search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தையல் தொழில்
    X
    தையல் தொழில்

    குறைந்த முதலீட்டில் தையல் தொழிலில் நல்ல வருமானம்

    தையல் தொழிலை தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவை இல்லை. இத்தொழிலை முறையாக கற்றுக்கொண்டு சிறிய அளவில் தொடங்கி படிப்படியாக வளர்ச்சி பெறலாம்.
    ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள். இதற்கு ஏற்ப மனித வாழ்க்கைக்கு தற்போது உடைகள் என்பது முக்கியமானதாகி விட்டது. ஆண்களும் சரி, பெண்களும் சரி சிலருக்கு ரெடிமேடு ஆடைகளை பிடிக்கும், சிலருக்கு துணியாக எடுத்து கடைகளில் தைக்கப்படும் ஆடைகளை தான் பிடிக்கும். எது எப்படியோ துணியை அப்படியே உடுக்க முடியாது. தைத்துதான் உடுத்த முடியும்.எனவே ரெடிமேடு ஆடைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் மொத்தமாக தையல் தொழிலாளர்களிடம் துணியை தைக்க கொடுக்கிறர்கள். இதன் மூலம் இந்த தொழிலும் லாபம் தரக்கூடிய தொழில்தான். குறிப்பாக பண்டிகை காலங்கள் வந்து விட்டால் தையல் தொழிலாளர்களை கைகளில் பிடிக்க முடியாது. அந்த அளவுக்கு பிஷியாக இருப்பார்கள். துணியை தைக்க கொடுத்தால் கூட வாங்க மறுக்கும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள்.

    ஆடைகளின் தேவையும், விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகின்றன. அது சார்ந்த தொழிலான தையல் தொழிலை திட்டமிட்டு செய்தால் நல்ல வருவாய் ஈட்டலாம். ஜவுளி ஆலைகள் அமைப்பதற்கோ, ஷோரூம்கள் அமைக்கவோ முதலீடு அதிகமாக தேவைப்படும். ஆனால் தையல் தொழிலை தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவை இல்லை. இத்தொழிலை முறையாக கற்றுக்கொண்டு சிறிய அளவில் தொடங்கி படிப்படியாக வளர்ச்சி பெறலாம்.

    ஆண்களுக்கும், பெண்களுக்கும் தேவையான ஆடை வகைகள், குழந்தைகளுக்கான ஆடை வகைகள் போன்றவற்றை நேர்த்தியாக தைத்து கொடுக்கும் அனுபவத்தை வளர்த்து கொண்டால் இந்த தொழிலை சிறப்பாக செய்ய முடியும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் ஆடை தைத்து கொடுப்போரை விட குறிப்பிட்ட தரப்பினருக்கும் மட்டும் ஆடைகளை தைத்து கொடுக்கும் தையல் தொழிலாளர்கள் (டெய்லர்கள்) அதிகம் உள்ளனர். அனைத்து தரப்பினருக்கும் தைத்து கொடுக்க அனுபவம் முக்கியம்.

    தையல் கடையை முக்கிய இடத்தில் வாடகைக்கு பிடித்து தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. ஆரம்ப காலத்தில் வீட்டில் இருந்தபடியே எந்திரங்களை வாங்கி துணிகளை தைத்து கொடுக்கலாம். பணியாட்கள் வைத்துக்கொண்டோ, தனியாகவோ எந்திரங்களை வாங்கி பணியை தொடரலாம். நாம் செய்யும் டெய்லரிங் வேலையை பிறருக்கு தெரியப்படுத்துவது தான் முக்கியம். அதன் பிறகு படிப்படியாக இடவசதிக்கு ஏற்ப விரிவாக்கம் செய்து கொள்ளலாம். பெரிய நிறுவனமாக கூட மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

    மேலும் ரெடிமேடு ஆடை நிறுவனங்களுக்கு சென்று ஆர்டர்கள் கேட்கலாம். முக்கியமாக காலத்துக்கு ஏற்ப ஆடை வடிவமைப்புகளை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அவற்றை தைத்து தரும் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். புதுவித டிசைன்களை வடிவமைத்து அதற்கு ஏற்ப தைக்கும் தொழிலில் தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். தையல் பயிற்சி பள்ளிகள் நிறைய உள்ளன. அங்கு தையல் கலையை கற்றுக்கொண்டு சிறிய அளவில் பணியை தொடங்கலாம். மேலும் தையல் கடைகளில் சேர்ந்தும் பணியை தொடரலாம். எது எப்படி இருந்தாலும் தையல் தொழில் நஷ்டத்தை தராது. குறைந்த முதலீட்டில் தொடர்ந்து லாபம் தரும் தொழில் இது என்றால் அது மிகையாகாது.
    Next Story
    ×