search icon
என் மலர்tooltip icon

  லைஃப்ஸ்டைல்

  அம்மா-மகள்
  X
  அம்மா-மகள்

  அம்மா-மகளும்.. அற்புத உறவும்..

  தாய்க்கும் மகளுக்கும் இடையே இடைவெளி உருவாகாமல் இருக்கவேண்டும் என்றால் மகளிடம் எதை பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்பதை தாயார் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
  தாயின் வயிற்றில் பிறந்து, மடியில் தவழ்ந்து, அவளது முந்தானையை பிடித்துக்கொண்டே அகலாமல் வளரும் மகள் பத்து வயதை தாண்டும்போது மெல்ல மெல்ல தாயிடம் இருந்து விலகுகிறாள். பெரும்பாலான வீடுகளில் அந்த விலகல் இல்லை என்றாலும் பல குடும்பங்களில் தாய்க்கும் மகளுக்கும் இடையே பெரிய இடைவெளி விழுந்துவிடுகிறது. அந்த இடைவெளி உருவாகாமல் இருக்கவேண்டும் என்றால் மகளிடம் எதை பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்பதை தாயார் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

  அம்மாவிடம் மகள் ‘என் பள்ளிக்கூட நண்பர்களில் சில மாணவர்களும் இருக்கிறார்கள். அவர்களிடமும் நான் நட்பு கொண்டிருக்கிறேன்..’ என்று சொன்னால், பெரும்பாலான அம்மாக்கள் உடனே, ‘ஏய்.. அதெல்லாம் கூடவே கூடாது. ஆண்களோடு நட்புவைப்பது நல்ல பழக்கம் இல்லை’ என்று சொல்வார்கள். அது மகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். ‘நீ ஒரு பழைய பஞ்சாங்கம். உன்னிடம் என் நட்பு பற்றி பேசியதே தப்பு’ என்பார்கள். இதுபோன்ற கருத்து வேறுபாடுகள்தான் தாய்-மகள் விலகலுக்கு காரணமாக இருக்கின்றன. அந்த விலகல் ஏற்படாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

  ‘உன்னுடன் படிக்கும் மாணவர்களோடு நீ நட்பு கொள்வதில் தப்பில்லை. ஆனால் நட்பு கொள்வது ஆணிடம் என்றாலும், பெண்ணிடம் என்றாலும் நீ தெளிவாக இருக்கவேண்டும். எல்லையோடு பழகவேண்டும். அந்த நட்பில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டாலோ, சிக்கல் ஏற்பட்டாலோ என்னிடம் மறைக்காமல் சொல்..’ என்று கூறி ஆதரவும், விழிப்புணர்வும் ஊட்டவேண்டும்.

  இப்படி தாய் சொன்னால், மகள் ‘அம்மா நமக்கு ஆண் நண்பர்களிடம் பேச சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அந்த சுதந்திரத்தை நாம் எல்லை மீறாமல் பயன்படுத்தவேண்டும்’ என்று நினைப்பாள், தாய்மீது மதிப்பும் கொள்வாள். அந்த நட்பில் எந்த சந்தேகம் ஏற்பட்டாலும், அதற்கு விடைதேடி அம்மா முன்னால் வந்து நிற்பாள்.

  தாய்க்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் இருந்தால், வேறு மாதிரியான பிரச்சினைகள் எழுகின்றன. மகள், அம்மாவிடம் ‘அம்மா நீ அவனை (அண்ணன் அல்லது தம்பியை) இஷ்டம்போல் நடந்துகொள்ள அனுமதிக்கிறாய். நினைத்த நேரம் வெளியே செல்ல அனுமதி கொடுக்கிறாய். எனக்குத்தான் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கிறாய்’ என்பாள்.

  அதற்கு பெரும்பாலான அம்மாக்கள், ‘அவன் ஆண். சைக்கிள் ஓட்டுவான்.. வண்டி ஓட்டுவான்.. என்ன வேண்டுமானாலும் செய்வான். நீ பெண், அடக்க ஒடுக்கமாக நடக்கவேண்டும்’ என்பார்கள். எல்லா பெண்களையும் இந்த பதில் எரிச்சலூட்டும். அவள் பெண்ணாக பிறந்ததை குற்றமாக சொல்வதுபோல் அமைந்துவிடும். அதற்கு பதிலாக, ‘நீ என் செல்ல மகள். அவன் என் செல்ல மகன். நான் உங்கள் இருவரிடையே ஆண், பெண் என்ற பேதம் பார்ப்பதில்லை. நான் இருவரையும் சமமாகவே பாவிக்கிறேன். சைக்கிள் ஓட்ட ஆசைப்படுகிறாயா? ஓட்டு. நீ பெண்ணாக பிறந்ததால் அடங்கி ஒடுங்கி இருக்கவேண்டியதில்லை. உன்னிடம் இருக்கும் திறமையை நீ வெளிக்காட்டு. அதற்கு தேவையான எல்லா வாய்ப்புகளையும் நான் உருவாக்கித் தருகிறேன்’ என்று கூறி ஊக்குவிக்கவேண்டும்.

  பெண்களுக்கு சில அம்மாக்கள் கண்காணிப்பு வளையம் போட்டுவிடுகிறார்கள். தங்கையை பின்தொடர்ந்து அண்ணன் கண்காணிப்பான். ‘என்னம்மா இது கொடுமை. நான் எங்கு போனாலும் இவன் என்னோடு வந்துகொண்டே இருக்கிறான். ஏதோ ஒரு போலீஸ் அதிகாரி போன்று என்னை பின்தொடர்கிறான். இது எனக்கு பிடிக்கவே இல்லை’ என்று மகள் கோபம் கொள்வாள்.

  பதிலுக்கு அம்மா, ‘அவன் உன் அண்ணன். நீ ஏதாவது தப்பு செய்தால் அவனும் சேர்ந்துதான் பாதிக்கப்படுவான். அதனால் நீ சரியான வழியில் சென்று கொண்டிருக்கவேண்டும் என்பதற்காக அவன் உன்னை பின் தொடர்கிறான். அது அவன் கடமை’ என்று பேசி, மகளின் கோபத்தை அதிகரிக்கச் செய்து விடுகிறார்கள்.

  அதற்கு பதிலாக, ‘உன் அண்ணனோ, தம்பியோ யாரும் உன்னை பின்தொடர்ந்து வந்து எந்த பலனும் இருக்கப்போவதில்லை. உன்னை உன்னால் மட்டுமே பாதுகாக்க முடியும். அதனால் நீதான் எப்போதும் விழிப்போடு இருக்கவேண்டும். உன் அண்ணன் சந்தேகத்தோடு உன்னை பின்தொடர்வதாக நீ நினைப்பது தவறு. ஒருவேளை அந்த எண்ணத்தில் அவன் இருந்திருந்தால் அது தவறு என்று அவனுக்கு நான் உணர்த்துகிறேன். நீ எப்போதும் போல் கவனமாக இரு..’ என்று தான் கூறவேண்டும்.

  இப்படி பக்குவமாக பதில் அளிக்க அம்மாக்கள் கற்றுக்கொண்டால், அம்மா-மகள் உறவு அற்புதமாகவும் ஆனந்தமாகவும் இருக்கும்.
  Next Story
  ×