search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. பொதுக்குழு ஆகஸ்டு 19-ந் தேதி கூடுகிறது
    X

    தி.மு.க. பொதுக்குழு ஆகஸ்டு 19-ந் தேதி கூடுகிறது

    தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வான பிறகு முதல் முறையாக பொதுக்குழு ஆகஸ்டு 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கூடுகிறது. #DMK #MKStalin
    சென்னை:

    தேசிய மற்றும் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதியாகும். அந்த வகையில், கடந்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்றிருந்ததால், இந்தக் கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



    அதன்பிறகு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை காரணம்காட்டி தேர்தல் ஆணையத்தில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனால், கடந்த 6 மாத காலமாக தி.மு.க. பொதுக்குழு கூட்டப்படவில்லை.

    இந்த நிலையில், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 19-ந் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட இருக்கிறது. இதுவரை நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில்தான் நடைபெற்று வந்திருக்கிறது. ஆனால், இந்த முறை அ.தி.மு.க.வுக்கு ராசியான சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

    முதலில், ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட திட்டமிட்டு, இந்த மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, 19-ந் தேதிக்கு அது மாற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், தி.மு.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4 ஆயிரம் பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

    எனவே, ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வருகை தரும் தி.மு.க. நிர்வாகிகள் அனைவருக்கும் மதிய உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட உள்ளன. பொதுக்குழு கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்களை நிறைவேற்றுவது? என்பது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்தக் கூட்டத்தில், தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், அதுபோன்ற எந்த முடிவும் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படாது என்று தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. #DMK #MKStalin
    Next Story
    ×