search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மகளிருக்கு ஏற்ற மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு தொழில்
    X
    மகளிருக்கு ஏற்ற மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு தொழில்

    மகளிருக்கு ஏற்ற மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு தொழில்

    மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் தொழில் தற்போது பிரபலம் ஆகி வருகிறது. இது, பெண்களுக்கு ஏற்ற சிறந்த தொழில் ஆகும்.
    பண்டைகாலத்தில் மாடுகள் மூலம் செக்கிழுத்து எண்ணெய் தயாரிக்கப்பட்டது. இதனால் நம் முன்னோர் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் காலப்போக்கில் செக்குகள் காணாமல் போய் விட்டன. அதாவது, செக்கு மூலம் எண்ணெய் தயாரிக்கப்படும் முறை அழிந்து போனது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளை பயன்படுத்தியதன் விளைவாக, பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் தற்போது மீண்டும் பழைய முறையில் தயராகும் எண்ணெய்களை பயன்படுத்த மக்கள் தொடங்கி விட்டனர். அதன்படி கல் செக்கு, மரச்செக்குகளால் தயாரிக்கப்படுகிற எண்ணெய் வகைகளை பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.

    எனவே மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் தொழில் தற்போது பிரபலம் ஆகி வருகிறது. இது, பெண்களுக்கு ஏற்ற சிறந்த தொழில் ஆகும். வீட்டில் ஒரு அறையை தேர்ந்தெடுத்து கூட மரச்செக்கு மூலம் எண்ணெய் தயாரிக்கலாம். தொழில் தொடங்க இருக்கும் இடத்தில் இருந்து, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வேறு யாரும் மரச்செக்கு வைத்துள்ளார்களா? என்று பார்க்க வேண்டும். அவர்களை பாதிக்காத வண்ணம் உற்பத்தி அளவு அறிந்து, மக்கள் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட எல்லையை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் தொழில் ஆரம்பிக்கும் இடத்தில் மின்சார வசதி எப்படி உள்ளது என்று முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்ளுங்கள். இதற்கு காரணம், எண்ணெய் செக்கினை இயக்க 3 எச்.பி. மோட்டார் வேண்டும். ஒரு செக்குக்கு 10-க்கு 15 அடி இடமாவது அவசியம் தேவை. தேங்காய், எள் போன்றவற்றை வெயிலில் காய வைக்க இடவசதி இருக்க வேண்டும்.

    செக்கு எந்திரத்தின் விலை சுமார் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை ஆகும் நல்லெண்ணெய்க்கும், கடலை எண்ணெய்க்கும் 1 லிட்டர் எண்ணெய் எடுக்க சுமார் 2 3/4 கிலோ முதல் 3 கிலோ மூலப்பொருட்கள் தேவைப்படும். பொருளின் தரத்திற்கேற்ப இந்த அளவுகள் மாறுபடும். ஒரு நாளைக்கு 80 கிலோ கடலையை செக்கில் போட்டு ஆட்டினால், சுமார் 30 கிலோ எண்ணெய் மற்றும் 50 கிலோ புண்ணாக்கு கிடைக்கும்.

    நாம் கலப்படமின்றி, தரமான மூலப்பொருட்களை போட்டு எண்ணெய் உற்பத்தி செய்யும்போது அதிக விலைக்கே விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். உதாரணமாக 1 லிட்டர் கடலை எண்ணெய் சந்தையில் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால், நாம் ரூ.250-க்கு விற்க வேண்டியிருக்கும். குறைந்த விலையில் தரமற்ற எண்ணெய்யை வாங்கி கொண்டிருக்கும் மக்களிடம் நம்முடைய எண்ணெய்யின் தரத்தை எடுத்துக்கூறி வாங்க வைக்க வேண்டும். இதில் தான் நம்முடைய தொழில் ரகசியம் உள்ளது.

    மக்களுடன் நேரடியாக தொடர்பு வைத்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து அதற்கு ஏற்றாற்போல எண்ணெய் தயாரித்து கொடுக்க வேண்டும். நம்முடைய பொருளின் தரத்தையும் தெரியப்படுத்தலாம். இதனால் மக்களுக்கும், நமக்குமான தொடர்பு எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் வெளிப்படையாக இருக்க வேண்டும். மக்கள் சந்தேகங்கள் கேட்டால் அவர்களுக்காக நேரம் ஒதுக்கி தெளிவு படுத்தவேண்டும்.

    மரச்செக்கால் எண்ணெய் தயாரிக்கும்போது, முழுமையாக எண்ணெயை விதைகளில் இருந்து பிரிக்க முடியாது. 100-க்கு 80 சதவீதம் எண்ணெயை தான் பிழிந்து எடுக்க முடியும். மீதமுள்ள 20 சதவீதம் எண்ணெய் சத்துக்கள் புண்ணாக்கில் தான் இருக்கும். நியாயமாக பார்த்தால் இதுதான் சரியானது. ஏனெனில், நமக்கு 80 சதவிகிதமும் இதை சாப்பிடும் மாட்டுக்கு 20 சதவீதமும் சத்துக்கள் கிடைக்கும்.

    இந்த புண்ணாக்கை சாப்பிடும் மாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் எண்ணையை உட்கொள்வதன் மூலம் நம்முடைய உடல் நலமும் ஆரோக்கியமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை. மரச்செக்கு மூலம் எண்ணெய் தயாரிப்பதன் மூலம் குறைந்த பட்சம் மாதத்துக்கு ரூ. 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம். மகளிர் மட்டுமின்றி வேலையில்லாத இளைஞர்களுக்கும் இது ஒரு சிறந்த தொழில் ஆகும்.
    Next Story
    ×