search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    இளையராஜா
    X
    இளையராஜா

    இசையால் மயங்காத இதயம் எது..?

    இசைக்கு மயங்காத இதயங்கள் எதுவுமே இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அந்த இசை என்ற மாபெரும் உலகத்துக்கு, இனம், மதம், நாடு, மொழி என்ற எல்லைகள் எதுவுமே இல்லை.
    இளையராஜாவின் குரலை கேட்டதும் அந்த வெளிநாட்டு பெண் அசையாமல் அப்படியே நின்று விட்டார்.

    மகாபலிபுரத்தில் ஒரு மாலை நேரத்தில் நடந்த விஷயம் இது.

    பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி அவர். மகாபலிபுரம் சிற்பங்களை பார்த்து ரசித்துவிட்டு, தான் தங்கியிருந்த விடுதிக்கு வந்திருந்தார்.

    அந்த விடுதியில்தான் இளையராஜாவும் தங்கி இருந்தார்.

    ‘ரிஷிமூலம்‘ என்ற சிவாஜி படத்திற்கான பாடல் கம்போசிங் நடந்து கொண்டிருந்த நேரம். அதற்காகத்தான் அந்த மகாபலிபுரம் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார்கள் படக்குழுவினர். மூன்று நாட்களாக இடைவிடாமல் இசை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. 

    ‘ரிஷிமூலம்‘ படத்தில் ஒரு பாடல்.

    “நேரமிது நேரமிது 
    நெஞ்சில் ஒரு பாட்டெழுத...”

    இந்தப் பாடலுக்கான மெட்டை இளையராஜா விதம்விதமாக பாடிக் காட்டினார். படக் குழுவினர் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

    மகாபலிபுரத்தின் மாலை நேரத்து ரம்மியமான சூழலில் இளையராஜாவின் குரல் வழக்கத்தைவிட இனிமையாக ஒலித்தது.
    இப்படி அவர் மெட்டுப் போட்டு பாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான், தற்செயலாக அந்த பிரான்ஸ் நாட்டு பெண், இளையராஜா குழுவினர் தங்கியிருந்த அறையை கடந்து சென்றார். 

    அப்போது மெல்லிய குரலில்  இளையராஜா பாடிக் கொண்டிருக்க...

    அந்தக் குரலைக் கேட்டதும் அந்தப் பெண் நடப்பதை நிறுத்திவிட்டு அசையாமல் அப்படியே நின்றார்.

    அறைக்குள்ளிருந்து இளையராஜாவின் குரல் தொடர்ந்து வர,  அறைக்கு வெளியே அந்தப் பெண் மகாபலிபுரம் சிலைபோல மணிக்கணக்காக நின்றுகொண்டிருந்தார்.

    வெகுநேரம் பாடிக்கொண்டிருந்த இளையராஜா, தன் குரலுக்கு சற்று ஓய்வு கொடுக்க...  அப்போதுதான் அந்தப் பெண் தன் சுயநினைவுக்கு வந்தார்.

    இந்த நேரத்தில் இளையராஜா தன் அறையிலிருந்து மெல்ல வெளியே எட்டிப் பார்த்தார். 

    யார் அந்த பெண் ? வெகு நேரமாக அந்த இடத்திலேயே அசையாமல் நிற்கிறாரே !

    அதே நேரம் அந்தப் பெண்ணும் இளையராஜா அறைக்கு அருகே மெல்ல வந்து, ‘நான் உள்ளே வரலாமா’ என சைகையிலேயே அனுமதி கேட்க, இளையராஜா உடன் இருந்தவர்கள் அவரை உள்ளே வரச் சொல்ல,

    அந்தப் பெண் மெல்ல மெல்ல அடியெடுத்து அறைக்குள் நுழைந்தார். அந்த அறையைச் சுற்றிலும் பார்த்தார். எல்லோரும் விரிப்பை விரித்து தரையில் அமர்ந்திருந்தார்கள்.

    ‘உட்காருங்கள்’ என இளையராஜா சொல்ல, அந்தப்பெண் இளையராஜாவுக்கு எதிரே பணிவோடு தரையில் அமர்ந்தார்.

    கண்களை இமைக்காமல்  இளையராஜா முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

    இளையராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேர மௌனத்துக்குப் பின் அந்த பிரான்ஸ் பெண் மெல்லிய குரலில் இளையராஜாவை நோக்கிக் கேட்டார்..

    “இப்போது நீங்கள் பாடிக் கொண்டிருந்தீர்களே. அந்த பாடலை இன்னும் ஒருமுறை எனக்காக பாட முடியுமா ?”

    “அதனாலென்ன, பாடுகிறேன்” என்று சொன்ன இளையராஜா மீண்டும் ஒருமுறை மெல்லிய குரலில் அந்த ‘நேரமிது’ பாடலை பாட ஆரம்பிக்க, எதிரில் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது.

    பாட்டை முடித்துவிட்டார் இளையராஜா.

    ஆனால் அதன் பிறகும் கூட அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர் வழிவது நிற்கவில்லை.

    இளையராஜாவும் மற்றவர்களும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

    இளையராஜா புரிந்துகொண்டார். இசை செய்யும் மாயங்கள் ஜாலங்கள்  அவருக்கு நன்றாகவே தெரியும்.

    ஜாதி இனம் மொழி எல்லாவற்றையும் கடந்தது இசை.  இப்போது, தான் பாடிய அந்த இசையின் ஏதோ ஒரு வடிவம் அந்தப் பெண்ணை கவர்ந்திருக்கிறது என்பதை இளையராஜா புரிந்துகொண்டார்.

    சிறுது நேரத்துக்கு பின் அந்த பெண் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னார்..

    “நீங்கள் பாடிய இந்த இசைக்கும் எனக்கும் பல ஜென்மங்களாக தொடர்பு இருப்பது போல் உணர்கிறேன்.’’

    இளையராஜா மௌனமாக புன்னகைத்தார்.

    அந்தப் பெண் தொடர்ந்து கேட்டார். “எனக்காக நீங்கள் ஒன்று செய்ய முடியுமா ? எனக்கு பியானோ வாசிக்க தெரியும். அதில் நான் இசைப்பதற்காக, இப்போது நீங்கள் பாடினீர்களே, அந்த மியூசிக் நோட்ஸை எழுதி தர முடியுமா ?”

    எதுவும் சொல்லாமல் தன் முன்னால் இருந்த ஒரு பேப்பரை எடுத்து, தான் பாடிய பாடலுக்கான இசைக்குறிப்புகளை எழுதிக்கொடுத்தார் இளையராஜா.

    மிகுந்த மரியாதையோடு கை குவித்து வணங்கி வாங்கிக் கொண்டார் அந்தப் பெண்.

    மீண்டும் கண்களில் நீர் துளிர்க்க இளையராஜாவை வணங்கி விட்டு அந்தப் பெண் சொன்னார்.

    இளையராஜா

    “நான் புறப்படுகிறேன். இதற்கு முன்னால் எத்தனையோ முறை இந்தியாவுக்கு வந்து இருக்கிறேன். ஆனால் இந்த தடவை வந்ததை என் வாழ்நாளில் ஒருபோதும் நான் மறக்கவே மாட்டேன். உங்கள் அனைவருக்கும் என் நன்றி.”

    இளையராஜாவும் கை குவித்து வணங்கி வழி அனுப்பினார்.

    வாசல் வரை சென்ற அந்தப் பெண் திரும்பிப் பார்த்து சொன்னார்.. “ஒருவேளை உங்களை நான் சந்திப்பதற்கும், இந்த இசைக் குறிப்புகளை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காகவும்தான் இந்த முறை இந்தியாவுக்கு வந்தேனோ என்னவோ! போய் வருகிறேன்.”

    அந்தப் பெண் புறப்பட்டு போன பின்னரும் கூட, வெகுநேரம் அந்த அறையில் அமைதி நிலவியது.  ஆனால் அந்த மௌனத்தில் கூட ஏதோ ஒரு இசை கலந்திருந்தது.

    இசைக்கு மயங்காத இதயங்கள் எதுவுமே இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அந்த இசை என்ற மாபெரும் உலகத்துக்கு, இனம், மதம், நாடு, மொழி என்ற எல்லைகள் எதுவுமே இல்லை. -ஜான்துரை ஆசிர் செல்லையா
    Next Story
    ×