search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மகளின் தடுமாறும் வயது தவிக்குது தாய் மனது
    X
    மகளின் தடுமாறும் வயது தவிக்குது தாய் மனது

    மகளின் தடுமாறும் வயது தவிக்குது தாய் மனது

    தாய்மார்கள் பொதுவான சில விஷயங்களை நினைவில்கொள்ள வேண்டும். மகளிடம் பக்குவமாக அணுகவேண்டும். அவள் மீது அன்பும், அளவற்ற நம்பிக்கையும் வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
    கல்லூரி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பெண் ஒருவர், தனது மகளை பற்றி கவலையுடன் சொன்ன விஷயம் இது:

    ‘என் மகளின் கைகளில் இப்போது அடிக்கடி பரிசுப்பொருட்கள் புழங்குகிறது. சந்தேகப்பட்டு, அவள் இல்லாத நேரத்தில் அவளது ‘பேக்கை’ சோதனை போட்டேன். உள்ளே ஒரு செல்போன் இருந்தது. அது யார் வாங்கிக்கொடுத்தது என்றே தெரியவில்லை. என்ன விபரீதம் நடக்கப்போகிறதோ!’-என்று பயந்துபோய் கூறினார்.

    சுயதொழில் செய்து மகளை வளர்த்துக்கொண்டிருக்கும் தாயார் வருத்தத்தோடு பகிர்ந்துகொண்ட விஷயம் இது:

    ‘என் மகள் யாரோ ஒரு இளைஞனை காதலித்துக்கொண்டிருப்பதாகவும், அவ்வப்போது வகுப்புக்கு செல்லாமல் ‘கட்’ அடித்துவிட்டு அவனோடு ஊர் சுற்றுவதாகவும் கேள்விப்பட்டேன். அடுத்து என்ன நடக்குமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது’ என்று வேதனையுடன் சொன்னார்.

    ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பெண் ஒருவர் கண்ணீரோடு சொன்னது:

    ‘என் மகள் திருமணமானவர்கள் பார்க்கக்கூடிய மோசமான பாலியல் காட்சிகளை செல்போனில் பார்த்து பொழுதுபோக்குகிறாள். எனக்கு அதை பார்த்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது. அவளை நான் திருத்துவது எப்படி?’ என்று கேட்டார்.

    இந்த மூன்று விஷயங்களையும் நான் குறிப்பிட காரணம், இந்த தாய்மார்கள் மூவருமே 35 முதல் 40 வயதிற்கு உள்பட்டவர்கள். இவர்களது மகள்கள் மூவரும் பள்ளி இறுதி வகுப்பு படிப்பவர்கள். மூவருமே பெற்றோரால் செல்லமாக வளர்க்கப்படும் மகள்கள்!

    இந்த மாதிரியான பிரச்சினைகள், இந்த மூன்று தாய்மார்களுக்கு மட்டும் தலைவலியை தரவில்லை. நிறைய தாய்மார்கள் இதுபோன்ற நெருடலான பிரச்சினைகள் உருவாகும்போது, அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமலே தடுமாறிப்போகிறார்கள். ‘வேறு எந்த வீட்டிலும் மகள்களால் இப்படிப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. தமது வீட்டில்தான் இப்படிப்பட்ட சம்பவம் நடந்துவிட்டது!’ என்று தடுமாறி, மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.

    முதலில் தாய்மார்கள் தடுமாற்றத்தை கைவிடவேண்டும். ‘நேற்று எத்தனையோ குடும்பங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இன்று நம் வீட்டில் நடக்கிறது. நாளை வேறு குடும்பங்களிலும் நடக்கும். ஆணையும், பெண்ணையும் கொண்ட மனித சமுதாயம் இருக்கும்வரை இதுபோன்ற பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும். அதனால் தடுமாற்றம் கொள்ளாமல், தன்னிலையை இழக்காமல் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது பற்றி யோசிப்போம்’ என்ற பக்குவநிலைக்கு தாய்மார்கள் வரவேண்டும்.

    இப்படிப்பட்ட தெளிவான மனநிலைக்கு வந்தால்தான் மகள்களால் உருவாகும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

    தாய்மார்கள் பொதுவான சில விஷயங்களை நினைவில்கொள்ள வேண்டும். உங்கள் மகளுக்கு 16 அல்லது 17 வயது. அதாவது உங்கள் வயதில் பாதியை கூட அவர்கள் தொட்டிருக்கவில்லை. அதனால், அவர்களிடம் உங்களுக்குரிய அறிவு, பக்குவம், அனுபவம் போன்றவைகளை எதிர்பார்க்காதீர்கள். அவர்களிடம் அந்த இளம் வயதிற்குரிய தடுமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும்.

    16,17 வயதுகளில் சிறுமிகளின் பாலின சுரப்பிகள் வேலை செய்யத்தொடங்கிவிடுகிறது. அவை சுரக்கும் ஹார்மோன்கள் அவர்களது உடலில் பெரும் ரசாயன மாற்றங்களை உருவாக்கும். எதிர்பாலின ஈர்ப்பும், வேட்கையும், இனம்புரியாத பரவசங்களும், ‘எதுவானாலும் அதையும் செய்து பார்ப்போமே’ என்ற உந்துதலையும் உருவாக்குவது இயல்பு. இதில் கட்டுப்பாடுகள் இல்லாமல் போகும்போதுதான், தாய்மார்கள் கவலைப்படும் அளவுக்குரிய பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. அதனால் மகள்களை குறை சொல்லாமல், இந்த மூன்று சம்பவங்கள்போல் நடக்கும் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது என்று பார்ப்போம்.

    முதல் சம்பவம்! மகளிடம் அடிக்கடி பரிசுப்பொருட்கள் புழங்குகிறது. அவளிடமிருந்து செல்போனும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது!

    மகளின் தடுமாறும் வயது தவிக்குது தாய் மனது

    இது பெற்றோர் உடனடியாக கவனிக்கவேண்டிய பிரச்சினை. காதல்வசப்படுதலை போன்றில்லாமல், அதைவிடவும் ஆழமான சம்பவம் இது. அதனால் பரிசுப்பொருட்களின் பின்னணியை ஆராயவேண்டும். அவளது பள்ளிப்பருவ வாழ்க்கையில் ஏதோ ஒரு தவறு நடந்துகொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் இன்னும் சில மாணவிகளோ, மாணவர்களோ இருக்கலாம். அவர்களால் இவள் வேறு ஏதாவது பிரச்சினைகளில் சிக்கி பெற்றோரிடம்கூட சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருக்கலாம்.

    அதனால் மகளிடம் பக்குவமாக அணுகவேண்டும். அவள் மீது அன்பும், அளவற்ற நம்பிக்கையும் வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அவளை சரியான முறையில் வழி நடத்த வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதால், மறைக்காமல் உண்மையை சொல்லும்படி கூறவேண்டும். செல்போன் போன்ற பரிசுகளை தந்து கொண்டிருப்பது தனி நபரா? ஒரு குழுவா? என்ற உண்மையை சொல்லச்செய்ய வேண்டும். அதற்கு மிரட்டலை கையாளாமல், அன்பு வழியை பிரயோகிக்கவேண்டும். சூழ்நிலைக்குதக்கபடி இதில் முடிவெடுக்கவேண்டியதிருக்கும். தேவைப்பட்டால் போலீஸ் உதவியை நாட வேண்டும். மகளுக்காக மனோதத்துவ நிபுணரின் ஆலோசனையையும் பெறவேண்டும்.

    இரண்டாவது சம்பவத்தில், பள்ளி வகுப்பை ‘கட்’ அடித்துவிட்டு மகள் வெளியே செல்வதற்கு காதல்தான் காரணம் என்றால் ‘பள்ளிப்பருவத்தில் அது தேவையில்லை’ என்பதை அழுத்தம் திருத்தமாக உணர்த்த வேண்டும். அதற்காக மகளை அடித்து மிரட்ட வேண்டியதில்லை. இந்த பருவத்தில் இனக்கவர்ச்சி ஈர்ப்பு இயற்கையானதுதான் என்றாலும், அவர்களிடம் முடிவெடுக்கும் திறன் மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் அவள் மதிக்கும் ஒருவர் மூலம் அவளது எதிர்காலத்தை புரியவையுங்கள். ‘பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவத்தை கடந்த பின்பு காதலிக்கலாம். அதுதான் பக்குவமான காதல். அத்தகைய காதலுக்கு நாங்களும் துணை இருப்போம்’ என்று கூறி, படிப்பில் கவனம் செலுத்தச்செய்யவேண்டும்.

    (அடிப்பது, மிரட்டுவது, தனி அறையில் அடைத்து வைப்பது, அவசர கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்வது போன்றவை மோசமான எதிர்விளைவுகளை உருவாக்கிவிடும். ஆத்திரமூட்டும் அத்தகைய தவறுகளை செய்யாதீர்கள்)

    மூன்றாவது சம்பவம் பாலியல் ஈர்ப்பு காரணமாக உருவாகியிருக்கிறது. ‘பாலியல் உறவுக்காட்சிகளில் என்னதான் இருக்கிறது?’ என்பதை காணும் ஆர்வத்தில் அதில் ஈடுபட்டிருக்கலாம். அதனால் இதை ஒரு குற்ற சம்பவம்போல் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. அதே நேரத்தில், அதுபோன்ற காட்சிகளை தொடர்ந்து பார்க்கவும் அனுமதிக்க வேண்டியதில்லை. மகள் அதுபோன்ற காட்சிகளை பார்ப்பது தனக்கு தெரியும் என்பதை தாய் உணர்த்தும் விதத்தில், ‘நீ இப்போதே அதுபோன்ற காட்சி களை பார்க்கவேண்டாம். பார்த்தால் மனக்குழப்பம் ஏற்பட்டு கவனம் சிதறும்’ என்று கூறி, அவள் பார்க்கத்தகுந்த இணைய தளங்களை பரிந்துரைக்கலாம். பெண்கள் பார்க்கக்கூடிய விஷயங்கள் இணையதளங்களில் கொட்டிக்கிடப்பதை அவளுக்கு புரியவைக்கலாம்.

    வளரிளம் பருவத்தில் பெண்களின் உடலுக்கு புதுவித சக்தியும், மனதுக்கு இனம்புரியாத பரவச உணர்வுகளும் ஏற்படுகின்றன. அப்போது அவர்களது உடலும், மனதும் அதிக ஆற்றலுடன் புத்துணர்வு கொள்கிறது. வித்தியாசமான சிந்தனைகளும் எழுகின்றன. இந்த காலகட்டத்தில் அவர்களிடம் இருக்கும் ஆற்றலை ஒருமுகப்படுத்த அவர்களை விளையாட்டு களிலோ, கலையிலோ திசை திருப்பிவிட வேண்டும். அதில் ஆர்வம் ஏற்பட்டுவிட்டால் அதை சுற்றியே அவர்கள் சிந்தனை செல்லும். தனது சிந்தனையையும் ஆற்றலையும் மேம்படுத்தி அந்த துறையில் சாதிக்க முனைவார்கள். யோகா, தியானத்தில் ஈடுபடுத்தினால் அவர்கள் புதுவிதமான அனுபவங்களை பெறுவார்கள். அது அவர்களை நல்வழிப்படுத்தும்.

    மேற்கண்ட மூன்று சம்பவங்களிலும் தொடர்புடைய மாணவி களிடம் பேசியபோது, ‘பெற்றோர்கள் எந்நேரமும் படி.. படி.. என்பார்கள். அதனால் வாழ்க்கையே போரடித்துவிட்டது. புதிதாக வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்று தேடினோம். வாழ்க்கையை சுவாரசியப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு மாறுதலுக்காக இதுபோன்ற நட்பு வட்டத்திலும், பழக்கத்திலும் ஈடுபட்டோம்’ என்றார்கள். பக்குவமான ஆலோசனைகளுக்கு பிறகு தாங்கள் செல்வது தவறான பாதை என்பதை உணர்ந்து, அதில் இருந்து விலக முன்வந்தார்கள்!

    தாய்மார்களே புரிந்துகொள்ளுங்கள்! உங்கள் மகள்களை மனதறிந்து வளருங்கள். மனதறிந்து வளர்த்தால் மட்டுமே அவர்களது வாழ்க்கை நிலை உயரும்.

    - விஜயலட்சுமி பந்தையன்.
    Next Story
    ×