 12 முறைகள் உச்சரிக்கவும். ஏதாவது ஒரு ஆசனத்தில் அமர்ந்து ஓம் மந்திரத்தை காலை / மாலை உச்சரிக்கவும்.

  சுகாசனம்

  அவ்வையார் தனது அகவலில் “ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பது காட்டி” என்று கூறுவார். இந்த உடலில் ஒன்பது ஓட்டை, அதனை வாயில் என்கிறார். இந்த ஒன்பது வாயிலையும் ஒரு மந்திரத்தால் அடைப்பதுங் காட்டி “ஓம்“ என்ற மந்திரம் ஒன்பது வாயிலையும் அடைத்து தனக்குள் உள்ள ஆற்றலை வெளிப்படுத்தும் அற்புத மந்திரம் என்கிறார். ஐம்புலனையும் அடக்கி ஆனந்தம் அளிக்கும், ஆரோக்கியம் அளிக்கும் அற்புத மந்திரம் “ஓம்“ என்கிறார்.

  உங்கள் இல்லத்தில் தினம் வீட்டில் உள்ளவர்கள் காலை/மாலை அமர்ந்து பத்து நிமிடங்கள் “ஓம்“ மந்திரத்தை சத்தமாக உச்சரித்தால் அந்த இல்லத்தில் நல்ல அதிர் வலைகள் இல்லத்திற்கே நன்மை செய்யும். உச்சரிப்பவர்கள் ஒவ்வொருவர் உடலிலும் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.

  நம்பிக்கையுடன் ஒவ்வொருவரும் “ஓம்“ மந்திரத்தை உச்சரியுங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்வும் வளமாகும். நாட்டில் நல்ல நேர்முகமான அதிர்வலைகள் மலரும்.

  இன்று ஒவ்வொரு மனிதர்களுக்கும் தேவை தன்னம்பிக்கை, நோய் எதிர்ப்பாற்றல், நுரையீரலின் சிறப்பு இயக்கம், இவை அனைத்தும் தனக்குள் இருக்கும் ஓம்கார ஒலியின் மூலம் கிடைக்கும். அதனை முறையாக உச்சரிக்கும் பொழுது தன்னை உணரலாம். தனக்குள் உள்ள அற்புத சக்தியின் மூலம் பயமின்றி வளமாக வாழலாம்.

  யோகக் கலைமாமணி
  பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)6369940440
  Next Story
  ×