search icon
என் மலர்tooltip icon

  லைஃப்ஸ்டைல்

  மாதாந்திர வரவு செலவுக்கணக்கு திட்டம்
  X
  மாதாந்திர வரவு செலவுக்கணக்கு திட்டம்

  மாதாந்திர வரவு செலவுக்கணக்கு திட்டம்

  முதலீட்டிற்கு சற்றும் பொருந்தாத வாடகை வருவாயை விட வேறு இனங்களில் முதலீடு செய்து கூடுதல் வருவாயை பெற வாய்ப்பிருந்தால் அந்த வழியை நாடுங்கள்.
  நிதி நிர்வாகம் என்பது ஒரு தனிக்கலை. திட்டமிட்டு செயல்பட்டால் நிதியை சேமிக்க முடியும். சேமித்ததை பல மடங்காக பெருக்கவும் முடியும். நிதியை திட்டமிட்டு ஒழுங்குபடுத்த வயது முக்கியம் அல்ல. எதையும் துணிச்சலுடன் அணுகும் மனோபாவம் நிரம்பி இருக்கும் இளம் வயதில் ஓர் அணுகுமுறையும், வயது ஏற ஏற அதற்கேற்ப அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளும் தன்மையும் மனிதர்களுக்கே உரித்தான பண்புகளாகும்.

  இதன்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்மை நாமே சீர்தூக்கி பார்த்து நிதியை நிர்வகிக்க தேவையான வழிமுறைகளை காண்போம். நீங்கள் 30 வயதுக்குட்பட்டவராக இருந்தால், எத்தகைய இடர்பாடுகளையும், சவால்களையும், சந்திக்கும் துணிச்சல் இயற்கையாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களின் மாதாந்திர வரவு செலவுக்கணக்கு திட்டத்தை தயாரித்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகும். பின்னாளில் நீங்கள் கச்சிதமாக திட்டமிட்டு செயல்பட இந்த பழக்கம் பெரிதும் துணை நிற்கும்.

  அதுபோல் நீண்ட கால வரி சேமிப்பு திட்டங்களில் இந்த காலகட்டத்திலேயே முதலீடு மேற்கொள்வது சிறந்ததாகும். செல்போன், கடன் அட்டை உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தும்போது அதற்கான மாதாந்திர தொகையை ஒழுங்காக செலுத்தி வருவதற்கு முன்னுரிமை அளியுங்கள். நிலம், வீடு வாங்க வங்கிகளிடம் கடன் உதவிக்கு அணுகும் போது உங்களின் திட்டமிட்ட நிதி நிர்வாகத்திற்கு அவை சான்றாக அமையும். எந்த வகையில் நமது முதலீட்டை பெருக்கலாம் என தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதற்கான வழிமுறைகளை ஆர்வமுடன் அறிந்து கொள்ள முயலுங்கள்.

  ஒவ்வொரு முதலீட்டிலும் ஆதாயம், இடர்பாடு என இரண்டும் கலந்திருக்கும். நீங்கள் செய்துள்ள முதலீட்டின் தன்மை குறித்து முன் எச்சரிக்கையாக ஒரு திட்ட வரையறையை தயார் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் முதலீட்டு இனங்களை தேவைக்கேற்ப மாற்றி அமைத்து இடர்பாடு, இழப்பு போன்றவற்றை தவிர்த்துக்கொள்ளலாம்.

  30 முதல் 40 வயதுக்குள் உள்ளவர்கள் இந்த காலகட்டத்தில் ஆரோக்கிய பராமரிப்பு குறித்து அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆரோக்கிய பராமரிப்பு காப்பீடு இன்றியமையாத ஒன்றாகும். இதற்கு சிறு தொகையை முதலீடு செய்து வாருங்கள். மிகப்பெரிய செலவுகளை சமாளிக்க இந்த முதலீடு உங்களுக்கு துணை நிற்கும். ஆயுள் காப்பீடு திட்டத்தில் முதலீடு மேற்கொள்வதற்கு முன்பு, காப்பீட்டு காலம், முதிர்வின் போது கிடைக்கும் தொகை உள்ளிட்ட பலதரப்பட்ட விவரங்களையும் முகவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒரு வீட்டை வாங்குவதற்கு செய்யும் முதலீட்டிற்கும், அந்த வீட்டை வாடகைக்கு விட்டு கிடைக்கும் வருவாய்க்கும் உள்ள வித்தியாசத்தை கவனித்து கொள்ளுங்கள்.

  முதலீட்டிற்கு சற்றும் பொருந்தாத வாடகை வருவாயை விட வேறு இனங்களில் முதலீடு செய்து கூடுதல் வருவாயை பெற வாய்ப்பிருந்தால் அந்த வழியை நாடுங்கள்.

  எனினும் வீடு, நிலம் விற்பனை துறையின் வளர்ச்சியால் மூலதனத்தின் மீதான வருவாய், ஒரு சில ஆண்டுகளில் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். பணவீக்க பாதிப்புளை சமாளிக்க கூடிய வகையில் உங்கள் குழந்தைகளின் கல்வி செலவு இருக்குமாறு பார்த்து கொள்வது திறமையுள்ள நிதி நிர்வாகத்தில் அடங்கி உள்ளது எனலாம்.

  40 முதல் 50 வயதுக்குள் உள்ளவர்கள் எப்போது ஓய்வு பெறுவது என்று முடிவெடுக்கும் காலம் இது. உங்கள் முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் ஓய்வு காலத்திற்கு போதுமா என்பதை முடிவு செய்து அதற்கேற்ப ஆதாயம் அதிகம் வரும் முதலீட்டை தேர்ந்தெடுங்கள். திடீரென ஏற்படும் செலவுகளை சமாளிக்க வழிவகை செய்யும் முதலீட்டு இனங்களை தேர்ந்தெடுங்கள். இதற்காக குறிப்பிட்ட காலம் வரை மூலதனத்தை திரும்ப பெற முடியாத திட்டங்களை தவிருங்கள். ஓய்விற்கு பிறகு மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை அளிக்க கூடிய நிதித்திட்டங்களை தேர்வு செய்யுங்கள். இந்த கால கட்டத்தில் உங்களுக்கு ஏதேனும் கடன்கள் இருந்தால் அதை தீர்க்க வழி என்ன என்று சிந்தியுங்கள். சேமிப்பிற்கு தொகையை ஒதுக்குவதை விட கடன்களை அடைப்பதற்கு அத்தொகையை செலவிட்டு நிம்மதியான வாழ்க்கையை நாடுங்கள்.

  50 முதல் 60 வயதுக்குள் உள்ளவர்கள் ஓய்விற்கு பின் கிடைக்கும் தொகை, முதலீட்டின் மீதான வருவாய் போன்றவற்றை கணக்கிட்டு கொண்டு வாழ்க்கை நடைமுறையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இதனால் ஓய்விற்கு பிறகு எழும் பதற்றம், தடுமாற்றம், ஆற்றாமை போன்ற பிரச்சினைகளை தவிர்த்து எப்போதும் போல் இயல்பாக வாழலாம். உயில் எழுதவில்லை என்றால் அதை எழுதி வையுங்கள். முறைப்படி அதை பதிவு செய்ய மறக்காதீர்கள். இதனால் வாரிசு சண்டையை தவிர்க்கலாம். ஆரோக்கிய பராமரிப்பு காப்பீட்டு காலத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். ஓய்விற்கு பிறகு உங்கள் முதலீடுகளில் இருந்துகிடைக்கும் தொகையை என்ன செய்யலாம் என முடிவு செய்து அதற்கேற்ப செயல்படுங்கள். மறு முதலீட்டின் மூலம் வருவாயை பெருக்க திட்டமிட்டால் குறுகிய கால திட்டங்களை தேர்ந்தெடுங்கள்.

  60 வயதுக்குமேல் உள்ளவர்கள் ஏற்கனவே எழுதிய உயிலில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தால் அதை உடனே செய்து விடுங்கள். உங்கள் பேரக் குழந்தைகளுக்கு வரிச்சலுகைகளை கொண்ட முதலீட்டு திட்டங்களை பரிசாக வழங்குங்கள். அவசர காலத்தில் உடனடியான பணத்தேவைக்கு குறிப்பிட்ட தேவையை ரொக்கமாக கையில் வைத்திருங்கள். தேவைக்கு அதிகமான மூலதனம் இருப்பதாக கருதினால் சமூக நலப்பணிகளுக்கு விரும்பும் தொகையை அன்பளிப்பாக வழங்கி மன அமைதியையும், திருப்தியையும், மகிழ்ச்சியையும் பெறுங்கள்.
  Next Story
  ×