search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    தென்கச்சி கோ சுவாமிநாதன்
    X
    தென்கச்சி கோ சுவாமிநாதன்

    தென்கச்சியிடம் சிக்கிய காதுகள்

    வானொலி வீட்டுக்கு வீடு குடிகொண்டு உச்சத்தில் இருந்த அக்காலகட்டத்தில் தென்கச்சி சுவாமிநாதன் தொகுத்து வழங்கிய ஐந்து நிமிட நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் ஒருசேர ஒலித்தது.
    பெரும் நிலகிழாரான தென்கச்சி சுவாமிநாதனின் தந்தை மகன் படித்தால் விவசாயம் பார்க்க மாட்டான் என்றெண்ணி படிப்பை பள்ளியோடு நிறுத்த, மகனின் பிடிவாதம் காரணமாக படித்தாலும் விவசாய படிப்பாக படியென கூறி கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்த்துவிட்டார். பட்ட படிப்பை முடித்துவிட்டு  திருநெல்வேலியில் விவசாய துறையில் வேலை செய்தார். பிறகு குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு திரும்பியவர் அங்கே பஞ்சாயத்து தலைவராகி 1977 வரை பணியாற்றினார்.

    அந்த தருணத்தில் அகில இந்திய வானொலியில் விவசாய துறை சார்ந்த நிகழ்ச்சி நடத்த ஆட்கள் தேவை என்ற செய்தியை கேட்டு விண்ணப்பித்த அவருக்கு மீண்டும் அரசு வேலை கிடைத்தது. ஏழாண்டுகள் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் “வயலும் வீடும்” நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய அவர் 1984-ல் சென்னை வானொலி நிலையத்துக்கு பணிமாறுதலானார். 1988-ம் ஆண்டில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    வானொலி வீட்டுக்கு வீடு குடிகொண்டு உச்சத்தில் இருந்த அக்காலகட்டத்தில் இவர் தொகுத்து வழங்கிய இந்த ஐந்து நிமிட நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் ஒருசேர ஒலித்தது. நிகழ்ச்சி பிரபலமானது. தொடர்ந்து பதினான்கு ஆண்டுகளாக தினம் ஒரு தகவல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் தனது பெயரையோ அடையாளத்தையோ ஒருமுறை கூட வெளிபடுத்திக் கொண்டதில்லை. கடிதம் எழுதும் பலரும் நிகழ்ச்சி நடத்துபவருக்கு எழுபது எண்பது  வயதானவரோ என்ற அடிப்படையிலேயே கேள்வி கேட்டு எழுதுவார்களாம்.

    தென்கச்சியாருக்கு பாடமெடுத்த எழுபது வயதை கடந்த ஆசிரியர் ஒருவரே  “ஐயா உங்களது ஆசிர்வாதம் கிடைக்குமா?” என கேட்டு கடிதமெழுத... முகவரியை பார்த்துவிட்டு  “ஐயா நான் உங்களிடம் பாடம் படித்த மாணவன், உங்களை விட சிறியவன்”  என இவர் பதில் கடிதம் எழுத...

    அதற்கு ஆசிரியரிடமிருந்து இப்படியானதொரு கடிதம் பதிலாக வந்ததாம். “படிக்கும் வயதில் உன் காது என் கைபிடியில் மாட்டிக் கொண்டு தவிக்கும். ஆனால் இன்றோ வானொலி மூலமாக என் போன்ற லட்சக்கணக்கானோரின் காதுகள் உன் குரல் வசம் சிக்கிக் கொண்டுள்ளன”  என்று குறிப்பிட்டிருந்தாராம்!

    - ஆனந்த் வாண்டையார்
    Next Story
    ×