search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரபு-குஷ்பு
    X
    பிரபு-குஷ்பு

    குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - என் வளர்ச்சிக்கு உதவிய பிரபு

    நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    தமிழகத்துக்கு வந்து பிரபு சாரை சந்தித்தது, அவர் மூலம் தமிழ் திரை உலக பயணத்துக்கான வாய்ப்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடிய ஜோடிகளாக திரைவானில் ஜொலித்தது எல்லாமே என் வாழ்க்கையின் அழகான தருணங்கள் என்பதே உண்மை.

    தர்மத்தின் தலைவன் படத்தில் பிரபு சார் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்ற ஒரு விதமான பதற்றம் இருந்தது. ஏனென்றால் அப்போது நான் சின்ன பெண்.  குறிப்பாக தமிழ் தெரியாது.

    படப்பிடிப்பு தொடங்கியது. அந்த படத்தில் ரஜினி சாரும் சுகாசினி மேடமும் ஜோடி. நான் படப்பிடிப்பு தளத்தில் யாருடனும் பேசமாட்டேன். காட்சி படமாக்கப்பட்டதும் செட்டில் எங்காவது ஓரு ஓரத்தில் தனியாக அமர்ந்து இருப்பேன். சுகாசினி மேடம் சீனியர் ஆர்ட்டிஸ்ட். எனவே அவருடன் பேசவும் தயக்கம். அவருடைய ரோலும் கிட்டத்தட்ட ‘டீச்சர்’ மாதிரி. எனவே நானும் மரியாதையுடன் அவரிடம் இருந்து விலகி இருப்பேன். பொதுவாகவே அவரும் அதிகமாக பேச மாட்டார்.

    நான் ஒதுங்கி ஒதுங்கி இருந்ததை பார்த்து என் அருகில் வந்து எனக்கு தைரியமும், ஊக்கமும் தந்தவர் பிரபு சார். அவருக்கு இந்தி தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் என்னுடன் நன்றாக பேசுவார். ஏன் இப்படி ஒதுங்கி இருக்கிறாய். எல்லோருடனும் சகஜமாக பேசி பழக வேண்டும். செட்டில் அப்படி கலந்திருந்தால் மட்டும் தான் உனக்கு தயக்கம் போகும் என்பார்.

    அவர் கொடுத்த ஊக்கம் தான் என்னை முன்னுக்கு கொண்டுவந்தது. மிகப்பெரிய திரை உலக ஜாம்பவான் நடிகர் திலகத்தின் மகன் என்ற எந்தவிதமான பந்தாவும் அவரிடம் இருந்ததில்லை. என்னிடம் மட்டுமல்ல செட்டில் எல்லோரிடமும் மிக சாதாரணமாக பேசுவார். குடும்ப பின்னணி பெரிதாக இருந்தால் பெரும்பாலும் எல்லோரிடமும் ‘பந்தா’ தானாகவே ஒட்டிக் கொள்ளும். ஆனால் பிரபுசாரிடம் மட்டும் அப்படி எந்த பந்தாவும் இல்லாமல் போனதை நினைத்து பல முறை ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.

    பிரபுசார் மிகவும் ஜாலியான பேர்வழி. செட்டில் ஒரு இடத்தில் இருக்கமாட்டார். சக ஆர்ட்டிஸ்டுகள் மட்டுமல்ல சாதாரண லைட்மேனிடம் கூட கலகலப்பாக பேசுவார். அதனால் எல்லோருக்குமே பிரபுசாரை பிடிக்கும். எனக்கு மட்டும் எப்படி பிடிக்காமல் போகும்? சின்ன பிரச்சினை என்றாலும் அவரிடம் தான் சொல்வேன். அடிக்கடி எனது சந்தேகங்களை கேட்டு கேட்டு தொந்தரவு செய்வேன். ஆனால் அவர் எரிச்சல் படமாட்டார். பொறுமையுடன் எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்வார்.

    இப்படித்தான் எங்கள் பயணம் தொடர்ந்தது. தமிழில் வெளிவந்த கோபுரங்கள் சாய்வதில்லை படம் இந்தியில் எடுக்கப்பட்டது. அந்த படத்தில் சுகாசினி ஏற்று நடித்த பாத்திரத்தில் நான் நடிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் சம்பளம் குறைவு என்று சண்டை போட்டு என் தந்தை அந்த படத்தில் என்னை நடிக்கவிடாமல் தடுத்துவிட்டார். அதன்பிறகு அந்த இந்தி படத்தில் ராதிகா நடித்தார். தெற்கில் எனது பயணம் வெற்றிப்பயணமாக தொடர்ந்ததால் அந்த நேரத்தில் இந்திபடத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    பிரபுவுடன் ஏற்பட்ட நட்பு தான் தமிழ் திரை உலகில் நான் உயர்ந்த இடத்தை பிடிக்க உதவியது. தர்மத்தின் தலைவன் படத்தை தொடர்ந்து ‘வெற்றிவிழா’, ‘மைடியர் மார்த்தாண்டன்’ ஆகிய படங்களுக்கும் வெற்றிப் படங்களாக அமைந்தது. பாடல்களும், சூப்பர் ஹிட்டாக  அமைந்தன. அந்த வரிசையில் அடுத்து வந்தார் சின்னத்தம்பி. சின்னத்தம்பி அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை.

    நான் சிறுமியாக இருந்தபோது மும்பையில் ஹேமமாலினி அவர்கள் வீட்டில் இட்லி, தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகளை சாப்பிட்டு இருப்பதாக கூறி இருக்கிறேன். ஆனால் நான் தமிழகத்தில் செட்டில் ஆனபிறகு தமிழகத்தின் பாரம்பரிய  உணவான இட்லிக்கு ‘குஷ்பு இட்லி’ என்று பெயர் வரும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. அந்த பெயர் வந்ததும் சுவாரஸ்யமானது.

    நான் நடிக்க வந்த புதிதில் கொஞ்சம் குண்டாக இருப்பேன். கன்னமும் புஸ் புஸ்சென்று இருக்கும். அதை வைத்து ஷூட்டிங் செட்டில் பிரபு சார் என்னை பார்த்ததும் ‘என்ன... இட்லி... எப்படி இருக்கே?’ என்பார். ‘ஏய்... இட்லி இங்கே வா’ என்பார். அப்படி பிரபு சார் வைத்த பெயர்தான் குஷ்பு இட்லியாகவே மாறிவிட்டது. நானும், குஷ்பு இட்லி என்று கேள்விப்பட்டதும் சாதாரண இட்லிக்கும் குஷ்பு இட்லிக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? என்று கேட்டேன். அப்போதுதான் ‘இந்த இட்லி குண்டாக புஸ் புஸ்சென்று மிருதுவாக இருக்கும் என்றார்கள்.

    செய்முறையில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்று விசாரித்தபோது அதையும் சொல்லி தந்தார்கள். ‘வழக்கம் போலவே அரிசி, உளுந்து ஆகியவற்றை ஊறவைக்க வேண்டும். அடிசனலாக கொஞ்சம் ஜவ்வரிசியையும் ஊற வைக்க வேண்டும் (புஸ்சென்று வர முதலில் சோடா உப்பு, ஈஸ்ட் போன்றவற்றை கலந்து இருக்கிறார்கள். அது உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல).

    பின்னர் தனித்தனியாக அரைத்து கலந்து இட்லி சட்டியில் வேக வைத்தால் புஸ்சென்று வந்துவிடும். இந்த குஷ்பு இட்லி தமிழகத்தில் இப்போது பிரபலம். ரசிகர்களுக்கு நன்றி.
    Next Story
    ×