search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களின் உடைக்கும், உணர்வுகளுக்கும் மரியாதை கிடைக்கட்டும்
    X
    பெண்களின் உடைக்கும், உணர்வுகளுக்கும் மரியாதை கிடைக்கட்டும்

    பெண்களின் உடைக்கும், உணர்வுகளுக்கும் மரியாதை கிடைக்கட்டும்

    எதையாவது கொழுத்திப்போட்டு காட்டுத்தீ போன்று பரவவைத்து சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி பொழுதுபோக்குபவர்கள் இப்போது அதிகம். அவர்கள் பெண்களின் உச்சி முதல் பாதம் வரை எல்லாவற்றையுமே ஊடுருவிப்பார்த்து, குற்றம்கண்டுபிடித்து விமர்சிப்பார்கள்.
    அனஸ்வராவின் உடைக்கும், உணர்வுக்கும் பெண்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. “எனது உடையின் அளவைப் பார்ப்பவர்கள் அதையே பார்த்துக்கொண்டு நிற்கட்டும். எனக்கு சவுகரியமான உடையை அணிவது என் சுதந்திரம்” என்று அனஸ்வராவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார், ‘ஸ்டைலிஸ்ட்’டாக பணிபுரியும் அனிலா ஆண்டனி.

    “பெண்களை கருத்துள்ளவர்களாக வளர்ப்பதும், அவர்களுக்கு தனிப்பட்ட கருத்துகள் இருப்பது தவறல்ல என்று புரியவைத்து வளர்ப்பதும் நமக்கு முக்கியம். பெற்றோரால் நல்லமுறையில் வளர்க்கப்படும் எந்த ஆணும் இன்னொரு பெண்ணை மோசமாக பார்க்கமாட்டார்” என்கிறார், ஆசிரியை எரிகா.
    விவாதத்தை உருவாக்கிய புகைப்படம்

    எதையாவது கொழுத்திப்போட்டு காட்டுத்தீ போன்று பரவவைத்து சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி பொழுதுபோக்குபவர்கள் இப்போது அதிகம். அவர்கள் பெண்களின் உச்சி முதல் பாதம் வரை எல்லாவற்றையுமே ஊடுருவிப்பார்த்து, குற்றம்கண்டுபிடித்து விமர்சிப்பார்கள். அதிலும் குறிப்பாக நடிகைகள் என்றால் விமர்சனங்கள் சில நேரங்களில் தரம்தாழ்ந்து போய்விடுகின்றன. திருமணத்திற்கு பின்பு நடிகைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்களையும், உடைகளில் ஏற்படும் மாற்றங்களையும்கூட சகட்டுமேனிக்கு விமர்சித்து வாங்கிக்கட்டிக் கொள்கிறார்கள்.

    இந்த வரிசையில் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருவது, 18 வயது இளம் நடிகை அனஸ்வராவின் கால்கள். தனது பிறந்தநாளுக்கு சகோதரி பரிசாக வாங்கிக்கொடுத்த டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து போட்டோ எடுத்து அதை அனஸ்வரா சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். அந்த படத்தை பார்த்து சிலர் கேலியும் கிண்டலுமாக விமர்சிக்க விவாதம் உருவாகிவிட்டது. உடனே நடிகைகளும், பெண்ணியவாதிகளும் ஒன்று சேர்ந்து, அனஸ்வராவுக்கு ஆதரவாக ‘ஆமாம்.. எங்களுக்கும் கால்கள் இருக்கின்றன’ என்று கூறி, விமர்சனங்களுக்கு பதிலடிகொடுக்க விவாதம் சூடாகிவிட்டது.

    ஆண்களுக்கும், பெண்களுக்கும் கால்கள் இருக்கின்றன. மனிதர்களை தூக்கி நிறுத்தி, இயங்க வைப்பவை கால்கள். அவை இரண்டும் செயல்படாவிட்டால் மனிதர்கள் ஒரே இடத்தில் முடங்கிக்கிடக்க வேண்டியதாகிவிடும். இந்த கால்களை பொறுத்தவரையில் ஒரு முரண்பாடு என்னவென்றால் ஆண்களின் கால்களும், பெண்களின் கால்களும் அவர்கள் வளர்ந்து வரும் பருவத்தில் வித்தியாசப்படுத்தி பார்க்கப்படுகின்றன. தொடக்கக் கல்வி காலம் வரை இருபாலரின் கால்களும் ஒரே மாதிரிதான் கவனிக்கப்படுகின்றன. பெண்கள் உயர்நிலைப்பள்ளியை தொடும்போது ‘பிராக்’ கில் இருந்து சுடிதாருக்கு மாறுகிறார்கள். அப்போதிலிருந்து குடும்பத்தினர் ‘கால்களை மூடிவைத்துக்கொள்ளும்படி’ பெண்களிடம் கூறுகிறார்கள். அதே பருவத்தில் இருக்கும் ஆண்களிடம், கால்களை மூடிவைத்துக்கொள்ளும்படி பெற்றோர் எந்த உத்தரவும் போடுவதில்லை.

    அப்போதுதான் பெண்களுக்கு ‘அண்ண னின் கால்களை மூடிவைத்துக்கொள்ளச் சொல்வதில்லை. நமது கால்களுக்கு மட்டும் மூடுதல் தேவைப்படுகிறது’ என்று சிந்தனை எழுகிறது. அது பற்றி அதிகம் சிந்திக்கவிடாமல் பெண்களின் கால்களுக்கு கொலுசுபோட்டு, நகங்களுக்கு கலரிங்கொடுத்து அழகாக்கப்படுகிறது. ‘கொலுசே கொலுசே இசை பாடு கொலுசே’ என்று கவிஞர்களால் பாடு பொருளாகவும் மாறுகிறது. வாழைத்தண்டு போன்ற கால்கள் என்று மெருகூட்டி கவர்ச்சி சாயமும் பூசப்படுகிறது. அதே நேரத்தில் ஆண்களின் கால்கள் அப்படியே கண்டுகொள்ளாமல் விடப்பட்டுவிடுகிறது. வெயில்கொண்டாலும், மழைபட்டாலும் அது பற்றி பெற்றோருக்கு பெரிதாக ஒன்றும் கவலையில்லை.

    பெண்ணின் கால் வெளியே தெரிந்தால் வெட்கக்கேடு என்ற கருத்தை வலுவாக்கிவிட்டார்கள். அதனால் அவள் அணிந்து செல்லும் உடையின் அளவு சாலை ஓரத்தில் உள்ள பல கண்களால் அளவெடுக்கப்படுகிறது. கால்கள் கவர்ச்சிப் பொருளாக பேசப்படுகிறது.

    ஆணின் கால்கள் ஆடைகளின்றி எந்த அளவுக்கு வெளியே தெரியவேண்டும்? என்று சமூகவலைத்தளத்தில் எந்த விவாதமும் இல்லை. ஆனால் பெண் எந்த அளவுக்கு உடை தரிக்கவேண்டும்? கால்களில் எந்த அளவு வரை வெளிக்காட்டவேண்டும்? என்றெல்லாம் சூடான விவாதங்கள் நடக்கின்றன. பெண்களின் உடையும், உணர்வுகளும் சர்ச்சைக்குரியதாக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட விவாதத்தில்தான் அனஸ்வரா சிக்கியிருக்கிறார். இவர் தமிழில் ராஞ்சி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். தனது போட்டோவில் கால்கள் அதிகம் கவனிக்கப்பட்டு வைரல் ஆனது பற்றி அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்.

    “செப்டம்பர் 8-ந்தேதி எனது பிறந்த நாள். கொரோனா காலகட்டம் என்பதால் நான் வீட்டிலேயே இருந்தேன். 18-வது பிறந்தநாள் என்பதால் 18 வித மான பொருட்களை எனக்கு அக்காள் ஐஸ்வர்யா பரிசளித்தாள். அதுவும் நான் அவ்வப்போது ஆசைப்பட்டு கேட்டதை எல்லாம் நினைவில் வைத்து வாங்கிக்கொடுத்தாள். அவை அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தமானவை என்பதால் ஒவ்வொன்றையும் பிரித்துப்பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். அதில் ஒன்றுதான் எனக்கு அதிக மகிழ்ச்சியை தந்த இந்த ஷார்ட்டும்-டாப்சும். மறுநாள் அதனை அணிந்துகொண்டு, எனது தோழி ஒருத்தியை அழைத்து விதவிதமாக போட்டோ எடுத்தேன். அதில் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன். அதுதான் இத்தனை களேபரத்திற்கும் காரணம்.

    எனக்கென்று தனியாக போன் கிடையாது. அம்மாவின் போனில் நான் இன்ஸ்டாகிராமினை மட்டும் பயன்படுத்துவேன். அந்த போட்டோவை பதிவிட்டுவிட்டு, நான் எனது உறவினர் ஒருவருடைய திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றுவிட்டேன். அப்போது அம்மாவின் போனுக்கு நிறைய அழைப்புகள் வந்திருக்கின்றன. சில டெலிவிஷன் சேனல்களில் இருந்தும் அழைத்திருக்கிறார்கள். அம்மா அதை முதலில் என்னிடம் சொல்லவில்லை. பிரச்சினை பெரிதான பின்புதான் என்னிடம் சொன்னார்.

    நான் பதிவிட்டிருந்த எனது போட்டோவின் கீழே மிக மோசமான கமெண்டுகள் காணப்பட்டன. சைபர் அட்டாக் என்று சொல்வார்களே அந்த அளவுக்கு அதன் விளைவுகள் இருந்தன. ஆனால் நடப்பதை எல்லாம் பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது. அதோடு குடும்பத்தினரும் எனக்கு பக்கபலமாக இருந்ததால், நான் அடுத்து கூடுதலாக இரண்டு படங்களை பதிவிட்டு துணிச்சலாக என் கருத்தையும் அதில் வெளிப்படுத்தினேன்.

    எனக்கு மேற்கத்திய உடைகள் ரொம்ப பிடிக்கும். அது என் அக்காளுக்கும் தெரியும். அக்காள் எனக்கு தேவையான சக்தியை தருகிறார். என்னை விமர்சித்து சமூகவலைத்தளத்தில் வந்த ஒவ்வொரு வார்த்தையையும் படித்து என் தந்தை சிரித்தார். எனது குடும்பத்தினர் எனக்கு தேவையான ஆடை சுதந்திரத்தை தந்திருக்கிறார்கள்” என்கிறார், அனஸ்வரா.

    ‘உங்கள் போட்டோக்களுக்கும், கருத்துக்களுக்கும் இந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?’ என்று கேட்டபோது..

    “இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னை மோசமாக விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில்தான் இரண்டாவது போட்டோவை பதிவிட்டேன். அதனால் அது ஒரு போராட்டம் போல் ஆகிவிட்டது. மலையாள திரை உலகம் முழுவதும் எனக்கு ஆதரவு தந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. வெளியே இருந்தும் நிறைய ஆதரவு கிடைத்தது. அந்த நாட்களில் எங்கள் வீட்டு போன் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. எல்லோரும் ‘தைரியமாக இரு.. நாங்கள் உடனிருக்கிறோம்’ என்று சொன்னார்கள். இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கானவர்கள் எனக்கு ஆதரவு கருத்துக்களை வெளியிட்டார்கள். ஆனாலும் சிலர் ஏன் எல்லாவற்றையும் எதிர்மறையாக பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

    “பெண்கள் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள் அல்லது காதலன் காதலியை கொல்கிறான். இந்த வன்முறைகள் எல்லாமுமே பெண்களை போகப்பொருட்களாக பார்ப்பதால்தான் ஏற்படுகின்றன. பெண்களின் கால்களை பார்க்கும்போது சிலரது சிந்தனை ஏன் மோசமாக செல்கிறது என்று தெரியவில்லை. இனி எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது. அதற்காக என்னால் முடிந்ததை எல்லாம் செய்வேன். நான் இனியும் இதுபோன்ற ஆடைகளை அணிவேன். சவுகரியம் தான் எனக்கு தேவை. மற்றவர்களின் சிந்தனையை பற்றி நான் கவலைப்படப்போவதில்லை” என்கிறார், அனஸ்வரா.

     
    Next Story
    ×