என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்பு சட்டை அணிந்தப்படி மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணம்
    X

    கருப்பு சட்டை அணிந்தப்படி மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணம்

    பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து கருப்பு சட்டை அணிந்தப்படி மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கினார்.
    சீர்காழி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி முக்கொம்பில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந் தேதி காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து தஞ்சை , திருவாரூர் மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் பயணத்தை தொடர்ந்தார். வழிநெடுக கிராமங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நாகை மாவட்டத்தில் நேற்று 5-வது நாளாக ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். நாகை வேளாங்கண்ணியில் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து பரவை, பாப்பா கோவில், சிக்கல் பத்து, அகரஒரத்தூர், ஒரத்தூர், ஆயில்மலை, அகலங்கால், செம்பியன் மாதேவி, வடுகசேரி , புதுச்சேரி, ஆவராணி, சிக்கல், புத்தூர் ஆகிய இடங்களுக்கு சென்றார். செம்பியன்மா தேவியில் விவசாயிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    மாலையில் காரைக்காலில் தொடங்கிய பயணம் பொறையாறு, திருக்களச்சேரி, , எடுத்துக் கட்டி, இலுப்பூர், செம்பனார்கோவில், மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு சென்றது. இரவில் வைத்தீஸ்வரன்கோவிலில் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் தங்கினர்.

    இன்று (12-ந் தேதி) காலை 9 மணியளவில் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து மு.க.ஸ்டாலின் 6-வது நாளாக பயணத்தை தொடங்கினார்.

    அவருடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும், காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.


    சென்னைக்கு இன்று வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடந்த காவிரி மீட்பு பயணத்தில் மு.க.ஸ்டாலின் கருப்பு சட்டை- கருப்பு பேண்ட் அணிந்திருந்தார். இதேபோல் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கருப்பு சட்டை , பேட்ஜ் அணிந்து கொண்டு சென்றனர்.

    வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து தொடங்கிய பயணம் கொள்ளிடம், வல்லம்படுகை வழியாக கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, செல்கிறது.

    இன்று மாலையில் கடலூரில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின், இரா.முத்தரசன் மற்றும் காவிரி உரிமை மீட்பு 2-ம் குழுவில் இடம் பெற்றிருந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பால கிருஷ்ணன் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    நாளை (13-ந் தேதி) காலை 7 மணியளவில் கடலூரில் இருந்து 1000 கார்களுடன் மு.க.ஸ்டாலின் பேரணியாக செல்கின்றனர்.

    கடலூரில் இருந்து புதுச்சேரி, திண்டிவனம், அச்சரப்பாக்கம், மேல் மருவத்தூர், தாம்பரம் வழியாக கிண்டி கவர்னர் மாளிகைக்கு செல்கின்றனர். அங்கு கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மனு கொடுக்கின்றனர். #MKStalin #CauveryIssue
    Next Story
    ×