என் மலர்

  லைஃப்ஸ்டைல்

  கோபத்தை தவிர்ப்போம், குறையின்றி வாழ்வோம்...
  X
  கோபத்தை தவிர்ப்போம், குறையின்றி வாழ்வோம்...

  கோபத்தை தவிர்ப்போம், குறையின்றி வாழ்வோம்...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  “கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை” என புத்தர் மொழிந்த வார்த்தைகளில் உள்ள பொருள், மருத்துவ ஆழமிக்கது.
  இன்று கோபம் இல்லாமல் பெருந்தன்மையோடு வாழ்வதாக நினைத்து மனதில் கோபத்தை அடக்கி வைத்துக்கொண்டு சிலரும், கோபம் இருந்தால் வீரம் என்று நினைத்துக்கொண்டு அதை எவ்வாறு வெளிப்படுத்துவது என்று தெரியாமல் மிருகத்தனமாக பலரும் நடந்துகொள்கிறார்கள். வெகு சிலரே கோபத்தை முறையாக கையாளுகின்றனர்.

  இக்காலக்கட்டத்தில் கோபம் வருவதற்கான காரணங்களாக அவசர அவசரமாக வேலைக்கு செல்வது, மன அழுத்தம், குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை, பணப்பற்றாக்குறை, குடும்பத்தாரிடையே சகிப்புத்தன்மையின்மை, காதல்தோல்வி, மதுவிற்கு அடிமையாவது, அதீத சாதி மற்றும் மதவெறி போன்றவற்றை கூறலாம்.

  சமூகப் பார்வையில் கோபத்தை நோக்கும்போது அதன் பாதிப்புகளாக கொலை, பழி வாங்கும் எண்ணம், மனம் நோகும்படி பேசுதல், அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணுதல், விவாகரத்து வழக்கு, அவதூறு பரப்புதல், தீய எண்ணம், பொறாமை, வன்முறை, சாதி மற்றும் மதக்கலவரம், நாடுகளுக்கு இடையேயான போர் போன்றவை உருவாகுகிறது.

  மருத்துவ பார்வையில் நோக்கும்போது கோபம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட பல கொடிய நோய்களை உருவாக்குவதாக அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கோபம் கொள்ளும்போது அட்ரீனலின், நார்அட்ரீனலின் மற்றும் கார்டிசால் போன்ற ஹார்மோன்கள் உடலில் மிகுதியான அளவில் சுரந்து உடல் இயக்கத்தை பாதிக்கிறது. தலைவலி, மன அழுத்தம், செரிமான பிரச்சினை, குழந்தையின்மை, சர்க்கரை வியாதி, சுவாசக்கோளாறு, தூக்கமின்மை, நோய் எதிர்ப்புச்சக்தி மண்டலம் வலுவிழத்தல், தோல்வியாதி, உயர் ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம் போன்ற நோய்களை உருவாக்கும்.

  “கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை” என புத்தர் மொழிந்த வார்த்தைகளில் உள்ள பொருள், மருத்துவ ஆழமிக்கது. பத்து நொடிக்கு நீடிக்கும் கோபம் 8 முதல் 10 மணி நேரம் வரை உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். மூளையில் உள்ள அமிக்டாலா என்ற பகுதி பயம், கோபம் போன்ற உணர்ச்சி சார்ந்த உணர்வுகளையும், ப்ரீகார்டெக்ஸ் என்ற பகுதி முடிவெடுத்தல் போன்ற அறிவு சார்ந்த உணர்வுகளையும் தீர்மானிக்கிறது.

  கோபமாக உள்ளபோது ப்ரீகார்டெக்ஸ் பகுதி வேலை செய்யும் திறனை இழந்து விடுவதால் நாம் சிந்திக்கும் திறனை இழந்து விடுகிறோம். உதாரணமாக திரைப்படங்களில் வரும் சம்பவங்கள் கற்பனை என்று ப்ரீகார்டெக்ஸ் பகுதிக்கு தெரிந்திருந்தாலும் நாம் வில்லனைப் பார்க்கும்போது, கோபம் அல்லது பயம் கொள்ள வைத்து சிறிது நேரம் சிந்திக்கும் சக்தியை இழக்க வைக்கிறது அமிக்டாலா பகுதி. கோபம் கொள்ளும்போதும் இது போன்ற நிகழ்வே நடக்கிறது. இதைத்தான் ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்ற பழமொழி உணர்த்துகிறது. ‘வேக் போரெஸ்ட்’ பல்கலைக்கழக அறிவியலாளர்கள் நடத்திய ஆய்வில் கோபம் கொண்ட இரண்டு மணி நேரத்தில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கும், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கும் அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளனர்.

  இதைத்தான் வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வெகுளாமை என்ற அதிகாரத்தில்

  “தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

  தன்னையே கொல்லும் சினம்”

  என குறிப்பிடுகிறார்.

  ஆண்கள், பெண்களை விட அதிகமாக கோபப்படுபவர்களாக உள்ளனர். இதயநோய், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் ஆண்களுக்கே மிகுதியான அளவில் வருகின்றன. கோபப்படுவதை விட அதைக் கட்டுக்குள் வைக்கத் தெரியாதவர்களே பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்; மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். அடிக்கடி கோபம் கொள்ளும்போது உடல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும்.

  கோபமில்லாமல் மகிழ்ச்சியாக வாழ பேராசை, மிகுந்த எதிர்பார்ப்பு, ஒப்புமை போன்றவற்றை விட்டொழிக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த தண்ணீர் அருந்தலாம், கண்களை மூடிக்கொண்டு ஒன்று முதல் பத்து வரை எண்ணலாம், கண்ணாடியில் தன் முகத்தை பார்க்கலாம். ஆழ்ந்த சுவாசம், பேசுவதை தவிர்த்தல், சூழ்நிலைகளை மாற்றுதல் போன்றவையும் கோபத்தை கட்டுப்படுத்தும். யோகாசனம், தியானம், உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றிலும் கவனம் செலுத்தலாம். ஓவியம், நடனம், பாட்டு போன்ற கலைகள் மூலமும் கோபத்தை மடை மாற்றலாம்.

  கோபத்திற்கான காரணத்தை கண்டறிந்து சரியான அணுகுமுறையை தேர்ந்தெடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு கோபத்தை கையாளப் பயிற்சி அளிப்பதன் மூலம் எதிர்காலத்தில் வீட்டிற்கும், நாட்டிற்கும் பயனளிக்கக்கூடிய வகையில் மனிதநேய மிக்கவர்களாக உருவாவார்கள் என்பதில் ஐயமில்லை. கோபத்தை குறைக்க காபி, பதப்படுத்தப்பட்ட உணவு, மது ஆகியவற்றை தவிர்க்கலாம். சாக்லேட், தேநீர் மற்றும் இயற்கை உணவுகளை உண்ணலாம்.

  கோபத்தை பற்றிய மருத்துவ உண்மைகளைப் புரிந்துகொண்டு நாம் கோபத்தை கட்டுப்படுத்தி வாழப் பழகிக்கொண்டு நோயில்லா வாழ்வு வாழ்வோமாக.

  முனைவர் கி.மாசிலாமணி,

  பேராசிரியர்,

  தனியார் மருந்தாக்கியல் கல்லூரி, சென்னை.
  Next Story
  ×