search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெண்ணிற தேவதைகளை வாழ்த்துவோம்
    X
    வெண்ணிற தேவதைகளை வாழ்த்துவோம்

    செவிலியர் தினம்: வெண்ணிற தேவதைகளை வாழ்த்துவோம்

    நிஜ வாழ்க்கையில் வெண்ணிற ஆடை உடுத்திய தேவதைகள் செவிலியர்கள் தான். முதுமை கொண்ட பெற்றோரை கைத்தாங்க மறுக்கும் பிள்ளைகள் மத்தியில், அன்பாய் அரவணைக்கும் அதிசயம்.
    சினிமாக்களில் தேவதைகளை வெள்ளை நிற உடையில் பார்த்திருப்போம். ஆனால் நிஜ வாழ்க்கையில் வெண்ணிற ஆடை உடுத்திய தேவதைகள் செவிலியர்கள் தான். முதுமை கொண்ட பெற்றோரை கைத்தாங்க மறுக்கும் பிள்ளைகள் மத்தியில், அன்பாய் அரவணைக்கும் அதிசயம்.

    அதிசயத்தின் ஆணி வேர் இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் பிரான்சிஸ் தம்பதியரின் பெண் குழந்தையான பிளாரன்ஸ் நைட்டிங்கேல். இவர் தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக செவிலியர் பணியை தேர்வு செய்து அதை சேவையாக கருதியவர். அப்பணியில் அர்ப்பணிப்புடன் முழுமையாக தன்னை ஈடுபடுத்தியவர். அவரது பிறந்த தினமான மே-12 உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலத்தில் ‘நர்சிங்‘ என்று அழைக்கப்படும் வார்த்தை ‘நியுடிரிசியா’ என்ற லத்தீன் சொல்லில் இருந்து வந்ததாகும். இதற்கு உணவு மற்றும் மருந்து வகைகளை அன்புடன் நமக்கு ஊட்டி ஊக்கப்படுத்துபவர் என்று பொருள்.

    ஐக்கிய அமெரிக்காவின் அரசு சுகாதாரத் துறையைச் சேர்ந்த டொரத்தி சதர்லாண்ட் என்பவர் 1953-ம் ஆண்டு மே மாதம் 12-ந் தேதியை செவிலியர் தினமாக பிரகடனப்படுத்த வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோள் அப்போது நிராகரிக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் மே-12 செவிலியர் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    பிளாரன்ஸ் நைட்டிங்கேல் சேவையை பாராட்டி, அந்நாட்டு அரசு அவருக்கு ‘ஆர்டர் ஆப் மெரிட்’ என்ற உயரிய விருது வழங்கியது. இவ்விருதை பெற்ற முதல் பெண்மணியும் இவரே. ‘கை விளக்கு ஏந்திய காரிகை’ என்றும் மக்களால் பாராட்டப்பட்டார்.

    1853-ம் ஆண்டு அவருடைய 33 வயதில் ரஷ்யா, துருக்கி மீது படையெடுத்தது. அப்போது துருக்கிக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்சு படைகள் சென்றன. அந்த போரின்போது இந்த படைகள் காலரா, மலேரியாவால் பாதிக்கப்பட்டு, சுகாதாரமற்ற இடத்தில் யாருமே உள்ளே நுழைய முடியாத அளவில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர். அப்போது நைட்டிங்கேல், அந்த வீரர்களுக்கு சேவை செய்தார். தன்னலமற்ற இந்த மகத்தான சேவையை உலகமே பாராட்டியது.

    நர்சு தொழிலுக்கு மதிப்புமிக்க ஒரு உன்னதமான இடத்தைப் பெற்றுத் தந்த நைட்டிங்கேலை நினைவுகூரும் வகையில் உலக செவிலியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மருத்துவமனைகளில் வேலைபார்க்கும் நர்சுகளுக்கு, டாக்டர்களும், நோயாளிகளும் வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள்.

    கொரோனா தாக்கத்தால் மக்கள் அனைவரும் பயத்தில் வீடுகளுக்குள்ளே முடங்கிய நிலையில், குடும்ப உறவுகளை மறந்து, தூக்கம் தொலைத்து கொரோனாவுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடி வருகிறார்கள். அவர்களின் கடின உழைப்பு, இருளில் தவிக்கும் மக்களுக்கு கலங்கரை விளக்கம் எனலாம். அவர்களின் சேவையை இந்நாளில் நினைவு கூர்ந்து அனைவரும் வாழ்த்துகளை தெரிவிப்போம்.
    Next Story
    ×