search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    சொந்தமாக தொழில் தொடங்க ஆர்வம் காட்டும் பெண்கள்
    X
    சொந்தமாக தொழில் தொடங்க ஆர்வம் காட்டும் பெண்கள்

    சொந்தமாக தொழில் தொடங்க ஆர்வம் காட்டும் பெண்கள்

    இன்றைய நிலையில் சுயமாகத் தொழில் தொடங்குவதற்கு பெண்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. சுயதொழில் தொடங்குவதற்கு முன்பு சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவற்றை தெரிந்து கொள்வோமா..?
    இன்றைய நிலையில் சுயமாகத் தொழில் தொடங்குவதற்கு மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கல்வித் தகுதியை விட ஆர்வம், தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணம், எவ்வித பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் துணிவு ஆகியவையே சுயதொழில் தொடங்க முக்கியம். அதனால் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்கள் முதல் முதுகலைப் பட்டம் படித்தவர்கள் வரை யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம். தொழில்முனைவோர் ஆகலாம். இருப்பினும் சுயதொழில் தொடங்குவதற்கு முன்பு சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவற்றை தெரிந்து கொள்வோமா..?

    முன்னேற்பாடு

    சுய தொழில் தொடங்கும்போது தொடக்க காலத்தில் லாபம் உடனடியாக கிடைக்கும் என்று கூற இயலாது. சில தடைகள் மற்றும் கஷ்டங்களை தொழில்முனைவோர்கள் எதிர்கொண்டாக வேண்டும். அப்போது, சுயதொழில் மூலம் வரும் வருமானத்தில் குடும்ப வாழ்க்கையை நடத்துவது இயலாத காரியமாகி விடும். அதனால், சுயதொழில் தொடங்குகிறோம் என்று செய்யும் வேலையை விட்டுவிடாது, அதில் இருந்து கொண்டே தொழிலை தொடங்க வேண்டும். தொழில் ஓரளவுக்கு முன்னேறி விட்டது, லாபகரமானதாக தொழில் நடைபெறுகிறது என்பதை உறுதி செய்த பின்னரே, வேலையை விட வேண்டும்.

    திட்டமிடுதல் மற்றும் பயிற்சி சுய தொழில்

    தொடங்க முடிவு செய்யும் இளைஞர்கள், முக்கியமாக இரு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். தொழிலை நடத்த சிறப்பான திட்டமிடுதல், மற்றொன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட துறை சம்பந்தப்பட்ட நுணுக்கங்களையும், இப்போதைய தொழில் நுட்பங்களையும் தெரிந்து கொள்ள முறையாக பயிற்சி எடுக்க வேண்டும். எனினும், திட்டமிடுதலில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் சிலர், அதை செயல்படுத்துவதில் தோல்வி அடைகின்றனர். அத்தகைய இளைஞர்கள், அனுபவசாலிகளின் வழிகாட்டுதல்களைப் பெற்று, தொழில் குறித்த தெளிவை பெற்ற பின்னரே, தொழிலில் களம் இறங்க வேண்டும். சுய தொழில் தொடங்கும் தொழில்முனைவோர்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சித் திட்டங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவற்றில் பங்கேற்று இளைஞர்கள் தங்களது திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.

    முதலீடு

    குடும்பப் பின்னணி செல்வச் செழிப்புடையதாக இல்லா விட்டாலும், தொழில் தொடங்குவதற்காக கடனுதவிகளை அரசு வழங்கி வருகிறது. மேலும், தனி நபரிடம் இருந்து கடன் பெறுவதை விட, அரசிடம் இருந்து கடன் பெறுவது பாதுகாப்பானது. அதனால், முதலீடு குறித்த கவலையை விடுத்து தன்னம்பிக்கையுடன் தொழில் தொடங்கலாம். ஒருவரால் மட்டுமே முதலீடு செய்வது கடினம் என்பதால், தொழில் பெருகப் பெருக அதற்கேற்றவாறு முதலீட்டாளர்களை ஈர்க்கலாம்.

    சக பணியாளர்கள்

    நாம் திறமையானவர்கள் என்ற நம்பிக்கை நமக்கு அதிக அளவில் இருக்கும். எனினும், அனைத்து திறமைகளும் நம் ஒருவரிடம் மட்டும் இருக்காது. அதனால், சுயதொழில் தொடங்கும்போது, தொழில் கணக்கை நிர்வகிக்க பொருத்தமான கணக்காளரை நியமிக்கலாம். அதன் மூலம், தொழிலில் இருக்கும் வீண் செலவுகளை குறைக்கலாம். விற்பனைப் பிரிவை வலுப்படுத்தும் வகையில், மேலாளரை நியமித்தால்தான் தொழில் லாபகரமானதாக மாறும். அதுபோல, மற்ற பிரிவுகளுக்கும் தகுந்த நிபுணர்களை நியமிக்க வேண்டும்.

    ஆலோசனைகள்

    தொழில் தொடங்குவது தொடர்பாக மூத்த தொழில்முனைவோர்களிடத்தில் ஆலோசனைகளைக் கேட்டு பெறுவது மட்டுமின்றி, தொழில்முனைவோர் ஆலோசனை நிறுவனங்களை அணுகலாம். தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் உதவியாக இருக்கும். வரி விலக்குகளுடன் பணத்தை எவ்வாறு சேமிப்பது, வாடிக்கையாளர்களை எவ்வாறு கவர்வது உள்ளிட்ட நுணுக்கங்களை அனுபவசாலிகளிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.

    மதிப்பீடு

    நமது தொழிலைப் பலப்படுத்த மேற்கண்ட அனைத்தும் இருந்தாலும், தொழில் நிலை குறித்து அவ்வப்போது மதிப்பீடு செய்ய வேண்டியது மிக முக்கியம். தொழிலில் வரும் லாப, நஷ்டங்களைக் கணக்கிட்டு அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், சுயதொழிலில் வெற்றிகரமாகப் பயணிக்க முடியும்.
    Next Story
    ×